பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் பட்டா மாற்றம் செய்து தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மங்கூன் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சிறுமலைக்குன்றுகள் சூழ அமைந்துள்ள இந்த பள்ளிக்கு அருகில் பல ஏக்கர் நிலம் பள்ளியின் தரம் உயர்த்துதல் மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் உடந்தையுடன் தனியாருக்கும், செல்வந்தர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி, தனியாருக்கு பட்டா செய்து கொடுக்கப்பட்ட அரசு நிலத்தை கைப்பற்றி மீட்டு, பள்ளியின் விரிவாக்கத்திற்காக வழங்க வேண்டும் என்று கோரி, மங்கூனைச் சேர்ந்த வேல்முருகன், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பினார். இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்திடுமாறு, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பெரம்பலூர் மாவட்ட வருவாய்த் துறையினருக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் கோட்டாட்சியர் சுப்பையா, ஆலத்தூர் தாசில்தார் ஷாஜகான், சிறுவயலூருக்கு சென்று மங்கூன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அருகே கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டிடங்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.