tamilnadu

img

வெண்கொடி தாழ்த்தி வாலிபர் சங்கம் அஞ்சலி

புதுதில்லி/சென்னை:
தோழர் அசோக் படுகொலையைக் கண்டித்துள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு, வெண்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தியுள்ளது. 

வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்டப் பொருளாளர் அசோக், சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாக தெரிவித்துள்ள சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ், பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் சாதிய - மதவெறி ஆதிக்க சக்திகளாலும், முதலாளித்துவ சக்திகளாலும், அசோக் போன்ற இளம் தோழர்கள் உயர்த்திப் பிடித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முழக்கங்களையோ, செயல்பாடுகளையோ ஒரு போதும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று கூறியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையின் அலட்சியமே சாதி வெறி சக்திகளுக்கு ஊக்கமளித்தது என்றும், அதன் விளைவாகவே ரத்தவெறி பிடித்த குற்றவாளிகள் 24 வயதே நிரம்பிய இளம் தோழனின் உயிரைப் பறித்து தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

“தோழர் அசோக், உனது மரணத்தால் நாங்கள் துவண்டுவிடமாட்டோம்; நீ உயர்த்திப் பிடித்த வெண் கொடியை மேலும் உயர்த்தி உனது போராட்டப் பாதையை என்றென்றும் தொடர்வோம்; செவ்வணக்கம் எங்கள் ஆருயிர்த் தோழனே” என்றும் வாலிபர் சங்க மத்திய நிர்வாகக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மூன்று நாட்கள் வெண் கொடி தாழ்த்தி அஞ்சலி தோழர் அசோக் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள வாலிபர் சங்க மாநிலத் தலைவர்கள் எஸ்.பாலா, என்.ரெஜீஸ்குமார் ஆகியோர், தமிழகம் முழுவதும் வாலிபர் சங்கத்தின் கொடிகளை மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;