tamilnadu

img

குடியுரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துக... தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை:
தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம் வருமாறு: மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்துப் பகுதி இந்திய மக்கள் மத்தியிலும்  அச்சத்தையும், பதற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதை தாங்கள் அறிவீர்கள். இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் சமூக வாழ்க்கையின் அனைத்து தரப்பினரும், எல்லாவிதமான வேறுபாடுகளையும் தாண்டி ஒன்றுபட்டு இதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல நகரங்களிலும், கிராமப்புற பகுதிகளிலும் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டது போன்ற எழுச்சி இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உடனடி போராட்டங்கள் என்பதை தாண்டி ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் என இந்த எதிர்ப்புகள் தொடர்வதற்கு அடிப்படையான காரணங்கள் உள்ளன.

இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட போதே இதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட இருக்கின்ற தேசிய குடிமக்கள் ஆவணம் (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.); அதன் காரணமாக இந்திய குடிமக்களுக்கு ஏற்படக் கூடிய இழப்பு, அதனால் நாடு முழுவதும் ஏற்படவிருக்கிற சமூக பதற்றம் ஆகியவை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்ற வகையில் இப்போது தேசிய மக்கள் பதிவேட்டிற்கான பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தேசிய குடிமக்கள் ஆவணத்தை நிறைவேற்றுவதற்கு புதிய சட்டங்கள் எதையும் இயற்ற வேண்டியதில்லை என்பதும், மக்கள் பதிவேட்டிற்கான பணிகள் முடிந்துவிட்டால் தேசிய குடிமக்கள் ஆவணம், அதன் தொடர்ச்சியாகவே தயாராகிவிடும் என்பதும், அதற்கு வேறு எந்த தடையும் இல்லை என்பதும் தாங்கள் அறிந்ததே.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பல்வேறு மாநில கட்சிகளும் தங்கள் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் ஆவணத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை தங்கள் மாநிலத்தில் தொடங்க மாட்டோம் என கேரள அரசும், மேற்கு வங்க அரசும் அறிவித்துள்ளன. மேலும் பல மாநில அரசுகளும் அந்த மாநில மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு இதே நிலையினை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டிலும் பொதுவாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலைமை உருவாகியுள்ளது. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களும் மத்திய அரசின் என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றை கைவிட வேண்டுமென பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்திருந்தாலும் அஇஅதிமுகவும், தமிழக அரசும் ஆதரவு அளித்த இதர கட்சிகளைப் போல தேசிய குடிமக்கள் ஆவணம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது இயல்பே.மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு முடிந்துவிட்டால் தேசிய குடிமக்கள் ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டுவிடும் என்கிற காரணத்தினால், தேசத்தின் நலன், சமூக நல்லிணக்கம், அரசியல் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, கேரளா, மேற்குவங்க மாநில அரசாங்கங்களைப் போல தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

;