tamilnadu

img

ரியல் எஸ்டேட் வேலைவாய்ப்பு வளர்ச்சியைத் தராது... சீனா போல உற்பத்தித் துறையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்

புதுதில்லி:
பொருளாதாரத்துறையில் மேற்கொண்ட ஆய்வுக்காக, தனது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக் கேல் கிரீமர் ஆகியோருடன் இணைந்து, 2019-ஆம் ஆண்டிற்கான ‘நோபல்’ பரிசைப் பெற்றிருப்பவர்- அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி.பணமதிப்பு நீக்கம் துவங்கி, மத்திய பாஜக அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்து வருபவர். நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு, அளித்த முதல் பேட்டியில் கூட,“இந்திய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது; இப்போதைக்கு உடனடியாக அதுமுன்னேறுவதற்கான வழி தெரிய வில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 

இதற்காகவும், ஏற்கெனவே காங்கிரசின் தேர்தல் அறிவிக்கையில் இடம்பெற்ற ‘நியாய்’ திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர் என்பதாலும், 2 நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நேரடியாகவே அபிஜித் பானர்ஜியை கடுமையாக சாடினார். அபிஜித் பானர்ஜியின் பொருளாரக் கொள்கை, இந்திய மக்களால் தோற்கடிக்கப்பட்ட கொள்கை என்றும் விமர்சித்தார்.இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விரிவான பேட்டி ஒன்றை அபிஜித் பானர்ஜி அளித்துள்ளார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறியிருப்பதாவது:நமது பெரும்பான்மையான தொழில்கள் அந்தந்த மாநில அரசுகளையும் அங்குள்ள கட்சிகளையும் சார்ந்துள்ளது. எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆளும் கட்சியோ அதனை நம் துணையாகக் கொள்ள வேண்டும். அவர்கள் நமக்கு எதிரிகளாக மாட்டார்கள் என்பதேஎனது பார்வை.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், என்னை முற்றிலும் இடதுசாரி ஆதரவாளர் என்று குறிப்பிட்டு, எனது தொழில் தர்மத்தை குறைகூறியுள்ளார். ஆனால், எனது பணியில் நான் எப்போதும் தர்மத்தை மீறியது இல்லை. எனது பொருளாதாரக் கருத்துக்கள் ஒருதலையாக இருந்தது இல்லை. நான் பணியாற்றியவற்றில், பலவும் பாஜக அரசுகள்தான்.மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்திற்கும் பணியாற்றியுள்ளேன். எனது அனுபவத்தின் மூலம் பல கொள்கை முடிவுகளை அந்த அரசும் எடுத்துள்ளது.மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்ற குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்துக்கு (நியாய்) எவ்வளவு நிதி தேவைப்படும்? என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டனர். இதே கேள்வியை பாஜக கேட்டிருந்தால், அவர்களுக்கும் அந்த திட்டத்தை நான் அளித்திருப்பேன். நல்ல கொள்கை யை அரசியல் காரணங்களுக்காக சுருக்கிக்கொள்வதை நான் கண்டிப்பாக ஏற்கவில்லை.

நான் தனிப்பட்ட முறையில் பல்வேறு விஷயங்களில் பாகுபாடு கொண்டிருக்கலாம். ஆனால் மக்கள் தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்பும் பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில், நான் பாகுபாடு அற்றவன். யாராவது என்னிடம்ஒரு கேள்வி கேட்டால், நான் அவரின்நோக்கங்களைக் கேள்வி கேட்கமாட் டேன். இதில் அரசியல் சார்புநிலை வர வேண்டிய அவசியமில்லை. தற்போது பொருளாதாரம் கடும் சிக்கலில் உள்ளது. இதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். தேசிய மாதிரி கணக்கெடுப்புக்கும் எனக்கும் உள்ளது ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே. அது இந்தியாவின் சராசரி நுகர்வு ஆகும். கடந்த 2014-15இல் இருந்ததை விட நமதுசராசரி நுகர்வு குறைந்துள்ளது. இது முன்னெப்போதும் நடக்காத ஒரு நிகழ்வு ஆகும்.நாட்டில், அதிக வருவாய்க்கு அதிக வரி விதிக்கலாம். பாகுபாட்டைப் போக்குவதில் வரி விதிப்பு ஓர் பங்காற்ற வேண்டும். ஆனால் இதற்கு சட்டரீதியாக உள்ள குறைகளை முதலில் களையவேண்டும். இந்தியாவில் பணக்காரர் களுக்கு அதிகபட்ச வரி 43.5 சதவிகித மாக உள்ளது. இதை இன்னும் உயர்த்தமுடியுமா? என்றால், கண்டிப்பாக அதை உயர்த்த முடியும். 

அமெரிக்காவில் ஐசனோவர் காலத்தில் 95 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. நிக்சன் 70 சதவிகிதம் வரி விதித்தார். இதைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. தீவிர வலதுசாரிகள் தான்.வறுமையை ஒரு மந்திரக் கோலை வைத்து முற்றிலும் ஒழித்துவிட முடியாது. எந்த அரசுமே முற்றிலும் தவறாக செயல்பட்டதாக சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதம் குளறுபடியாக அமைந்துவிடலாம். ‘ஜன் தன் திட்டம்’ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்தளவிற்கு உதவ முடியும்? அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா, என்றால்? இல்லை என்றுதான் சொல்வேன்.நாம் செய்யத் தவறிய ஒன்றைச் சீனா செய்திருக்கிறது. உற்பத்தித் துறையில் நிறைய தொழிலாளர்களை அந்நாடுஅனுமதித்திருக்கிறது என்பதுதான் அது.நாமோ ரியல் எஸ்டேட் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கியுள் ளோம். ஆனால், உற்பத்தித் துறையில் இல்லை. உற்பத்தித் துறையில் பல லட்சம் பேருக்கு வேலை அளிப்பதற்கான இடம் உள்ளது. நாம் அந்த பாதையைத் தவறவிட்டோம். சீனா, வங்கதேச நாடுகள் அந்த வழியில் செல்கின்றன.எங்களது ஆய்வில் ‘இதுதான் தீர்வு’ என்று எதுவொன்றையும் கூறவில்லை. இந்தக் காரணங்களினால் எல்லாம் தீர்வு வேறு விதமாக இருக்கலாம் என்றுசொல்லியிருக்கிறோம். இந்த புத்தகம்தீர்வுகளைப் பற்றியது அல்ல. தீர்வுகளைப் பெறுவதற்கான விவாதங்களைக் கொண்டது. எங்களுக்கு நோபல்பரிசு வழங்கப்பட்டதற்கான காரணம் ஓரளவுக்கு நாங்கள் துறை வல்லுநர்கள் என்பதால் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.

;