tamilnadu

2 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று மறியலில் ஈடுபடுகிறார்கள்

பெரம்பலூர், ஜன.7-  பாஜக ஆட்சி கடைப்பிடித்து வரும் முதலாளித்துவ தாராளவாத கொள்கையாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும், பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்காலும் ஜி.எஸ்.டி வரிக்கொடுமையாலும் அனைத்து தொழில்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 50000 சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனை அமைச்சரே சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.  பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொழில்களும் பொதுத்துறை நிறுவனங்களும், ஆட்டோமொபைல் தொழில்களும், கட்டுமான தொழில்களும் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றி வாழ வழியின்றி உள்ளனர். இத்தகைய தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து நாடுதழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுசேர்ந்து அறிவித்துள்ள ஜனவரி 8 பொது வேலைநிறுத்தத்தையும் மறியல் போராட்டத்தையும் பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதென்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.  டிசம்பர் 15 அன்று வேலை நிறுத்தத்தையும் மறியல் போராட்டத்தையும் விளக்கி பெரம்பலூர் ரெட்டியார் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  ஜனவரி 4, 5 தேதிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் அனைத்து அலுவலகங்களிலும் தொழிலாளர்களிடமும் பொதுமக்களிடமும் வேன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 26.12.2019 அன்று சாலையோர வியாபாரிகளையும் மார்க்கெட் பழவண்டி வியாபாரிகளையும் சந்தித்து வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டப்பட்டது. 28.12.2019 அன்று பொதுத்தொழிலாளர் சங்கத்தினுடைய மாவட்ட பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு வேலை நிறுத்தத்திலும் மறியலிலும் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.  பெரம்பலூர் மாவட்டத்தில் மின்சாரத் துறையில் 500க்கு மேற்பட்டோரும் அங்கன்வாடியில் 400க்கு மேற்பட்டோரும் ஷேர் ஆட்டோ தொழிலாளர்கள் 500க்கு மேற்பட்டோரும் சாலையோர வியாபாரிகள், பழவண்டி வியாபாரிகள் 300க்கு மேற்பட்டோரும், கட்டுமானம் போக்குவரத்து சுமைப்பணி உள்ளாட்சி சார்பாக 500க்கு மேற்பட்டோரும், மாவட்டம் முழுவதும் 2000க்கு மேற்பட்டோர் வேலைநிறுத்தத்திலும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஜனவரி 8 காலை 10 மணிக்கு நடைபெறும் மறியல் போராட்டத்திலும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தையும் மறியலையும் வெற்றிகரமாக்கிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டினும், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் ரெங்கசாமியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;