tamilnadu

img

இந்நாள் மே 26 இதற்கு முன்னால்

1938 - அமெரிக்காவில் இருப்பதிலேயே ‘மிகவும் அமெரிக்க விரோதமானது இதுதான்’ என்று 1959இல் அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ட்ரூமன் குறிப்பிட்ட, ‘அமெரிக்க விரோத செயல்பாடுகள் நாடாளுமன்றக்குழு’ உருவானது. தங்கள் நிறுவனத்தின் நலன்களை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்படும் ஒரு வணிக நிறுவனம் போலவே எல்லாப் பிரச்சனைகளையும் அணுகிவந்த அமெரிக்காவை, மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது சோவியத் புரட்சிதான். தொழிலாளி வர்க்கத்தின் கையில் அதிகாரம் செல்வது என்பதை ஒரு வணிக நிறுவனம் வேறு எப்படிப் பார்க்க முடியும்? அதனால், அமெரிக்க வரலாற்றிலேயே அதிகம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றால், தன் நாட்டுத் தொழிலாளர்களைக் கம்யூனிசம் ஈர்த்துவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள்தான்.

இந்தக் குழுவுக்கான முதல் முன்னோடி, 1918இல் உருவாக்கப்பட்ட ஓவர்மேன் குழு என்பதே. முதல் உலகப்போர்க் காலத்தில், அமெரிக்க மது உற்பத்தித்துறையில் காணப்பட்ட, ஜெர்மன் ஆதரவு உணர்வினைக் கட்டுப்படுத்துவதுதான் இதன் நோக்கமாக இருந்தது. ரஷ்யாவின் ‘ஆட்சியையே’ தொழிலாளர்கள் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்திகள், போர் முடிந்தபின்னரே அதிகம் பரவி, தொழிலாளர்களிடையே எழுச்சி ஏற்படத் தொடங்கியது. உண்மையில் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களைவிட, அமெரிக்க அரசு அச்சத்தில் கற்பனை செய்துகொண்டதுதான் அதிகம் என்கிற நிலையில், அவற்றை அடக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் (முதல்)சிவப்புத் தழும்பு என்றழைக்கப்படுகின்றன.

(எதிர்ப்பவர்களையெல்லாம் தேசத்துரோகிகள், சோவியத் உளவாளிகள் என்று குற்றம்சாட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர் மெக்-கார்த்தியின் கோட்பாடுகளையொட்டி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இரண்டாம் சிவப்புத் தழும்பு என்றழைக்கப்படுகின்றன. ‘ஆண்ட்டி இண்டியன்’ நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) இதனால் ஓவர்மேன் குழுவின் முதன்மைப் பணியாக, கம்யூனிச ஆதரவாளர்களைக் கண்டுபிடிப்பதும், ஒடுக்குவதும் ஆனது. 1930இல் ஃபிஷ் குழு, 1934இல் மெக்-கார்மிக்-டிக்ஸ்டெய்ன் குழு ஆகியவற்றைத் தொடர்ந்து, 1938இல் உருவாக்கப்பட்ட அமெரிக்க விரோத செயல்பாடுகள் குழு, 1945இல் நிரந்தரக் குழுவாக்கப்பட்டது. கம்யூனிச அனுதாபிகள் என்ற பெயரில் கலைஞர்களை (ஹாலிவுட் 10) கருப்புப் பட்டியலிட்டது உள்ளிட்டு, இக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், ‘கம்யூனிசம் மட்டுமே அமெரிக்க விரோதம்’ என்று வரையறுத்துவிடும் வகையில்தான் இருந்தன.

;