tamilnadu

img

எஸ்.சி. பட்டியலைத் திருத்த உ.பி. அரசுக்கு அதிகாரமில்லை!

புதுதில்லி:
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சேர்ந்த 17 சாதியினரை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கும், உத்தரப்பிரதேச அரசின் உத்தரவு தவறானது என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த 17 சாதியினரை எஸ்.சி. பட்டியலில் சேர்த்து, அம்மாநிலசாமியார் முதல்வர் ஆதித்யநாத் அண்மையில் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். இதற்கு பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எஸ்.சி. பட்டியலில் சாதியை நீக்கவோ, சேர்க்கவோ மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி கூறினார். இதையே அக்கட்சியின் எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா, செவ்வாயன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தார்.

இதையடுத்து, சதீஷ் சந்திர மிஸ்ராவுக்கு பதிலளித்துப் பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்,“ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த 17 சாதியினரை எஸ்.சி. பட்டியலில் சேர்த்தது தொடர்பான உ.பி. அரசின் உத்தரவு சரியல்ல. அந்த உத்தரவு அரசியல் சாசனப்படியானதும் அல்ல” என்று தெரிவித்தார். மேலும், “இதுபோன்று ஒரு பிரிவைச் சேர்ந்த சாதியை மற்றொரு பிரிவுக்கு மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது; தனது முடிவை செயல்படுத்த வேண்டும் என்று உ.பி. அரசு நினைத்தால் நடைமுறைகளைப் பின்பற்றி இதுபற்றிய தீர்மானத்தை மத்திய அரசுக்குத்தான் அனுப்ப வேண்டும்” என்றார். “மாநில அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ்கள்வழங்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

;