tamilnadu

மோடி- எடப்பாடி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் நிலைமை!

மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் உட்பட சிறுபான்மை மக்கள் அனைத்து பிரிவினர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 2014 முதல் 2017 வரை 3000 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் 2300 தாக்குதல்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் 700 தாக்குதல்கள் கிறித்துவர்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்டுள்ளன.


2018ம் ஆண்டு பீகாரில் 13 மாவட்டங்களும் ராஜஸ்தானில் 3 மாவட்டங்களும் மேற்கு வங்கத்தில் 3 மாவட்டங்களும் மதக்கலவரங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவை சங்பரிவாரத்தால் உருவாக்கப்பட்ட கலவரங்கள்.


பசு குண்டர்கள் செய்த கும்பல் கொலைகள்

மொத்த தாக்குதல்கள்: 124

உயிரிழப்பு- 46.

காயமடைந்தவர்- 296

இசுலாமியர்கள்- 56 சதவீதம்

தலித் மக்கள்- 10 சதவீதம்

ஆதிவாசி/பழங்குடியினர்- 3 சதவீதம்

பிற்படுத்தப்பட்ட மக்கள்- 9 சதவீதம்

சீக்கியர்கள்- 1 சதவீதம்

அடையாளம் தெரியாதோர்- 18 சதவீதம்


இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பரப்பப்படும் நஞ்சு பிரச்சாரங்கள்

பசு இறைச்சி

லவ் ஜிஹாத்

மதமாற்றம் மற்றும் கர்வாபஸி

மக்கள் தொகை அதிகரிப்பு எனும் பிரச்சாரம்

பேட்டி/பஹூ பச்சாவ் (முஸ்லிம்களிடமிருந்து மகள் மற்றும் மருமகள்களை பாதுகாப்பது- குறிப்பாக உ.பி.யில்)

முஸ்லிம்கள் சர்வதேச ஜிகாதிகள்

முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் மீதுதான் அன்பு

போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது.


கிறித்துவர்கள் மீது தாக்குதல்கள்

கிறித்துவ மாதா கோவில்கள், பாதிரியார்கள், கன்னிகாஸ்திரீகள் உட்பட அனைத்து கிறித்துவ மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கிறித்துவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது எனவும் அவ்வாறு நுழைந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் பகிரங்க அறிவிப்புகள் பல ஊர்களில் வைக்கப்பட்டுள்ளன.

கிறித்தவ மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட பல நாடுகளின் அரசாங்கங்கள் மோடிக்கு கடிதம் எழுத நிர்பந்திக்கப்பட்டன.

கிறித்தவர்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 2014ம் ஆண்டு 35வது இடத்தில் இருந்த இந்தியா இப்பொழுது 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இஸ்லாமிய மற்றும் கிறித்துவ மக்கள் மீது தாக்குதல்களை நடத்தினால் தண்டனை கிடைக்காது; மோடி ஆட்சி தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் எனும் தைரியம் சங் பரிவாரத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. கொலை உட்பட தாக்குதல்களில் ஈடுபட்ட பலர் சுதந்தரமாக வெளியே சுற்றுகின்றனர். கைது அல்லது விசாரணை இல்லை. இதுதான் மோடியின் ஆட்சியின் இலட்சணம்.


நிதி ஒதுக்கீடு

சிறுபான்மை மக்கள் இந்திய மக்கள் தொகையில் 21சதவீதம் இருந்தாலும் சிறுபான்மை அமைச்சகத்திற்கு வெறும் 0.14 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த சொற்ப நிதியும் முழுமையாக செலவிடப்படுவது இல்லை.

வங்கிகள் கடன் தருவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. சிறுபான்மை மக்களில் முஸ்லிம்கள் 72 சதவீதம் உள்ளனர். ஆனால் சிறுபான்மை மக்களுக்கான வங்கி ஒதுக்கீடில் அவர்களுக்கு கிடைக்கும் நிதி உதவி 45 சதவீதம் மட்டுமே!

வேலை வாய்ப்பு

இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14 சதவீதம். ஆனால் அரசு வேலை வாய்ப்புகளில் அவர்கள் வெறும் 8.57 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

இரயில்வே- 4.5சதவீதம், காவல்துறை காவலர்கள்- 6சதவீதம், மருத்துவ துறை- 4 சதவீதம், போக்குவரத்து துறை- 6 சதவீதம், உயர் பதவிகளில் இந்த நிலை இன்னும் மோசம்: ஐ.ஏ.எஸ்- 3 சதவீதம், ஐ.பி.எஸ்.- 4சதவீதம், ஐ.எஃ.எஸ்- 1.8 சதவீதம்


தனியார் துறை உயர்பதவிகளில்

பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்ட முதல் 500 நிறுவனங்களில் உள்ள மொத்த 2324 இயக்குநர் பதவிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 62 மட்டுமே அதாவது 2.6 சதவீதம் மட்டுமே.

சச்சார் குழுவின் பரிந்துரைகளை சிறிது கூட மோடி அரசாங்கம் அமலாக்கவில்லை என்பது தெளிவாகிறது.


சிறைகளில் முஸ்லிம்கள்

சிறை விசாரணை கைதிகளில் 21 சதவீதம் முஸ்லிம்களாக உள்ளனர். பீகார்/உ.பி.போன்ற மாநிலங்களில் இது 75 முதல் 80சதவீதம் ஆக உள்ளது. சிறையில் மிகப் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள்/தலித்/ஆதிவாசி மக்கள்தான்!


காசி மசூதிக்கும் ஆபத்து

பாபர் மசூதி- இராமர் கோவில் பிரச்சனை இன்னும் தீரவில்லை. உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை சிதைக்க சதிகள் நடக்கின்றன.

இதனிடையே காசியில் விசுவநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள மசூதியை தகர்க்க மோடி அரசாங்கம் சதி செய்கிறது என குற்றச்சாட்டு முன் வந்துள்ளது.

கங்கை கரையிலிருந்து காசி கோவில் வரை உள்ள அனைத்து கட்டிடங்கள், சிறு கோவில்கள் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. காசி அழகுமயத் திட்டம் என்பதன் பெயரால் இது நடத்தப்படுகிறது. கோவில்கள் அகற்றப்படுவதற்கு சில மடாதிபதிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். அப்பொழுது அந்த மடாதிபதிகளிடம் சங்பரிவாரத்தினர் காசி மசூதியை பொருத்தமான நேரத்தில் இடிப்பதற்கே இது நடத்தப்படுகிறது எனவும் இதனை எதிர்க்க வேண்டாம் எனவும் மிரட்டியதாக மடாதிபதிகளே குற்றம் சாட்டுகின்றனர்.

காசி முஸ்லிம்களிடமும் இந்த பயம் வலுவாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். வெறும் பயத்தின் அடிப்படையில் மசூதியை பாதுகாக்க உத்தரவாதம் அரசிடம் கோர முடியாது என உச்ச நீதிமன்றம் கை விரித்துவிட்டது.


மோடி வழியில் எடப்பாடி ஆட்சி!

சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து எடப்பாடி அரசாங்கம் சிறிதும் கவலைப்படவில்லை. மோடி ஆட்சியின் வழியில்தான் எடப்பாடி அரசாங்கமும் செல்கிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பேருந்து எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பல அ.இ.அ.தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் விடுவிக்கப்படவில்லை.

பல அமைப்புகள் வற்புறுத்தியும் இந்த கோரிக்கையை பா.ஜ.க. வற்புறுத்தல் காரணமாக எடப்பாடி அரசாங்கம் உதாசீனம் செய்தது.

பா.ஜ.க.வின் வற்புறுத்தல் காரணமாகவே பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட ‘கோட்டை அமீர்’ விருது இந்த ஆண்டு தரப்படவில்லை.

நாடு முழுதும் முஸ்லிம் மற்றும் கிறித்துவ மக்கள் தாக்குதலுக்கு உள்ளான பொழுது எடப்பாடி அரசாங்கம் அல்லது அ.இ.அ.தி.மு.க. ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

வரலாற்றில் முதல் முறையாக வஃக்பு வாரியத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்த எடப்பாடி அரசாங்கம் அனுமதி அளித்தது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இராமநாதபுரம் தொகுதியை திட்டமிட்டே பா.ஜ.க.வுக்கு தாரை வார்த்தது எடப்பாடி- ஓ.பி.எஸ். கூட்டணி.

இராமநாதபுரம் தொகுதியில் மதக்கலவரம் ஏற்படுத்த திட்டமிட்ட சதிகள் நடக்கின்றன என செய்திகள் கூறுகின்றன.

2022ம் ஆண்டிற்குள் இந்தியா இந்து ராஷ்ட்ராவாக மாறிவிடும் எனவும் அப்பொழுது அனைத்து

முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் இந்துக்களாக மாறிவிட வேண்டும் அல்லது இந்தியாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என சங்பரிவார தலைவர்கள் பகிரங்கமாக பேசி வருகின்றனர்.


சிறுபான்மை மக்களுக்கு எதிராக மட்டுமல்ல; அனைத்து பிற்படுத்தப்பட்ட/ தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசாங்கமும் எடப்பாடி அரசாங்கமும் செயல்பட்டு வந்துள்ளன. வேலையின்மை/விலைவாசி உயர்வு/ பெண்கள் மீது தாக்குதல்/ சிறு முறைசாரா தொழில்கள் அழிவு என அனைத்து பிரிவு மக்களும் துன்பக்கடலில் திணறுகின்றனர். இந்த கொடுமையான நிலையிலிருந்து தேசத்தை காக்க வேண்டும். அதற்கு மத்தியில் மோடி அரசாங்கமும் மாநிலத்தில் எடப்பாடி அரசாங்கமும் தூக்கி எறியப்பட வேண்டும்.

;