tamilnadu

img

தடுக்கக் கூடிய நோயும் அதன் தடுப்பு முறையும்

மனித வாழ்க்கையில் சிறப்பான அம்சம் நோயற்ற வாழ்க்கையே யாகும் எவ்வளவுதான் செல்வமும் செழிப்பும், பெயரும், புகழும் இருந்தாலும் ஆரோக்கியமான வாழ்க்கையில்லாவிட்டால் பெரும்பாலும் மனிதனுக்குக் கிடைப்பது துன்பமும் துயரமுமே. நோய்களில் பெரும்பாலானவை கவனக்குறைவால்தான் ஏற்படுகின்றன என்பது மருத்துவர்கள் கண்ட உண்மை. ஒரு மனிதன் மேற்கொள்ள வேண்டிய சாதாரணமான தடுப்பு முறைகளைக் கைக்கொள்ளாததால்தான் பெரும் நோய்கள் ஏற்பட்டு அவனைக் கவலைக்கு உள்ளாக்குகின்றன. கவனக்குறைவு, சிறு-சிறு விஷயங்களில் அசட்டையாக இருத்தல் ஆகியவை பெரும் நோய்களுக்கு அடிப்படையாக அமைந்து, மனிதனுக்கு உடல் துன்பத்தையும், பணச்செலவையும் ஏற்படுத்துகின்றன.

‘பத்து நாட்களுக்கு முன்பு காலில் முள் தைத்தது, முள்ளை எடுத்துவிட்டேன். இப்போது கழுத்து விறைப்பாக இருக்கிறது. வாய் திறக்கவோ, உணவு விழுங்கவோ முடியாது துன்பப்படுகிறேன்’ என்று ஒருவர் கூறுவாரேயானால் அவர் ‘டெட்டனஸ்’ என்று சொல்லப்படும் வாய்ப்பூட்டு நோய்க்கு இரையாகியிருக்கிறார் என்று பொருள். முள் தைப்பது என்பது சாதாரணம்தான். ஆனால் முள் தைத்ததன் வாயிலாகத் தெருப்புழுதியில் உள்ள “டெட்டனஸ்” என்ற கிருமி நரம்பைத் தாக்கி இந்நோயை விளைவித்துள்ளது. காலில் செருப்புப் போட்டிருந்தால் முள் தைத்திருக்குமா? செருப்புப் போடவில்லை என்ற சிறு கவனக்குறைவு பெரும் துன்பத்திற்கு வித்தாகிவிட்டது. சிராய்ப்பு மற்றும் காயங்களுக்கு மாட்டின் சாணத்தைத் தடவுவது நம்மில் சிலரிடையே உள்ள பழக்கம். சாணம் காரணமாகவும்‘டெட்டனஸ்’ (Tetanus) நோய் பரவலாம். தெருவில் உள்ள கழிவுப் பொருள்களில் காணப்படும் இக்கிருமிகள் மனித உடலில் உள்ள காயங்களின் மூலம் உள்ளே சென்று இந்நோயை உண்டாக்குகிறது. இந்நோய், பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடியைச் சுகாதாரமாக வெட்டிவிடாததாலும், கருக்கலைப்புக்குச் சுத்தமான கருவிகளைப் பயன்படுத்தாது குச்சி, கம்பி முதலியவைகளைப் பயன்படுத்துவதாலும் பூச்சிப்பல், சீழ்வழியும் காது போன்றவை மூலமாகவும் உண்டாக வாய்ப்பு உண்டு. அடுத்ததாக, ‘டிப்திரியா’ என்ற நோயை எடுத்துக் கொள்வோம். இதைத் ‘தொண்டை அடைப்பான்’ என்று கூறுவார்கள். பிறந்த குழந்தைக்கு இந்நோய் வருவதில்லை; ஏன் என்றால் அப்பொழுதுதாயின் நோய் எதிர்ப்புத் தன்மை குழந்தைக்கும் இருக்கிறது. பிறகு, அது குறையக் குறைய சுமார் 3 வயதில் இருந்து 5 வயது வரை இந்நோய் அதிகமாகி வருகிறது.

குழந்தைக்கு முதலில் இலேசாகக் காய்ச்சல் வரும். தொண்டைக் கம்மல், ஆகாரம் தங்காமல் வாந்தி, மூச்சுவிடச் சிரமம் ஆகியவை ஏற்படும். உள்நாக்கின் மேலே ஒருவித வெள்ளைப்படை காணப்படும். குரல்வளை வீங்கி மூச்சுக் குழாய் அடைபட்டு இரைப்புடன் மூச்சு வெளிவரும். சரியான முறையில் சிகிச்சை செய்யாவிட்டால் இந்நோய் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்நோயைக் குணப்படுத்தும் அளவுக்கு இன்று மருத்துவ சிகிச்சை வளர்ந்துள்ளது என்றாலும் இந்நோய்க்கு அடிப்படைக் காரணம் குழந்தைக்குச் சிறு வயதிலேயே டிபிடி என்ற முத்தடுப்பு ஊசியைப் போடாததே ஆகும். பிறந்த குழந்தைக்குக் காலாகாலத்தில் போட வேண்டிய தடுப்பு ஊசி போடததால் இக்கொடிய வியாதி வருகிறது. அப்படி வியாதி வந்த குழந்தைகளுக்குப் பென்சிலின், எரிதிரேமைசின், டிப்தீரியா எதிர்ப்பு ஊசி ஆகிய மருந்துகளைக் கொடுத்து இந்த நோயைக் குணப்படுத்துவது மருத்துவர்கள் வழக்கம். இந்நோய் வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. இனி, கக்குவான் என்ற நோய் பற்றிக் காண்போம். இந்த நோய் காணப்பட்ட குழந்தைக்கு நெஞ்சை உள்ளிழுக்கும் சத்தத்தோடு கூடிய கடுமையான இருமல் இருக்கும். மூச்சுக் குழல் அழற்சி, நிமோனியாக் காய்ச்சல், காதில் சீழ் வருதல், கண்ணில் நீர் வருதல், இரத்தல் கட்டுதல் முதலியவை ஏற்பட்டு உயிருக்கே ஊறுவிளைய நேரிடலாம்.

மேலும் இந்நோய் வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. இந்நோய் வாய்ப்பட்ட குழந்தைகளிடம் உள்ள நோய்க்கிருமிகள் பேசும்பொழுதும், தும்மும்பொழுதும், இருமும்பொழுதும் பக்கத்தில் உள்ள, குழந்தைகளை உடன் தாக்கும் தன்மையுடையது. பெண் குழந்தைகளுக்கே இந்நோய் அதிகம் வருகிறது. இந்நோய்த் தடுப்பு முறையாக, அந்த நோயுற்ற குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. மேலும் வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுடனும் சேராமல் பார்த்துக் கொளள் வேண்டும்.மேற்கூறிய இம்மூன்று நோய்களும் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க டிரிப்பில் ஆன்டிஜன் என்ற முத்தடுப்பு ஊசியைப் போட வேண்டும். இந்த ஊசியை முறையாகக் குழந்தை பிறந்த மூன்றாவது நான்காவது, பத்தாவது, மாதங்களில் 5வது வயதிலும் அவசியம் போட வேண்டும். இவ்வாறு போட்டுவிட்டால் குழந்தைகளை டிப்திரியா, கக்குவான், டெட்டனஸ் ஆகியவற்றிலிருந்து தடுக்க முடியும் என்பது நிச்சயம். முன்னெச்சரிகையாகத் தடுக்கக்கூடிய நோய்களில் இளம் பிள்ளைவாதமும் ஒன்று. நோய் உள்ளவரின் கோழை, மலம் ஆகியவற்றின் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்நோய் அதிகமாக வருகிறது. இதில் மூன்று வகை உண்டு. காய்ச்சலோடு உடம்பு வலியையும் உண்டாக்குவது ஒரு வகை. தலைவலி, காய்ச்சலோடு தலை விரைப்பையும், முதுகு விறைப்பையும் ஏறபடுத்துவது இன்னொரு வகை.

மூன்றாவது வகை மேற்கூறியவைகளோடு கை, கால்களைச் செயலிழக்கச் செய்து விடும் கடுமை வாய்ந்தது. இந்நோயைத் தடுக்க ‘சால்பின்’ என்ற சொட்டு மருந்தை ‘டிரிப்பில் ஆன்டிஜன்’ ஊசிபோடும் காலத்திலேயே குழந்தையின் வாயின் வழியே உள்ளுக்குள் கொடுத்துவிட வேண்டும். மருந்து கொடுத்த ஒரு மணி நேரம் பால் கொடுக்காது இருந்தால் இம்மருந்தின் தன்மை பாதிக்காது. நோய் கண்ட குழந்தையை மற்ற குழந்தைகளுடன் சேரவிடாமல் செய்வதால் இந்நோய் மற்ற குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். ‘கொடுமை வாய்ந்த பெரியம்மை நோயை விரட்டி விட்டோம். மறுபடியும் வந்துவிடாமல் இருப்பதற்கு நம்நாட்டில் எங்காவது ‘பெரியம்மை நோய் கண்டால் முதலில் கூறுகிறவர்களுக்கு ரூபாய் 1,000 பரிசு என்ற அறிவிப்பைக் காண்கிறோம். இந்நோய் சுரம், கண்வலி, கண்ணில் பூ விழுதல், கண் பார்வை இழப்பு, அழற்சி, இருதயப் பழுது ஆகியவற்றோடு மாறாத வடுக்களையும் ஏற்படுத்தக்கூடும். இந்நோய் தடுக்கக்கூடியதே. தடுத்துவிட்டோம். கவனம் தேவை. கவனக்குறைவு ஏற்பட்டால் மீண்டும் தொல்லைக்கு ஆளாகலாம். ஆகவே குழந்தை பிறந்தவுடன் அம்மை வைத்துக் கொள்வது மிக மிகஅவசியம். வெளிநாட்டிலிருநது வருகிறவர்களும், வெளிநாட்டிற்குச் செல்பவர்களும் அம்மை வைத்துக் கொள்வது என்பது தடுப்புமுறைகளைக் கைக்கொள்ள வேண்டிய அவசியத்தையொட்டி ஏற்படுத்தப்பட்ட சட்டமேயாகும்.

பொதுவாக மக்களுக்கு எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் வர வேண்டும். நோய் எதிர்ப்புத் தன்மையை உடலில் பெறுவதன் மூலம் உயிரைக் குடிக்கும் அல்லது உருவத்தை குலைக்கும், அம்மையையும், உடலைக் குறைக்கும் இளம்பிள்ளை வாதத்தையும், மாதக் கணக்கில் இருமல் உண்டாக்கும் சுக்குவானையும் மற்றும் உயிரைக் குடிக்கும் டெட்டனஸ், டிப்தீரியா போன்ற வியாதிகளையும் நாட்டைவிட்டு அகற்றி நாம் நல்வாழ்வு பெற முடியும் என்பது திண்ணம். கவனத்தோடு காலா காலத்தில் போடப்படும் இந்தத் தடுப்பு ஊசிகளுக்கும் மற்ற மருந்துகளுக்கும் செலவு குறைவுதான். இச்செலவை எண்ணுவதோ, அல்லது கவனக்குறை வாக இந்தத் தடுப்பு முறைகளைக் கைகொள்ளாமல் இருப்பதோ பெரும் துன்பத்திற்கு அடிகோலுவ தாகும். ஆகவே செய்ய வேண்டிய தடுப்பு முறைகளைச் செம்மையாகச் செய்து நாமும் நம்நாட்டு மக்களும் நல்வாழ்வு வாழ்வோமாக.

தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1

;