tamilnadu

img

உரிமைகளை பாதுகாக்க சிஐடியுவை பலப்படுத்துவோம்

அகில இந்திய மாநாட்டில் தலைவர்கள் சூளுரை

உழைப்பாளி மக்களை பிளவுபடுத்தும்  முயற்சியை முறியடிப்போம்: கே.ஹேமலதா

சென்னை, ஜன.28- சிஐடியு சங்கத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்து மேலும் பலமிக்க அமைப்பாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சிஐடியு மாநாடு மாபெரும் பேரணி- பொதுக்கூட்டத்துடன் திங்களன்று (ஜன.27) நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய உரை:

கே.ஹேமலதா (தலைவர்)

கடந்த 50 ஆண்டுகாலமாக தொழிலாளி வர்க்க  ஓற்றுமையை வலுப்படுத்தியிருக்கிறோம். எந்த அளவுக்கு வர்க்கப்போராட்டங்களை தீவிரப்படுத்தி யிருக்கிறோம் என்பதை அகில இந்திய மாநாட்டில் பரிசீலித்தோம். தொழிலாளர்கள் பல்வேறு துறை களில் பல்வேறு மட்டங்களில் பணிபுரிவார்கள்.அங்கன்வாடி ஊழி யர்கள் தொலைதூரத்தில் உள்ள எந்த ஒரு வசதியும் இல்லாத ஒரு  கிராமத்தில் உள்ள மையத்தில் பணியாற்றலாம். நகரத்தில் ஒரு ஊழியர் மிகவும் நவீன வசதிகளுடன் கூடிய  ஆட்டோ மொபைல் அல்லது தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றலாம். ஊழிய ராக அலுவலகங்களில் சுரங்கங்களில், தோட்டங்களில் பணியாற்ற லாம். ஆனால் முதலாளி தொழிலாளி என்ற உறவு வந்துவிட்டால் இவர்கள் எவரும் சுரண்டல் முறையில் இருந்து தப்பமுடியாது.

வாக்குறுதிகளை மறந்த அரசு 

மத்தியில் உள்ள பாஜக அரசு தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவ தோடு   நூற்றாண்டு காலமாக நாம் போராடி பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றையும் பறித்துக்கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கமாகிய நம்மை போன்றவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் பாஜக அரசு. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து விட்டார்கள்.  நாம் வர்க்க நோக்குடன் சிலகோரிக்கைகளை எழுப்பி னால் அவர்கள் வேறு பிரச்சனைகளை எழுப்பி உழைப்பாளிகளை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறார்கள்.

சவால் நிறைந்த பணி

அது குறைந்தபட்ச ஊதிய சட்டமாக இருந்தாலும் 8மணிநேரவேலையாக இருந்தாலும் போனசாக இருந்தாலும் ஓய்வூதியமாக இருந்தாலும் சங்கமாக ஒன்று சேர்ந்து கூட்டுப்பேர உரிமையை வலியுறுத்துவதாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒவ்வொரு தொழிலாளியும் வியர்வை சிந்தி ரத்தம் சிந்தி பெற்ற உரிமைகள் ஆகும். இருக்கிற தொழிலாளர்கள் சட்டத்தை திருத்துவதோடு மட்டுமல்லாமல் புதிய புதிய சட்டங்களை உருவாக்கி உழைப்பாளி மக்களை பிளவுபடுத்துவதில், பலவீனப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். இது நமக்கு ஒரு சவால் நிறைந்த பணியாகும் . இதுகுறித்து சிஐடியு மாநாடு ஆழமாக விவாதித்தது.

வர்க்க ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்

இன்று நாம் சுரண்டப்படுகிறோம், சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறோம். 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக அரசு சுருக்குகிறது. இத்தகைய முயற்சிகளை  தொழிலாளர்களை திரட்டி எதிர்த்துப் போராடி முறியடிக்கவேண்டுமானால் மாற்று கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியும்.  இதுகுறித்து சிஐடியு மாநாட்டில் நான்கு ஆணையங்கள் அமைக்கப்பட்டு அக்கறையோடு விவாதிக்கப்பட்டது. தொழிலாளர்களின் 13 அம்ச கோரிக்கை சாசனத்தின் அடிப்படையில் மாற்று கொள்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த சிஐடியு மாநாடு முடிவெடுத்துள்ளது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்கங்கள் பாஜகவின் பிஎம்எஸ் தவிர அனைத்தும் இணைந்து உருவாக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவும் மாநாடு முடிவெடுத்துள்ளது.இதற்காக சிஐடியு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதாவது எந்தஒரு சங்கத்தில் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் திரட்டவும் தீர்மானித்துள்ளோம். இவர்களோடு விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள்  ஆகியோரையும் இணைத்து போராட திட்டமிட்டுள்ளோம். உழைப்பாளி வர்க்கத்தின் அனைத்துப் பிரிவை சேர்ந்தவர்களையும்  ஒன்றுபடுத்த சிஐடியு முடிவுசெய்துள்ளது. சிஐடியு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுவும் செயற்குழுவும் அதற்கான போராட்ட திட்டங்களையும் வியூகங்களையும் வகுக்கும் என்றார் ஹேமலதா.


தனியார்மயத்தை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் தமிழகம் முன்னணி: தபன்சென்

தமிழகத்தின் பெருமையாக இருக்கக்கூடிய திருச்சி மற்றும் ராணிப்பேட்டை பெல்நிறுவனங்களையும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தையும்  தனியார்மயமாக்க மத்திய அரசு முயன்றது. ஏர்இந்தியாவை தற்போது விற்க முயற்சித்து வருகிறார்கள். பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலையை  விற்கிறார்கள் என்றால் தேசத்தை விற்கிறார்கள் என்றுதான் அர்த்தம். பெட்ரோலியம் நிறுவனங்களை விற்கிறார்கள் என்றால் தேசத்தை விற்கிறார்கள் என்று தான் அர்த்தம். கடந்த பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்கள் அனைத்தும் தனது சொந்த திறனில் வளர்ந்து இன்று மிகப்பெரிய அரசுநிறுவனங்களாக உயர்ந்துள்ளன. ஆனால் தேசிய வாதம், தேச பக்தி பற்றி அதிகமாக பேசிக்கொண்டிருக்கும்  ஆட்சியாளர்கள்தான் தேசத்தின் சொத்துக்களாக உள்ள இந்த நிறுவனங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து தமிழக மக்கள் போராடும் போது மற்ற பிரச்சனைகளை எழுப்பி அவர்களை பல்வேறு சக்திகள் திசைதிருப்புகின்றன.

தமிழக மக்களுக்கு செவ்வணக்கம்

கடந்த மக்களவைத் தேர்தலில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் மாநில அரசின் பாஜக ஆதரவு கொள்கைகளுக்கு எதிராகவும் சரியான பதிலடி கொடுத்தனர். பாஜகவை தனிமைப்படுத்திய தமிழக மக்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன். ஆனால் ஒட்டுமொத்த தேசமும் இன்று ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. நமது மக்களால் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களும் ஒட்டுமொத்த அரசும் அந்நிய நிறுவனங்களுக்கும் உள்நாட்டில் உள்ள தனியார் பெருநிறுவனங்களுக்காகவும்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான் ரயில்வே, பெல்,சேலம் ஸ்டீல், நெய்வேலி நிலக்கரி நிறுவனம்உள்ளிட்ட பல அரசுத் துறைகளை தனியாரிடம் ஒப்படைக்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்தப்போராட்டத்தில் நாட்டில் முன்னணியில் இருந்த மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதை நான் மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆலைக்குள் கால்வைத்தால்....

 சேலம் ஸ்டீல் ஆலையை ஜிண்டால் நிறுவனத்திற்கு விற்க முயன்றபோது தமிழக உழைப்பாளிகள் சிஐடியு தலைமையில்  போராடி தடுத்து நிறுத்தி வரலாறு படைத்தனர். இதையும் மீறி வாங்குவதற்கு ஆலைக்குள்  கால்வைத்தால் விடமாட்டோம் என்று தொழிலாளி வர்க்கம்  எச்சரித்தது.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க முயன்ற போது நெய்வேலி தொழிலாளர்களும் தமிழக மக்களும் இணைந்து  கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசின் முடிவை திரும்பப்பெற வைத்தனர். இதுவரலாறு. அரசின் தொழிலாளர் விரோத, தேச விரோத கொள்கைகளை தடுத்து நிறுத்த தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து நாங்கள் மாநாட்டில் விரிவாக விவாதித்தோம். அரசின் முடிவுகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும், விவாதிக்க வேண்டும், நன்றாக இருக்கும் நிறுவனங்களை ஏன் தனியாருக்கு தாரை வார்க்கிறீர்கள் என்ற கேள்வியை அனைவரும் எழுப்பவேண்டும். 

தொழிலாளி வர்க்க ஒற்றுமைதான் பலம்

தொழிலாளர் விரோத சட்டங்கள்  நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்க நம்மிடம் போதிய உறுப்பினர்களின் பலம் இல்லை. ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் உழைப்பதை நிறுத்தி அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்தால் ஆட்சியாளர்களால் என்ன செய்ய முடியும்? எந்த சட்டத்தை அவர்கள் காட்டி நம்மை பயமுறுத்தமுடியும்? இதுபோன்ற ஒற்றுமை என்ற மொழியின் மூலமே தொழிலாளி வர்க்கம் ஆட்சியாளர்களுக்கு சரியான பாடத்தை கற்றுத்தரமுடியும். வருங்காலத்தில் நமது போராட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமே நாம் பெரிதும் நேசிக்கக்கூடிய இந்த நாட்டை காட்டுமிரண்டித்தனமாக செயல்படும் ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாக்கமுடியும்.

மதவாத விஷப்பாம்பை நசுக்க வேண்டும்

இப்படி தொழிலாளிகள் ஒன்றுபட்டு போராட முயற்சிக்கும்போது மதவாத விஷப்பாம்பு நம்மை கொத்த வந்துகொண்டிருக்கிறது.எனவே ஒற்றுமை என்ற ஆயுதத்தைக் கொண்டு நமது காலில் போட்டு அந்த விஷப்பாம்பை நசுக்கவேண்டும். குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு இவை அனைத்தும் உழைப்பாளி மக்களை மதரீதியாக பிரிக்கக்கூடியதாகும். எனவே உழைப்பாளி மக்கள் அரசின் இந்த விஷப்பரிட்சையில் இருந்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார் தபன்சென்.

 

மதம் எதுவாக இருந்தாலும்  முதலாளித்துவத்தால் சுரண்டப்படுகிறோம்:  மைக்கேல் மக்வாய்பா

உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் மக்வாய்பா பேசுகையில், சிஐடியு மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களில் இருந்து உங்களது போராட்ட குணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. பணிபுரியும் இடத்தில் ஏற்படும் சவால்கள், அரசியல் ரீதியாக ஏற்படக்கூடிய சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு, தீர்வு காண முடியும் என்பதை மாநாடு உணர்த்தியுள்ளது. ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் அது அனைருவருக்கும் உள்ள பிரச்சனையாக தென்ஆப்பிரிக்காவில் கருதுவோம். இதுவே ஒற்றுமைக்கான முழக்கம்.  இந்த ஒற்றுமை சர்வதேச அளவில் மட்டுமல்ல உள்ளூரில் நடக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் வெளிப்பட வேண்டும். ஒரு பகுதியினர் போராடும் போது மற்றொரு பகுதியினர் அதனை ஆதரிக்க வேண்டும்.

வெள்ளை, நீலம், மஞ்சள், கருப்பு என வண்ணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் உழைப்பாளிகள். நாம் மதத்தால் கிறிஸ்துவர்களாக , இஸ்லாமியர்களாக, இந்துக்களாக அல்லது ஏதோ மதத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனாலும் நாம் அனைவரும் தொழிலாளர்கள். நாம் எந்த நிறமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் முதலாளிகளின் சுரண்டலில் இருந்து தப்பமுடியாது. உலகில் உழைக்கும் மக்களை எதிர்க்கக் கூடியவர்கள் எவரும் இல்லை. ஆனால், இந்தியாவில் மதச்சார்புள்ள, மக்களை பிரிக்கக்கூடிய ஒரு கட்சியை எப்படி ஆட்சியில் உட்கார வைத்தீர்கள்? உழைக்கும் மக்களின் உரிமைகளை பெறுவதே நமது லட்சியமாக, கடமையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கங்கள் பல லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்டுள்ளபோதும், தேர்தலில் குறைவான சதவீத வாக்குகளே கிடைக்கின்றன. இவ்வாறு எப்படி இருக்க முடியும் ? தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதை முழுநேரப்பணியாக கொள்ளவேண்டும்.

பல்வேறு மதங்களை பின்பற்றினாலும், உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். எனக்கென்று ஒரு சமூகம், வர்க்கம் உள்ளது. அதன் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன் என்று ஒவ்வொறு தொழிலாளர்களும் உறுதியேற்று செயல்படவேண்டும். உழைப்பாளிகள்தான் தேசத்தின் அனைத்து வளங்களையும் உருவாக்குபவர்கள். அவர்களே அவற்றின் சொந்தக்காரர்கள். இவை அனைத்தும் மக்களுக்கும் பயன்படுத்துவதற்கான போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் நடத்துகிறது. அதற்கு தொழிலாளர்கள் கம்யூனிஸ்டாக மாற வேண்டும்.முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை  இந்திய தொழிலாளி வர்க்கத்தோடு இணைந்து உலக தொழிலாளர் சம்மேளனமும் போராடும் என்று மக்வாய்பா கூறினார்.அவரது ஆங்கில உரையை ரமேஷ்சுந்தர், ஆர்.கருமலையான் ஆகியோர் மொழிபெயர்த்தனர்.

 

ஜன.30 இயக்கத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்: ஏ.கே.பத்மநாபன் அழைப்பு 

அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் பேசுகையில், தோழர்கள் பி.ராம மூர்த்தி, பிடி.ரணதிவே, ஆர்.உமாநாத், கே.ரமணி,  ஏ.நல்லசிவன் ஆகியோர் தொழிலாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த, போராட்ட பாரம்ப ரியத்தை உயர்த்திப் பிடிக்க கடந்த 50 ஆண்டு களுக்கு முன்பு சிஐடியு அமைப்பை உருவாக்கி னார்கள். மேலும் மேலும் தொழிலாளர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியுள்ளது. 1923ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய போது தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை,  வார விடுமுறை, வருங்கால வைப்பு நிதி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி போராடி பெற்ற உரிமைகளை இன்று மத்திய அரசு ஒழித்துக் கொண்டிருக்கிறது. ஒருவ ருக்கு காயம் ஏற்பட்டால் அது எல்லோருக்கு மான காயம் என்ற அடிப்படையில் வர்க்க ஒற்று மையை உருவாக்க வேண்டும். வகுப்புவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க நாடு  முழுவதிலும் இருந்து, அனைத்து மாநிலங்களிலும்  இருந்து வந்த 2000க்கும்  மேற்பட்ட பிரதிநிதிகள் சாதி, மதம், மொழி கடந்து குடியரசு  தினத்தன்று (ஜன. 26) உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

2 நிமிடம் வாகனங்களை நிறுத்துக!

வருகின்ற 30ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தி யின் நினைவு நாள். அவர் சுட்டுக்  கொல்லப்பட்ட மாலை 5 மணிக்கு 2 நிமிடம் நாடு முழுவ தும் அனைத்து வாகனங்களையும் 2 நிமிடம் நிறுத்தி மவுனம் அனுஷ்டிக்க வேண்டும் என சிஐ டியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க அமைப்பு கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன. காந்தியை சுட்டுக் கொன்றவர்க ளுக்கு பாடம் புகட்ட, நாட்டின் ஒற்று மையை பாதுகாக்க தொழிலாளர்கள்  பெருமளவில் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் பத்ம நாபன் கேட்டுக் கொண்டார். 1923ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் முதன்முதலில் தொழி லாளர்களின் உரிமை களுக்காக, ஒற்றுமையை பாதுகாக்க மே தினத்தை கொண்டாடியவர் சிங்காரவேலர். எதிர்வரும் காலங்க ளில் ஏற்படும் சவால்களை சந்திக்க  அனைத்து தரப்பு தொழிலாளர்க ளையும், விவசாயிகளையும், மாணவர்க ளையும், இளைஞர்களையும், மாதர்களையும், பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

 

தடையை தகர்த்து மெட்ரோ நிறுவனத்தில் சங்கம்: ஜி.சுகுமாறன்
 

அனைவரையும் வரவேற்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில், இளம் தொழி லாளர்களை திரட்ட சிஐடியு முன்முயற்சி எடுத்து வருகிறது. மின்சாரத்துறை, போக்குவரத்து துறை, ஐசிடிஎஸ் உள்ளிட்ட துறைகளில் பேச்சுவார்த்தையின் மூலமும், போராட்டங்களின் மூலமும் பல வெற்றிகளை கண்டுள்ளது. மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் சங்கமே துவங்கக் கூடாது  என்ற நிலைமாறி அங்கேயும் சிஐடியு சங்கத்தை துவக்கி  வெற்றி கண்டிருக்கிறது. நாடு முழுவதும் பல மாநிலங்க ளில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற அகில இந்திய வேலை  நிறுத்தத்தில் 25 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதற்கு பிறகும் அரசு தன்னுடைய நிலை பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அடுத்தகட்ட மாக அனைத்து தொழிற்சங்கங்களையும், அனைத்து அமைப்புகளையும், அனைத்து  தரப்பு மக்களையும், தொழிலாளர்களையும் திரட்டி வேலை நிறுத்தம், சாலை மறியல்,  நாடாளுமன்றம் முற்றுகை உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொருளாளர் எம்.எல்.மல்கோட்யா, செய லாளர்கள் எஸ்.தேவ்ராய், ஏ.ஆர்.சிந்து, ஆர்.கருமலையான், துணைத் தலைவர்கள் கே.கே.திவாகரன், மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.கண்ணன், திருச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இறுதியில் சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு நன்றி கூறினார். 

 

நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் தொழிலாளர்களே : அ.சவுந்தரராசன்

பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய சிஐடியு  மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன்  மத்திய, மாநில ஆட்சியாளர்கள்  முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளனர். கடுமையான பொருளா தார நெருக்கடி தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலை இழப்புகள் ஏற்பட்ட போது, ஆலை மூடல்கள் ஏற்பட்ட போது, செல்வத்தை உருவாக்கக் கூடியவர்களுக்கு இந்த அரசு நிச்சய மாக உதவி செய்யும் என்று மோடி அறிவித்தார். முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை காட்டும் என்றும் கூறினார்.முதலாளிகள் செல்வத்தை உருவாக்கவில்லை. உழைப்புதான் செல்வத்தை உண்டாக்கும். அந்த உழைப்பை செலுத்தக்கூடிய தொழிலாளிகள்தான் செல்வத்தை உருவாக்குகிறார்கள். ஆனால்  இதை திட்டமிட்டு மறைத்து ரிலையன்சும்,  அம்பானியும், அதானியும், டாடாவும் பிர்லா வும்தான் செல்வத்தை உருவாக்குகிறார்கள் என்று நாட்டின் பிரதமர் மோடி பேசுகிறார். முதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கஷ்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது, எனவே இந்த அரசு அவர்களுக்கு சலுகை காட்டும் என்று அவர் பகிரங்கமாகக்கூறுகிறார். இதைவிடகொடுமை வேறு இருக்கமுடியுமா?

சொற்ப ஊதியம்

விவசாயி தற்கொலை செய்து கொண்டா லும் அதைப்பற்றி கவலைப்படாத அரசுகளாக மத்திய மாநில அரசுகள் உள்ளன.  விவசாயி களின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது எனக்  கூறும் மத்திய அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 1.25 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது. அயல்நாட்டு முதலாளிகளுக்கு எண்ணற்ற சலுகைகள். ஆனால் உள்நாட்டில் இருக்கும் சிறு குறு தொழில்களுக்கு எந்த சலுகையும் இல்லை. இந்த நிலையில் ஐசிடிஎஸ், சுகாதார தொழிலாளர்கள் என்று அரசுத்துறையின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய், 6 ஆயிரம் ரூபாய் என சொற்ப ஊதியத்தை  வழங்கி ஏமாற்றுகிறார்கள். 

பறிபோகும் நிரந்தர வேலை  

ஆலைத் தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதியம் என்ற நிலை மாறி அனைத்தும் ஒப்பந்த தொழில்களாக மாறி விட்டன. நிரந்தர தொழிலாளர்களின் வேலை பறிபோய் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்திக் கொண்டிருக்கிறது. முதலாளிகளுக்கு உயர்வு தொழிலா ளர்களுக்கு தாழ்வு என்ற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே நாம் நம்முடைய போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. தொழிலாளர்கள் போராடாமல் எந்த நியாயத்தையும் பெறமுடியாது. அண்டை மாநிலமான கேரளத்தில் இடது முன்னணி அரசு தினசரி குறைந்த பட்ச ஊதியம் 600 ரூபாய் என சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் தமிழகத்திலே அப்படி சட்டம் இருக்கிறதா என்றே தெரிய வில்லை. இங்கே குறைந்த பட்ச கூலிச் சட்டம் கூட அம லாக்கப்படுவதில்லை. ஆக்ஸ்பார்ம் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் ஒரு விழுக்காடு முதலாளிகள் 73 விழுக்காடு மக்களுடைய சொத்துக்கு இணையான சொத்தை வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வு, வருமான இடைவெளி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரு கிறது. இதை மறக்கடிக்க மதத்தின், சாதியின் பெயரால் தொழிலாளர்களை, மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது மத்திய அரசு.

 இதற்கு இரையாகாமல் தொழிலாளர்கள் எதிர்த்து நின்று அவர்களின் சதியை முறியடிக்க  வேண்டும். தொழிலாளர்களுக்கு அரசுத் துறைகளில், நீதிமன்றத்தில் கூட நியாயம் கிடைக்கவில்லை. ஒரு தொழிலாளியின் வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் 8 ஆண்டுகள் 10 ஆண்டுகள் என இழுத்தடிக்கப்படுகிறது. ஆறப்போட்டு அந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் யுக்தியை நீதிமன்றங்களே செய்யத்தொடங்கிவிட்டன.  தொழிற்சங்க உரிமை கூட்டுப்பேர உரிமை  அனைத்தும் மறுக்கப்படுகிறது. எனவே நம்முடைய கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டம் ஒன்றுதான் வழி. நம்முடைய உரி மையை பெற நமக்குத் தேவை வலிமை. அந்த வலி மையை பெற வலுவான சங்கத்தை உருவாக்க  வேண்டும். “சோசலிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று” என்பதை முன்னிறுத்தி போராடுவோம்,  வெற்றிபெறுவோம் என்றார் அ.சவுந்தரராசன்.

20 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலையில் பேரணி

சென்னை அண்ணாசாலையில் பேரணி நடத்த அனுமதி கிடையாது. நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர்களின் பேரணி அண்ணா சாலையில் நடைபெற்றுள்ளது. தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதற்கு இந்த பேரணியே எடுத்துக்காட்டு. போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பேரணி நடத்த வேண்டும் என காவல் துறையினர் கூறினர். இது மக்களுக்கான, தொழிலாளர்களுக்கான பேரணி என்பதால் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்றது. போக்குவரத்திற்கு பாதிப்பில்லாமல் மக்களை ஈர்க்கும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது என்று அ.சவுந்தரராசன் பெருமிதத்துடன் கூறினார்.

 

 

 









 

 

;