tamilnadu

img

மகத்தான கலைஞன் சப்தர் ஹஸ்மி - எஸ்.ஏ.பெருமாள்

சப்தர் ஹஸ்மி ஒரு கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் ) நாடக எழுத்தாளர், இயக்குநர், தெரு நாடகங்களை இயக்கி அரசியல் கருத்துக்களை மக்களின் நெஞ்சங்களில் பதியம் போடுபவர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், தத்துவவாதி எனப் பல்துறை வித்தகர். 12-4-1954ல் டில்லியில் பிறந்த இவர் இந்திய மாணவர் சங்கத்தில் செயல் வீரராய் திகழ்ந்தவர். டில்லியிலும் அலிகாரிலும் அவரது தந்தை ஹனீப், தாய் கமர் ஆசாத் ஹஸ்மி இருவரும் மார்க்சியர்கள். எனவே மார்க்சிஸ்ட் சூழலிலேயே வளர்ந்தார்.

சப்தர் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் எம்.ஏ. படித்தார். அப்போது இந்திய மாணவர் சங்கத்தில் முன்னணியில் செயல்பட்டார். கட்சி உறுப்பினராகி இந்திய மக்கள் நாடக மன்றம் -இப்டாவில் செயல்படத் துவங்கினார். அநேக தெரு நாடகங்களை நடத்தினார். பின்பு ஜனநாட்டிய மன்ச் என்ற மக்கள் நாடக முன்னணியை உருவாக்கினார். அதன் 1973ல் ஜனம் என்ற அமைப்பை துவக்கினார். அது இப்டாவுக்கு வெளியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து இயங்கியது. இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டு வந்த போது, பதவி நாற்காலியை தக்க வைப்பதற்கு செய்யும் அக்கிரமத்தை சப்தர் கண்டித்து “குர்சி குர்சி குர்சி” (நாற்காலி) என்ற தெரு நாடகத்தை ஒரு வார காலம் போட் கிளப் மைதானத்தில் நடத்தினார். இந்த நாடகத்தில் ஒரு ராஜா தனது சிம்மாசனத்தை தன்னோடு தூக்கிக் கொண்டே அலைவார். நாற்காலியை தேர்வு செய்யப்பட்ட ஜனநாயகப் பிரதிநிதியிடம் ராஜா தர மறுப்பார். இந்தத் தெரு நாடகம் சக்கைப் போடு போட்டது. இது ஜனம் அமைப்புக்கு ஒரு திருப்புமுனையானது. ஆனால் அவசரநிலை காலத்தில் பின்பு நாடகங்கள் தடை செய்யப்பட்டன. எனவே அந்த 19 மாதங்களும் ஆங்கிலப் பேராட்சியராய் காஷ்மீர், டில்லி, கார்வால் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார்.

அவசரநிலை முடிந்தபின் ஜனம் நாடகப் பணிக்குத் திரும்பிய சப்தர் ஹஸ்மி “மிசின்” (எந்திரம்) என்ற நாடகத்தை தெருக்களில் இரண்டு லட்சம் தொழிலாளர்களிடையே நடத்தினர். விவசாயிகள் பிரச்சனை குறித்தும், பாசிசம் குறித்தும், பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தும், வேலையின்மை, பணவீக்கம் போன்ற தலைப்புகளில் நாடகங்களை நடத்தினார். தூர்தர்ஷனுக்கு “மலரும் பூக்கள்” போன்ற சிறுவர் தொடர்களை டி.வி.சீரியல்களாக்கித் தந்தார். கட்சி உறுப்பினரும் சகதோழருமான மொலாய் ஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார். பிடிஐ செய்தி நிறுவனத்திலும், எகனாமிக் டைம்ஸ், பத்திரிகையிலும் செய்தியாளராக பணியாற்றினார். மேற்குவங்க அரசின் செய்தித் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் அதிலிருந்து விலகி முழுநேர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். மாக்சிம் கார்க்கியின் “பகைவர்கள், ஹபீப் தன்வீரின் “மோரதரம் கா சத்யாகிரகா” ஆகிய இரு நாடகங்களும் அவருக்கு புகழ் சேர்த்தன. 1-1-1989(ஜனவரி 1)ல் காசியாபாத் முனிசிபல் தேர்தல் நடந்தது. அப்போது ஜனம் “ஹல்லா போல்” (உரத்துப் பேசு) என்ற தெரு நாடகத்தை தில்லி அருகில் உள்ள ஜந்தாபூர் கிராமத்தின் சாகிபாபாத் என்னுமிடத்தில் நடத்தியது. அங்கு காங்கிரஸ் குண்டர்கள் நாடகக் குழு மீது தாக்குதல் நடத்தியதில் சப்தர் ஹஸ்மி கொல்லப்பட்டார். அவர் இறந்து இரு தினங்களுக்குப் பின் அவரது மனைவி மொலாய் ஸ்ரீ அதே இடத்தில் அதே நாடகத்தை நடத்திக் காட்டினார். சப்தர் ஹஸ்மியைக் கொலை செய்த காங்கிரஸ் தலைவர் முகேஷ் சர்மா உள்ளிட்ட பத்துப் பேருக்கு காஜியாபாத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சப்தர் தனது நடிப்புக் காலத்தில் 24 நாடகங்களை 4000 முறைகள் வரை நடத்தியுள்ளார். அவர் கொல்லப்பட்ட ஜந்தாபூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நாடகங்களை ஜனம் நடத்தி வருகிறது.

சப்தர் ஹஸ்மியின் பணியைத் தொடரும் வகையில் எழுத்தாளர் பீஷம் சஹானி மற்றும் பல கலைஞர்களின் முயற்சியால் சப்தர் ஹஸ்மி நினைவு அறக்கட்டளை சஹமத் 1989 பிப்ரவரி மாதத்தில் உருவாக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கேரளத்தில் கோழிக்கோட்டில் அவர் பெயரால் சப்தர் ஹஸ்மி நாட்டிய சங்கம் அமைத்து ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்குநர் சுந்தர் சி இயக்கிய “அன்பே சிவம்”, இந்தி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய “ஹல்லாபோல்” திரைப்படங்கள் அவரது நினைவின் உந்துதலால் எடுக்கப்பட்டவை. ஓவியர் எம்.எப்.உசேன் “ஹஸ்மிக்கு அஞ்சலி” என்றொரு ஓவியம் தீட்டி அதை ஏலம்விட்டார். ரூபாய் பத்து லட்சத்திற்கு அது ஏலம் போனது. அதை அவர் ஜனத்துக்கே வழங்கினார். லக்னோவில் மனித உரிமைகளுக்கான அமைப்பு ஆண்டுதோறும அவர் பெயரால் சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கி வருகிறது. நாடு முழுவதும் சப்தர் ஹஸ்மி பெயரால் நாடகக் குழுக்களும், கலை இலக்கிய இயக்கங்களும் தொடங்கி நடந்து வருகின்றன. சப்தர் நம்மோடும் தெருக்களின் எளிய மக்களோடும் நிரந்தரமாய் வாழ்கிறார்.