காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டே கம்யூனிஸ்ட்டுகள் அதை இடதுசாரிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக செயல்படுவது என்ற அடிப்படையிலேயே 1934ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் தலைமையில்தான் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.
இத்தகைய நிலைப்பாட்டை ஒட்டியே காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட்டுகளுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தில் செயல்பட்டனர். ஆயினும் காங்கிரசில் இருந்த பிற்போக்கு மனோபாவம் கொண்ட தலைவர்களான பலரும் விவசாயிகள் சங்கத்தை கலைக்க வேண்டுமென்று கூறுமளவுக்கு சென்றனர். அவர்களில் வல்லபாய் படேலும் ஒருவர்.
இந்நிலையில் விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் நலன்களுக்காகவும் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. அதனால் காங்கிரஸ் கட்சி தலைமையில் செயல்பட்ட மாகாண அரசாங்கங்கள் விவசாயிகளின் பிரச்சனைகளில் அவர்களின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டன. மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல் ஆகியோரும் காங்கிரஸ் அரசாங்கங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்தியே பேசினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு முதல் பகுதி (1920-1964) எனும் நூலில் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும் விவசாயிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் எழுதிய நூலிலிருந்து எடுத்தாண்டுள்ள பின்வரும் மேற்கோள் மனம்கொள்ளத்தக்கது.
“காங்கிரஸ் கட்சியிலிருந்த வலதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி அகில இந்திய விவசாயிகள் சங்கம் தனது தனித்த அடையாளத்தை நிலைநிறுத்திக்கொண்டே தேசிய இயக்கத்திலும் பங்கேற்றது. அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் கூட்டமைப்பிற்குள் இந்து, முஸ்லிம் மதவாதிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அவர்கள் அனைவரும் விவசாயிகள் சங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்தனர். 1938 மே 11 முதல் 14 வரை கோமில்லா நகரில் நடைபெற்ற சங்கத்தின் மூன்றாவது மாநாட்டின் போது மாநாட்டிலும் பேரணியிலும் முஸ்லிம்கள் பங்கேற்க வேண்டாம் என முஸ்லிம் லீக் கேட்டுக் கொண்டது. இருப்பினும் 25 ஆயிரம் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.
அன்று வங்காள மாகாண பிரதமரான கிருஷக் பிரஜா கட்சியைச் சேர்ந்த பஸ்லூல்ஹக் மாநாட்டை நடத்தவிடாமல் இருப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். பேரணியில் பங்குபெறுவோர் நடந்து செல்கின்ற பாதையில் குரானின் பக்கங்களை பரப்பி வைத்து ஊர்வலத்தில் செல்பவர்கள் அதன்மீது கால் வைத்தால் மதவெறுப்பு உணர்வுகளை தூண்டுவதாக பிரச்சனையை எழுப்ப மதவாதிகள் தயாராக இருந்தனர். ஆனால் பேரணியில் பங்கேற்றவர்கள் அந்தக் காகிதங்களை கையிலெடுத்து திட்டமிட்டு மதவெறியை முறியடித்தனர். முஸ்லிம் மதவெறியர்களுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இந்து மதவெறியர்கள் செயல்பட்டனர். மதக்கலவரம் ஏற்படப்போகிறது என பொய்யாக துண்டு பிரசுரம் வெளியிட்டு குண்டர்களை வைத்து பேரணிக்கு வருகின்றவர்களை பயமுறுத்தி பங்கேற்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி விவசாயிகள் சங்கத்தில் அதிகரித்து வரும் வீச்சை பிரதிபலிப்பதாக அமைந்தது.”
1937-38ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் நிலப்பிரபுக்களுக்கு எதிரான பல்வேறுபோராட்டங்களை நடத்தியது. நில உரிமைக்காகவும், கட்டாய உழைப்பை கைவிட செய்வதற்காகவும் ஜமீன்தார்களுக்கும், ஜாகிர்தார்களுக்கும் எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு போராட்டங்களை ஒடுக்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
1937ல் அசாம் மாநிலம் கர்மா பள்ளத்தாக்கில் நில வெளியேற்றத்தைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் குடிசைகளை அழிக்க யானைகள் பயன்படுத்தப்பட்டன. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய குத்தகை விவசாயிகளுடன் கட்டாய உழைப்பு எனும் பெயரில் சுரண்டப்பட்ட ‘நன்கர்கள்’ என்பவர்களும் போராட்டத்தில் இணைந்தனர். ஜமீன்தார்களும், நன்கர்களும் முஸ்லிம்கள். குத்தகை விவசாயிகள் இந்துக்கள். ஆயினும் நன்கர்கள் குத்தகை விவசாயிகளுடன் இணைந்தே போராடினர். அவ்வாறு போராடியவர்களில் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 1938ஆம் ஆண்டு விவசாய குத்தகையில் சீர்திருத்தம் செய்யக்கோரி நடைபயணம் மேற்கொண்டு 85 மைல் தூரம் நடந்து மாநில சட்டமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதுபோலவே பஞ்சாப் மாநிலத்தில் நிலத் தீர்வை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடந்தது. தண்ணீர்க் கட்டணத்தை குறைக்கக்கோரி அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். நிலவெளியேற்றத்தை எதிர்த்து 40 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்ட ‘நீலிபார்’ போராட்டம் குறிப்பிடத்தக்கதாகும். குஜராத்தில் கொத்தடிமை முறையான ஹாலி எனும் முறையை எதிர்த்து பெரும் போராட்டம் நடைபெற்றது. வடமேற்குப் பகுதியான கல்லாதிரி பகுதியில் நிலவெளியேற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடத்தப்படலாயின.
பீகார் மாநிலத்தில் தாங்களே செம்மைப்படுத்திய நிலத்தில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் (பகஸ்த்) ஜமீன்தார்களால் நிலவெளியேற்றம் செய்யப்படுவதை எதிர்த்து நடந்த போராட்டத்தை சங்கத்தின் தலைவராக இருந்த சகஜானந்த சரஸ்வதி ஒருங்கிணைத்து மாபெரும் இயக்கமாக மாற்றினார். இதையடுத்து பீகார் குத்தகைச் சட்டம் மற்றும் பகஸ்த் நிலவரி சட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. பிட்டா நகரில் டால்மியா சர்க்கரை ஆலையில் நடைபெற்ற விவசாயிகள் -தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் மிக வெற்றிகரமானதாகவும் சங்கத்தின் நோக்கத்தை உணர்த்துவதில் முக்கியத்துவமானதாகவும் அமைந்தது.
இந்த நிலையில் 1937 அக்டோபர் மாதம் விவசாயிகள் சங்கம் கொடியையும் அதன் பதாகையையும் அறிவித்தது. இதையடுத்து சங்கத்தின் கொடியில் அரிவாள் சுத்தியல் சின்னம் இருப்பது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கம் எடுத்த நிலைபாடு விவசாயிகள், தொழிலாளர் ஒற்றுமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். சில பிரதிநிதிகள் அரிவாள் சுத்தியல் சின்னம் விவசாயிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்டுகளுடன் அடையாளப்படுத்தும் என விமர்சித்தனர். ஆனால் உலகம் முழுவதும் அச்சின்னம் தொழிலாளி - விவசாயி ஒற்றுமையின் அடையாளம் என்று மற்றவர்கள் வாதிட்டனர். கோமில்லா நகர் அமர்வின் தலைவராக இருந்த சுவாமி சகஜானந்தா சங்கத்தின் கொடியில் உள்ள சின்னத்தை ஆதரித்து கீழ்க்கண்டவாறுப் பேசினார்.
‘சிலர் இதை (கொடியை) அந்நியமானது; தேசியத்திற்கு புறம்பானது என்கின்றனர். வேறு சிலர் இச்சின்னத்தை வன்முறையின் சின்னம் என்கின்றனர். இது விவசாயிகளை குழப்பத்தில் ஆழ்த்தும். இதுபோன்ற வாதங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மூவர்ணக்கொடி தேசியத்தின் அடையாளம். செங்கொடி சுரண்டப்படுகின்றவர்களின் ஒடுக்கப்படுகின்றவர்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் சர்வதேச ஒற்றுமையை காண்பிக்கும் கொடியாகும். தற்போதைய காலத்தில் தொழிலாளி - விவசாயிகள் போராட்டங்கள் சர்வதேச தன்மையைப் பெற்றுள்ளன. சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்தாமல் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறாது. எனவே இச்சின்னம் தவிர்க்க இயலாதது.’
அத்துடன் அரிவாள் சுத்தியல் சின்னத்தை ஏற்றுக்கொள்வதால் விவசாயிகள் சங்கம், விடுதலைக்கான தேசியப் போராட்டத்திற்கு எந்த அவமரியாதையையும் செய்யவில்லை என்றும் கூறினார்.