tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மத பேதமின்றி திரளும் மாணவர்கள்... ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலை. மாணவர்களும் ஆதரவு

புதுதில்லி:
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. தற்போது இந்தப் போராட்டம் வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளது. 

இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன்பு ஜாமியா மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.தெற்காசிய ஒருமைப்பாட்டுக் குழுசார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத் தில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கோல்டு ஸ்மித், வெஸ்ட்மின்ஸ்டர், கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது. அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் என்று போராட்டத்தில் மாணவர்கள் பேசியுள்ளனர்.

ஹார்வர்டு பல்கலை.மாணவர்கள் கடிதம்
‘போராட்டம் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். அதை வன்முறையால் ஒடுக்குவது கண்டனத்துக்குரியது’ எனஅமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்  நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள், இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.“போராட்டங்கள் சிரமத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஒருமைப் பாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க போராட்டங்கள் உதவும். மாறாக,போராடும் மாணவர்களை ஒடுக்க கல்விவளாகத்துக்குள் நுழைந்து அடிப்பது, கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசுவது போன்ற போலீசாரின் வன்முறை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. இணையதளத் தடையும் ஏற்புடையதே அல்ல” என கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

;