tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்களுடன் உதயநிதி சந்திப்பு

புதுதில்லி,ஜன.12-  ஜேஎன்யு மாணவர்களை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஜனவரி 12 ஞாயிறன்று சந்தித்தார். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கடந்த 5ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் ஏபிவிபி குண்டர்கள் முகமூடி அணிந்து சபர்மதி விடுதியின் உள்ளே நுழைந்த  மாணவர்களை கொடூரமாகத் தாக்கினர். இதில், ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட 34 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்து ரக்சா தள் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இதுவரை குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யவில்லை. ஆனால் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஜனவரி 12 அன்று ஜேஎன்யு பல்கலைக் கழக விடுதிக்குச் சென்று தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மாணவர்களுக்கு ஆதரவாக திமுக இருக்கும் என நம்பிக்கை அளித்தார். மேலும், சூறையாடப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தையும், விடுதியையும் பார்வையிட்டார்.  இதன் பின்னர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட செயல். சமூக நீதிக்காகவும் மாணவர்களுக்காகவும் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார். அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.  மாணவர் அமைப்பின் தலைவர் ஆயிஷ் கோஷினையும் உதயநிதி சந்திக்கிறார்.

;