tamilnadu

img

பாலா தொகுதியில் ஓட்டு வியாபாரம்

கோட்டயம்:
பாலா இடைத்தேர்தல் முடிவு வெளியானதைத் தொடர்ந்து பாஜகவின் முகம் மேலும் அம்பலமாகி உள்ளது. ஓட்டுகள் எண்ணி முடிக்கப்படும்போது பாஜக மாநில தலைமை சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என பாஜகவின் பாலா தொகுதி தலைவரான வழக்கறிஞர் பினு புளிக்கண்டம் கூறியது நிரூபணமாகி உள்ளது. பாலா தொகுதியில்பாஜக-யுடிஎப் ஓட்டு வியாபார ஒப்பந்தம்உள்ளதாக பினு செய்தியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். பாஜகவின் ஓட்டு கிடைக்காமல் போயிருந்தால்பாஜகவின் நிலை மிகவும் மோசமாகி இருக்கும்.

கடந்த மக்களவை தேர்தலில் என்டிஏவேட்பாளர் பி.சி.தாமஸ் 26,533 ஓட்டுகளை பெற்றிருந்தார். ஆனால், நான்குமாதங்களுக்கு பிறகு என்டிஏவுக்கு கிடைத்துள்ள ஓட்டு 18,044 மட்டுமே. 2016இல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் என்.ஹரி 24,821 ஓட்டுகள் பெற்றிருந்தார். அதன்பிறகு பி.சி.தாமஸ், பி.சி.ஜார்ஜ் போன்ற தலைவர்கள் யுடிஎப்பிலிருந்து என்டிஏக்கு தாவினர். பாலாயில் 5,000 பேர் வரைபுதிதாக பாஜக உறுப்பினராகி உள்ளதாக அந்த கட்சியின் மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளையே கூறியிருந்தார். அப்படியென்றால் 35,000 முதல் 37,000 ஓட்டுகள் வரை பாஜகவுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று பினு கூறியிருந்தார். அது நடக்கவில்லை என்பது மட்டுமல்ல கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுகளைவிட 6,777 ஓட்டுகள் குறைந்துள்ளது.
பணம் வாங்கிவிட்டு 5,000 ஓட்டுகளை யுடிஎப்க்கு பாஜக வேட்பாளர் விற்றுவிட்டார் என்று அக்கட்சியின் தொகுதி தலைவராக இருந்த பினு குற்றம் சாட்டியிருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது வெளியான தேர்தல் முடிவு அமைந்துள்ளது. ஓட்டு வியாபாரம் தனக்கு தெரியவந்த உடன் தொகுதி தலைவர் பொறுப்பிலிருந்து பினு ராஜினாமா செய்தார். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தலையீட்டைத் தொடர்ந்து தேர்தல் முடியும்வரை ராஜினாமா செய்ததை வெளியிடவில்லை. ஆனால், தேர்தல்முடிந்த உடன் மாவட்டத் தலைவருமான வேட்பாளர் என்.ஹரி கட்சியிலிருந்து பினுவை இடைநீக்கம் செய்துவிட்டதாக செய்திக்குறிப்பு வெளியிட்டார். ஓட்டு வியாபாரம் குறித்து வெளியே கூறாமல் தடுக்கும் முயற்சியாகவே பினு இடைநீக்கம் செய்யப்பட்டார். பாலாயில் ஓட்டு விற்பனை பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. அடுத்து நடைபெற உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பிரதிபலிக்குமோ என்கிற அச்சத்தில் உள்ளது பாஜக.

யுடிஎப்பில் கலக்கம்
பாலா இடைத்தேர்தலில் யுடிஎப் சந்தித்த வரலாறு காணாத தோல்வி அந்த அணியை உருக்குலைய வைத்துள்ளது. தோல்வி அடைந்தது கேரள காங்கிரசாக இருந்தாலும் அதுயுடிஎப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் 5 இடைத்தேர்தல்களுக்கான முன்னறிவிப்பாக அமைந்துவிடுமோ என்கிற அச்சம்அதன் தலைவர்களை தொற்றியுள்ளதன் வெளிப்பாடாக கேரள காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்பட்ட பரஸ்பர மோதலே தோல்விக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால், கேரள காங்கிரசில் கோஷ்டிமோதல் ஏற்பட்டதும் பாலா இடைத்தேர்தலுக்கான பொறுப்பை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நேரடியாக ஏற்று களமிறங்கினர். மக்கள் காங்கிரஸ் தலைவர்களையும் புறக்கணித்தனர் என்பதே தேர்தல் முடிவாக வந்துள்ளது. இதையொட்டி யுடிஎப்புக்கு பெரும் பின்னடையும் தகர்வும் ஏற்பட உள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டு வருகின்றன.அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக முன்னேறுவோம் என காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி முதல் சாதாரண தலைவர்கள் வரை கூறி வந்தனர். இந்த ஒற்றுமை முழக்கம் எந்த அளவுக்கு பயனளித்தது என்பதற்கு பாலா தேர்தல் முடிவே சான்றாக உள்ளது. ஒரு தளத்தைக்கூட பகிர்ந்து கொள்ள முடியாத மனநிலையில் யுடிஎப்பில் உள்ள கட்சிகள் உள்ளன.கேரள காங்கிரசின் இரு குழுக்களுக்கு எதிராக காங்கிரஸ் முன்வைத்துள்ள விமர்சனம் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இனியும் கேரள காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டுமா என்கிற கேள்வி காங்கிரசில் வலுப்பட்டு வருகிறது. கேரள காங்கிரசின் கோஷ்டிமோதலை தீர்க்க முயன்ற முஸ்லீம் லீக் பின்வாங்கிவிட்டது. மஞ்சேஸ்வரம் இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவுசெய்வதே பெரும் சவாலாக மாறியுள்ளது. அங்கும் பின்னடைவை ஏற்படுத்தும் அளவுக்கு லீகில் மோதல் அதிகரித்து வருகிறது.

;