tamilnadu

img

சிந்து அசத்தல்... சாய்னா அவுட்

ஹாங்காங் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் யோனெக்ஸ் சன்ரைஸ் (YONEX SUN RAISE) ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர்  நடைபெற்று வருகிறது. 

ஆடவர் ஒற்றையர் 

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனோய் சீனாவின் யு சியாங்கை 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.  முன்னதாக செவ்வாயன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகின் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டா மொமோடாவை எதிர்கொண்டார். இருவருமே அதிரடிக்கு  பெயர் பெற்றவர்கள் என்பதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக கென்டா மொமோடா திடீரென விலக அதிர்ஷ்ட வாய்ப்புடன்  ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

மகளிர் ஒற்றையர் 

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பார்ம் பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து கொரியாவின் கிம் ஹாவை 21-15, 21-16 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் சீனாவின் காய் யான்னிடம் 13-21, 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.  

மகளிர் இரட்டையர் 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி, டென்மார்க்கின் மாய்கன் - சாரா ஜோடியை எதிர்கொண்டது. வழக்கம் போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 13-21, 12-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் ஜோடியிடம் வீழ்ந்தது.

கலப்பு இரட்டையர் 

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா சார்பில்  களமிறங்கிய அஸ்வினி பொன்னப்பா - ராங்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் நிபிட்போன் -  சாவித்ரி ஜோடியை 16-21, 21-19, 21-17 என்ற கணக்கில் வெற்றியை ருசித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.




 

;