தில்லியிலிருந்து புறப்பட்ட ஓர் ரயிலில் இளைஞன் ஜூனைத் அடித்து கொல்லப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகாரத் பதிவிட்ட ஒரு கருத்து மிக முக்கிய மானது... “இந்த படுகொலை பதறவைக்கும் ஒரு கொடுஞ்செயல்.. ஆனால் அதைவிட நம்மை பதற வைக்கும் விஷயமென்பது, அந்த இளைஞனை மதவெறியூட்டப்பட்ட ஒருகும்பல் அடித்து கொல்கிற போது எந்த சலனமும் இல்லாமல் ஒரு கூட்டம் மெளனமாக வேடிக்கை பார்த்ததை எப்படி புரிந்துகொள்வது. ஆம்.. அவர்கள் சமூகத்தின் பொதுவெளியைமதமயமாக்கும் முயற்சியில் முன்னேறி வருகிறார்கள் என்பதன் அடையாளமே சமூகத்தின் இந்த மெளனம்”.. என்றார்.
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ஓர் “நள்ளிரவில்” பறிக்கப்பட்ட போதும், பாபர் மசூதி வழக்கு “அயோத்தி பிரச்சனை”யாக மாற்றப்பட்ட போதும், இதோ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மத அடையாளம் பூசப்பட்டிருக்கிற இந்நிலையிலும், ஒவ்வொன்றிற்கும் காட்டப்படும் எதிர்ப்பை விடவும், சமூகத்தின் மெளனமே மிகவும் பெரிதாயிருக்கிறது. இது ஒப்புதலால் வந்த மெளனமல்ல... அச்சத்தால் உருவாக்கப்படும் மெளனமே... இந்த சட்டம் 130 கோடி இந்தி யர்கள் சார்பாகவே நிறைவேற்றுகிறோம் என்று உள்துறை அமைச்சர் அறிவிப்பின் பின்னணியில், #Not in My Name (இது எங்கள் பெயரால் அல்ல...) என்ற ஹேஷ் டேக் மூலம் சமூக ஊடகத்தில் வலுவான எதிர்ப்பு பதிவிடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக களத்திலும் வலுவான யுத்தம் நிகழ்த்தப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு அடையாளப்பூர்வமாகவும், மெளனம் பெரிதாகவும் உள்ளதாலேயே அவர்கள் தங்கள் அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆங்கில இந்து நாளேடு ஒரு அருமையான கேலி சித்திரத்தை வெளியிட்டிருந்தது. Citizenship Amendment Bill – சுருக்கமாக ‘CAB’ என அழைக்கப்படுகிறது. ‘CAB’ என்றால் வாகனம் என ஒரு அர்த்தமும் உண்டு. அமித்ஷா ஓட்டி வரும் வாகனத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பதாக சொல்லும் கேலிசித்திரம் அது. நாடாளுமன்றத்தில் மசோதாவை முன்மொழிந்து பேசுகிற போது “சர்வ தர்ம சம்பவ் - அனைவருக்கும் நீதியை உறுதி செய்யும் நடவடிக்கையே இது” என்று சொன்னார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்படியெனில் அவர்கள் வரையறுக்கும் “அனைவருக்கும்” என்பதிலிருந்து இஸ்லா மியர்கள் விடுபட்டிருப்பது தற்செயலானதொரு நிகழ்வா என்ன..? அப்படியெல்லாம் இல்லை.. இதுவெல்லாம் வரலாற்றின் ஒரு தொடர்ச்சியே..
எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய “நாம் அல்லது நமது வரையறுக்கப்பட்ட தேசியம்” எனும் நூலில் 99 முதல் 101 பக்கங்களில் இத்தகைய நடவடிகைகளுக்கான “மூலம்” இடம் பெற்றிருக்கிறது. பாரத தேசத்தில் பெருபான்மை மதமான இந்து மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை இந்த தேசம் நிச்சயம் “அந்நியர்களாகவே” பாவிக்கும் என விளக்கப்பட்டுள்ளது.
அது மேலும் “இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாத யாரும் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள், அவர்களுக்கு எவ்வித சலுகைகளோ, உரிமைகளோ கிடைக்காது என்பதோடு ஒரு நாட்டின் குடிமக்களுக்கான உரிமை கூட மறுக்கப்படும்...” என மிகத் தெளிவாகவே விளக்குகிறது. நாஜிக்களின் ஜெர்மனியில் 1933 இல் சிறுபான்மை யூதர்களை அரசுப்பணிகள் – ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளிலிருந்து விலக்கி வைப்பதில் துவங்கிய ஹிட்லரின் முயற்சி படிப்படியாக தொடர்ந்து, அடுத்த இரண்டாண்டுகளில் 60 லட்சம் பேரின் குடியுரிமையை பறிப்பதில் போய்தான் முடிந்தது.வலதுசாரி சித்தாந்தவாதிகளுக்கு “பெரும் பான்மையினர் – இதரர்” எனும் கோட்பாடே வரலாற்றில் எப்போதும் தத்துவ வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறது.
“எப்போதெல்லாம் வளமான சிந்தனை களும், ஜனநாயக மாண்புகளும் முடக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பழமைவாதம் தனக்கான ஒரு தளத்தை உருவாக்கிக்கொள்ளும். அது பாசிசமாக இருக்கும்...” என்கிற அந்தோணியோ கிராம்சியின் கருத்துக்கள் காலத்திற்கு பொருத்தமான கூற்றாக உள்ளது. இந்தியாவின் அடித்தளத்தளமான “மதச்சார்பின்மை” எனும் கட்டுமானத்தின் மீது தொடர்ச்சியாக உருவாக்கப்படும் அரிப்பு என்பது இந்திய தேசம் என்ற பெரும் மாளிகையின் சேதாரத்தில் போய் முடிந்துவிடும். ஆனால் அதை மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்க முடியாது.