tamilnadu

img

உலகின் மிக உயரமான பாலம் பணி அடுத்தாண்டு நிறைவடையும்... இந்திய ரயில்வே துறை தகவல்

புதுதில்லி:
ஜம்மு- காஷ்மீரில் உள்ள ஷெனாப் ஆற்றின் மீது உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் அமைக்கும் பணிகள் அடுத்தாண்டிற்குள் நிறைவடையும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைப்பதற்கான திட்டப்பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஷெனாப் ஆற்றின் குறுக்கே, உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம், தரை மட்டத்தில் இருந்து, 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. பாரீஸில் உள்ள ஈபிஸ் கோபுரத்தின் உயரம் 324 மீட்டர். அதைவிட 34 மீட்டர் உயரத்தில் பாலம் கட்டப்பட்டுவருகிறது.

உலகின் மிக உயரத்தில் வடிவமைக்கப்படும் இந்தப் பாலம், அதிகபட்சமாக மணிக்கு 266 கி.மீ., காற்றின் வேகத்தை தாங்கக் கூடியதாக இருக்கும். இந்த ரயில் திட்டத்தின் கீழ் உள்ள பணிகள், ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.  உத்மாபூர்-கத்ரா (25 கி.மீ) பிரிவு, பானிஹால்-குவாசிகுண்ட் (18 கி.மீ) பிரிவு மற்றும் குவாசிகுண்ட்-பாரமுல்லா (118 கி.மீ) பிரிவுகளில் ஏற்கனவே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 174 கி.மீ., சுரங்க பாதைகளில் 126 கி.மீ.,க்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 
ஓராண்டில், மத்திய அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாலத்தின் கட்டுமானப் பணிகள், மிக விரைவாக நடைபெறுவதால், அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் திங்களன்று பதிவிட்டுள்ள தமது சுட்டுரையில், “இந்திய ரயில்வே காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்கும் செனாப் நதியில் உலகின் மிக உயர்ந்த ரயில் பாலத்தை உருவாக்கி வருகிறது. இது ஒரு கனவுத் திட்டம். ஒரு பொறியியல் அற்புதம். இந்தப் பாலம் வர்த்தகத்தை எளிதாக்கும். இந்திய ஆயுதப்படைகளுக்கு முக்கிய பங்களிப்பை செலுத்தும்” எனக் கூறியுள்ளார்.

;