திருச்சி சிறைக்கு அழைத்து வரப்பட்ட சிங்காரவேலரை ஆங்கிலேய சிறை கண்காணிப்பாளர் சிறைக்குள் அழைத்து செல்லும் காட்சி
நேற்றைய தொடர்ச்சி
சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் மற்றும் 16 பேர் மீது அரசாங்கத்திற்கெதிராக சதி செய்தது உள்ளிட்டு பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட குற்றப் பத்திரிகையை ஆங்கிலேய அரசாங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதான் அன்றைய சென்னை ராஜதானியின் முதல் சதி வழக்காகும். சாட்சியங்களை சேகரிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 400 பேரிடமிருந்து சாட்சியங்கள் சேகரித்தனர். அதில் 157 சாட்சியங்களை திருச்சி நீதிமன்றம் விசாரித்தது. அரசாங்கம் தன் சார்பில் 300 ஆவணங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தது.
என்ன குற்றச்சாட்டு?
குற்றம் சாட்டப்பட்ட 18 பேரும் ரயில்களை நிறுத்தி அதில் பயணம் செய்யக்கூடியவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க சதி செய்தார்கள் என்று கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக கோவை என்.எஸ்.ராமசாமி அய்யங்கார், எம்.கே.விஜயராகவன், ஏ.எஸ்.எம்.சுந்தரம் போன்ற வழக்கறிஞர்கள் வாதாடினர். சிங்காரவேலருக்காக நியூஜெண்ட் கிராண்ட், கே.எஸ்.கிருஷ்ண சாமி அய்யங்கார், பிரபல காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் வாதாடினர்.
முறை இருந்தது. அவர்கள் சமூகத்தில் பிரபலமானவர்கள் என்று கூறப்பட்டு ஜூரிகள் ஆக்கப்பட்டிருந்தார்கள். இந்த வழக்கில் ஜூரிகளாக இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 4 பேர் தான் குற்றவாளிகள் என்றும் இதரர்கள் குற்றவாளிகள் இல்லையென்றும் கூறினார்கள். பொதுவாக ஜூரிகளின் கருத்தை நீதிபதி ஏற்க வேண்டும். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமணராவ் என்பவர் அந்த முடிவை ஏற்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்றும், இதரர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி சிங்காரவேலர், கிருஷ்ணசாமி பிள்ளை, முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்டு 14 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். பெருமாள் என்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பினார். இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அந்த நீதிமன்றம் சதி என்பது பெரிய குற்றங்களை புரிவதற்கான முயற்சி என்று சாட்சியங்கள் திட்டவட்டமாக நிரூபிக்கவில்லை என்று கூறி பலருக்கு தண்டனையை குறைத்தது. சிங்காரவேலர் உள்ளிட்டு 14 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை என்பதை 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெருமாளுக்கு மட்டும் அந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர் 1937ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தபோதுதான் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறு முதல் திருச்சி சதி வழக்கு என்று அறியப்பட்ட ரயில்வே போராட்ட வழக்கு முடிவடைந்தது. சிங்காரவேலர் உள்ளிட்ட தண்டனை பெற்றவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது அவசியம். இந்த போராட்டம் துவங்கப்பட்டபோது, பெரியார் ஈவேரா அதை ஆதரிக்கவில்லை. அப்போது ஆட்சியிலிருந்த நீதிக்கட்சிக்கு தொல்லை தருவதற்காகவே காங்கிரஸ்காரர்களும் பிராமணர்களும் இந்த வேலை நிறுத்தத்தை தூண்டிவிடுவதாக அவர் கருதினார். நிர்வாகத்தோடு இணங்கி போகும்படிதான் தொழிலாளியிடம் அவர் கூறினார். ஆனால் தொழிலாளிகள் அதை ஏற்கவில்லை. அவர்களில் அதிகம் பேர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள். பெரியாரிடம் அதிக மரியாதை கொண்டவர்கள். எனவே பெரியார் பின்னர் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்தார். அரசாங்க தடைச் சட்டத்தை மீறி ரயில்வே தொழிலாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக அவரையும், கண்ணப்பர், ஈஸ்வரன், மாரியப்பன் மற்றும் சுப்பு போன்றோரையும் கைது செய்து வழக்கு தொடுத்தது. எனவே பெரியார் உள்ளிட்டு அவர்கள் அனைவரும் பல வாரக் காலம் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். எதிர் வழக்காடப் போவதில்லை என்றும் விசாரணையில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் அவர் அறிவித்துவிட்டார்.
எனவே தீர்ப்பு வழங்கும் நாளன்று தான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று கருதிய ஈவேரா பெட்டிப்படுக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். ஆனால் அவர்மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் சுமத்தப்பட்ட வழக்கை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டதென்றும் அவர்கள் திரும்பிப் போகலாம் என்றும் நீதிபதி கூறினார். இந்த தீர்ப்பு பெரியாருக்கு ஏமாற்றமாக இருந்தது என்றும் அவர் மன வருத்தத்துடன் வீடு திரும்பினார் என்றும் அவர் வாழ்க்கை வரலாறை எழுதியுள்ள சாமி.சிதம்பரனார் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையை திருச்சி சிறையில் அனுபவித்துவிட்டு சிங்காரவேலரும், இதரர்களும் 1930ஆம் ஆண்டில் வெளிவந்தனர். அப்போது சிங்காரவேலருக்கு 70 வயது முடிந்து 71 ஆவது வயது துவங்கியிருந்தது. அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. பக்கவாதப் பாதிப்பு இருந்தது. அதனால் களப்பணி ஆற்றும் அளவிற்கு அவர் உடல்நிலை இல்லை. ஆனால் அவரிடம் தெளிவான சிந்தனை குடி கொண்டிருந்தது. எனவே மார்க்சிய கருத்துக்களை விளக்கியும், விஞ்ஞான முன்னேற்றம், மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு இயக்கங்கள், பிரபஞ்ச அமைப்பு மற்றும் கடவுள் மறுப்பு போன்றவை குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். தன்னை சந்திக்க வரும் தோழர்களுக்கு விளக்கவுரை அளித்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு சிறந்த அறிவுப் பங்களிப்பு செய்தார்.