tamilnadu

img

இவன்தான் முதலாளி! -

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றிருந்த ஆலைத் தொழிலாளி வர்க்கத்திற்கு வர்க்க போதனை செய்வதற்காக தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டும், மார்க்சிய அறிஞருமாகிய ம.சிங்காரவேலர் அன்று 14ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டிருந்த சென்னை பக்கிங்ஹாம் மற்றும் கர்நாட்டிக் மில்களில் தொழிலாளிகளுக்காக மிக மிக எளிய முறையில் மார்க்சியத் தத்துவத்தை எவ்வாறு விளக்கினார் என்பதைக் காண மிக மிக வியப்பாக இருக்கும். கல்வி பெற வசதியில்லாமல் மிக மிக பின்தங்கிய நிலையில் வறுமையில் வாடிவந்த அந்த 14ஆயிரம் தொழிலாளர்களில் மிக பெரும்பாலோர் தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாய்தந்தையர் தங்கள் இளம் மகனுக்கோ, மகளுக்கோ அறிவுரை கூறுவது போல சிங்காரவேலர் மிக எளிய நடையில் மார்க்சியத் தத்துவத்தை விளக்குகிறார். பிரபல வழக்கறிஞரான அவர் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவர். அக்காலத்தில் எளிய தமிழில் உரையாற்றுவது என்பதே ஒரு அரிதான ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.இக்கட்டுரைக்கான ஆதாரம் தோழர் கே.முருகேசன் மற்றும் தோழர் சி.எஸ்.சுப்பரமணியம் எழுதிய “சிங்காரவேலு : தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்ற மிகச் சிறந்த நூலாகும்.  

                                                                                                                                                                                                                                          - என்.ராமகிருஷ்ணன்

தொழிற்சங்க இயக்கம் குறித்து சிங்காரவேலர் கொண்டிருந்த கண்ணோட்டமானது இதர தொழிற்சங்கத் தலைவர்களின் பார்வையிலிருந்து மாறுபட்டதாயிருந்தது. அவர்கள் மனிதாபிமான நோக்கு நிலையிலிருந்து மட்டுமே தொழிலாளர் பிரச்சனைகளைக் கண்டனர். ஆனால் சிங்காரவேலரோ, தொழிலாளரின் பிரச்சனைகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் கண்டார். மிகக்குறைந்த கூலி கொடுக்கப்பட்டு சுரண்டப்படும் தொழிலாளிகளின் உபரி உழைப்புதான் முதலாளிகளின் லாபமாக மாறுகிறது என்பதையும் அந்த லாபம் மீண்டும் அதே தொழிலாளிகளைச் சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும், சிங்காரவேலர் தனது கட்டுரைகளில் சுட்டிக்காட்டியதோடு தொழிலாளர் கூட்டங்களிலும் பேசினார். 1921ஆம் ஆண்டு மே 19ஆம் தேதியன்று சூளை மில் தொழிலாளர் கூட்டத்தில் சிங்காரவேலர் பேசியதாவது: “நண்பர்களே! உங்களைப் போலவே நானும் ஒரு தொழிலாளியாவேன். நான் வயல்களில் வேலை செய்கிறேன். நிலத்தை உழுகிறேன். செடிகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சுகிறேன். என் மூதாதைகள் செம்படவ வம்சத்தைச் சேர்ந்தவர்கள். நான் உங்களுக்குப் புதியவனல்ல... சில வருட காலமாக நான் தொழிலாளிகளின் விஷயங்களைப் பற்றி படித்து வருகிறேன். நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்வதற்காகச் செய்யும் போராட்டங்களையும் நான் கவனித்து வருகிறேன்.

அவ்விடங்களிலுள்ள தொழிலாளர்களும் உங்களைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளிலுள்ள தொழிலாளர்களும் உங்களைப் போலவே கஷ்டங்கள் அனுபவித்து வருகின்றனர்.  அது பற்றி நீங்கள் உலகத்திலுள்ள தொழிலாளர்களுடன் நேசபாவம் பாராட்டுவது அவசியமென்று எனக்குத் தோன்றுகிறது... “உலகத்திலுள்ள தொழிலாளர்களும் உங்களுக்கிருக்கின்ற நோக்கங்களையே கொள்கிறார்கள். உங்களுக்கு இருக்கப்பட்ட துக்கங்கள் அவர்களுக்கும் இருக்கின்றன. நீங்கள் கொண்டுள்ள எண்ணங்களைத் தான் அவர்களும் கொண்டுள்ளார்கள். உலகத்திலுள்ள தொழிலாளர்களும் நம்மைச் சேர்ந்தவர்கள் தான் என்று கருத வேண்டும். அது தான் உங்கள் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.  “உலகத்துக்குத் தொழிலாளர் எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் உணரவில்லையெனத் தெரிகிறது. தொழிலாளர் எவ்வளவு முக்கியம் என்பதை நம் நாட்டில் பரவிக்கிடக்கும் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு உணரவில்லை போலிருக்கிறது. நிலத்திலிருந்து கிடைக்கும் நெல்லும், சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோக வகைகளும் தொழிலாளரைப் பொறுத்ததே. ரயில்வேக்களும் நீராவிக் கப்பல்களும் தொழிலாளர் முயற்சியாலேயே ஓடுகின்றன. உலகத்தில் உற்பத்தியாகும் எல்லாப் பொருட்களும் தொழிலாளர்களையே பொறுத்திருக்கின்றன. உலகத்தாருக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் தொழிலாளர்களே செய்கிறார்கள். சுருங்கக் கூறுமிடத்து உலகமே தொழிலாளர்களால் நடைபெறுகிறதென்று கூறலாம்.

“நீங்கள் எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்றுமே சொந்தமில்லை. உலகத்தில் செல்வம் பெருகிக்கிடக்கின்றது. ஆனாலும் உங்களுக்குப் போதுமான உணவும், உடையும், இருப்பிடமும் கிடையா, ஏராளமான விளைபொருட்கள் இருந்தும் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள். ஏன்? தொழிலாளர்கள் பொருளை அபரிமிதமாய் உற்பத்தி செய்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குப் போதுமான அளவு பொருட்கள் கிடைப்பதில்லை. பொருட்களை உற்பத்தியாக்குவோனுக்கும், அதை வாங்கி அனுபவிப்பவனுக்கும் இடையில் மூன்றாவது மனிதன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரனாகப் பாவிக்கப்படுகிறான். இவன் நிலத்தில் விளையும் பொருட்களையும் சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் உலோக வகைகளையும், ரயில்வேக்களையும் கப்பல்களையும் தொழிற்சாலைகளையும் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டு தன்னிஷ்டம்போல் விலை ஏற்படுத்துகிறான். இதனால்தான் பஞ்சம், நோய், கஷ்டங்கள், அமைதியின்மை, வேலைநிறுத்தங்கள், ராஜியப் புரட்சிகள் ஆகிய இவைகள், உலகம் முழுமையிலும் ஏற்படுகின்றன. இவன்தான் முதலாளி...”

‘இந்து’ ஆங்கில நாளிதழிலும், ‘ஸ்வதர்மா’ இதழிலும், தான் எழுதிய கட்டுரைகளில் சிங்காரவேலர், தொழிலாளிகளுக்கு சில விஷயங்களை மிகவும் தெளிவாக்கினார். ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலையடைய வேண்டியது முதன்மையான தேவை என்பதையும் நடப்பிலுள்ள அரசு என்பது முதலாளிகளையும், அதிகாரவர்க்கத்தையும் கொண்டதாக இருப்பதால் அது தொழிலாளிகளுக்கு எவ்வித நன்மையையோ, பயனையோ அளிக்காது என்பதை புலப்படுத்தியுள்ளது என்று சிங்காரவேலர் சுட்டிக்காட்டினார்.  ஒன்றுபட்ட தொழிலாளரை அழிக்க முடியாது. சட்டத்திற்கு அளவற்ற ஆற்றல் உண்டு என்று கூறுவது மூடக் கொள்கை. உழைப்பு என்பது அமைதியில் பிறந்து அமைதியில் வளர்ந்து அமைதியில் பயிற்சிபெறுகிறது. காலடியில் அது நசுக்கப்படும்பொழுது நிந்திக்கப்படும்போது, அதன் கண்ணியம், தகுதி, அதன் வாழ்வு இவையெல்லாம் கவரப்படும்போது அது தன் குறிக்கோளை அடைய பிற வழிகளைப் பற்றிச் சிந்திக்கலாம். தொழிலாளர்கள் தங்கள் பிறப்புரிமைகளை அடைய எந்த முறைகளைப் பயன்படுத்துவது என்பது அந்த உரிமைகள் குறித்து உடமைவர்க்கங்கள் காட்டும் மனப்பான்மையைப் பொறுத்து இருக்கும் என்று சிங்காரவேலர் தெளிவுபடக் கூறினார். ‘நவசக்தி’ நாளிதழில் எழுதிய கட்டுரையொன்றில் லெனின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள மூன்றாவது அகிலமே தொழிலாளர் நலத்தை நாடுவதாகுமென்றும், இந்தியாவிற்குத் தகுந்தபடி அதன் விதிகளைத் திருத்திக் கொண்டு காரியங்களைச் செய்தால் சச்சரவுகளும் பிணக்குகளும் ஏற்படாது என்றும் அந்த அகிலத்தினால் உலகத்திலுள்ள இதர தொழிலாளர் சங்கங்களுக்கும் நன்மை ஏற்படும் என்றும் சிங்காரவேலர் சுட்டிக்காட்டினார்.