tamilnadu

img

அசத்தும் இரட்டையர்கள் - ஆ. லட்சுமி காந்த் பாரதி

“எங்க தாத்தா  ஒரு நாள் ஹார்ட் பிராப்ளம் வந்து செத்துட்டாரு. நான் நல்லாப் படிச்சி டாக்டர் ஆகணும். எல்லாருக்கும் உதவிப் பண்ணனும்” என்று அவ்வளவு சமூகப் பொறுப்புணர்வோடு பேசுகிறார் ஸ்ரீஹரிணி. “ஒலிம்பிக்லே தங்கப்பதக்கம் வாங்கணும். ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்று கலெக்டரா ஆகணும் அது தான் என் லட்சியம்” என்கிறார் ஸ்ரீவிசாகன். ஒன்பது வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன் தங்கையான இவர்கள் சமீபத்தில் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம், பிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2010ல் ஒரே பிரசவத்தில் இரட்டையர்களாக பிறந்தார்கள் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும். தற்போது இருவருக்கும் ஒன்பது வயதாகிறது. கராத்தே என்னும் தற்காப்புக் கலைக்காக இளம் வயதிலே இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியுள்ளனர். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்று இருநூறுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் வாங்கிக் குவித்துள்ளனர்.

சமீபத்தில் உலக சாதனையாளர்கள் பட்டியலில் இவர்களின் பெயரும் இடம் பெறக்காரணம் இளம் வயதில் சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியது தான். ‘வில் மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ (will medal of world records) மற்றும் ‘வில் மெடல் கிட்ஸ் ரெகார்ட்ஸ்’ (will medal kids records) –ல் உலக சாதனையாளர் என பதிவு செய்யப்பட்டு சான்றிதழை பெற்றுள்ளனர். இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ‘யூனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ (universal achidvers book of records) மற்றும்  ‘ஃபூச்சர்ஸ் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ (future kalam book of records) ஆகியவற்றிலும் உலகச் சாதனையாக பதியப்பட்டிருக்கிறது. இந்த உலக சாதனைக்கான நிகழ்ச்சியின் போது, ஸ்ரீவிசாகன் ஸ்ரீஹரிணி ஆகிய இருவரும் குறுகிய நேரத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு பல்வேறு விதமான தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டி எல்லோரையும் வியக்க வைத்தனர். இவர்கள் நிகழ்த்திக் காட்டிய சாகசம் இதுவரை யாரும் நிகழ்த்தாத புது விதமான தற்காப்புக் கலையாக இருந்ததால் சர்வதேசத் தமிழ் பல்கலைகழகம் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த இரட்டையர்களின் குரு வி.ஆர்.எஸ். குமார் கடந்த இருபத்தைந்து வருடமாக ஏராளமான மாணவ, மாணவிகளை உருவாக்கியிருக்கிறார்.என் குழந்தைகளின் கராத்தே பயிற்சிக்கான பொறுப்பை நான் கவனித்துக்கொள்கிறேன். என் மனைவி அவர்களின் பள்ளிப்படிப்பை கவனித்துக் கொள்கிறார் என்னும் முருகானந்தம் பிரியா தம்பதியிடம் உலக சாதனையில் இடம் பெற்றிருக்கும் தங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்லுமாறு கேட்டோம்.

பிரியா…

என் கணவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். அதனால் எங்கள் குழந்தைகள் இருவரையும் விளையாட்டில் ஈடுபடவைத்தோம். ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி ஆகியோரை ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் வளர்க்க நினைத்தோம். இருவருமே சுறுசுறுப்பாக இருப்பதை பார்த்து முதலில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்ப முடிவு பண்ணோம். அது அவர்களுக்கு சரியாக வரவில்லை. பிறகு கராத்தே பயிற்சிக்கு அனுப்பினோம். கராத்தே பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மூன்று வயதில் இருந்து கராத்தே பயிற்சிக்கு போகிறார்கள். சின்ன வயதில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பதக்கம் பரிசு என்று வாங்கி வரும் போது சந்தோசமாக இருக்கும். கராத்தே மட்டும் இல்லாமல் என் மகனுக்கு செஸ் விளையாட்டிலும் அதிக ஈடுபாடு உண்டு. என் மகள் ஓவியத்திலும் எழுத்திலும் ஆர்வமாக இருக்கிறாள். என் கணவர் ஆசைப்பட்டதை என் குழந்தைகள் நிறைவேற்றி வைக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப்பதக்கம் வாங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முருகானந்தம்…

எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக கராத்தே பயிற்சி அனுப்புவதற்கான பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். பள்ளிக்கூடம் அனுப்பும் பொறுப்பை என் மனைவி எடுத்துக்கொண்டார். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கராத்தே பயிற்சிக்கு போவார்கள். இரண்டு மணி நேரம் பயிற்சி முடித்துவிட்டு பிறகு பள்ளிக்கூடம் செல்லுவார்கள். படிப்பிலும் சூட்டியாக இருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் நடக்கிற எல்லா போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கி வருவார்கள். கராத்தே போட்டிக்காக வெளியூருக்கு அழைத்து செல்லும் போது இவர்களுக்கு போட்டியாக வயதில் மூத்தவர்கள் பங்கு பெறுவார்கள். அந்த போட்டியிலும் கொஞ்சம் கூட  பயம் இல்லாமல் அசராமல் ஜெயிப்பார் கள். எங்கள் குழந்தைகள் இருவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வாங்கித்தரவேண்டும். அதுதான் எனது ஒரே லட்சியம் என்றார். கராத்தே மாஸ்டர் வி.ஆர்.எஸ். குமார்… கூறுகையில் ஸ்ரீவிசாகன் ஸ்ரீஹரிணி ஆகிய இருவரும் ஆறு வருடமாக என்னிடம் கராத்தே பயிற்சி பெற்றுவருகிறார்கள். இவ்வளவு சின்ன வயதில் நேரம் தவறாமல் பயிற்சிக்கு வருவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும். இருவரும் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளனர். கராத்தேவில் சின்ன வயதில் வாங்குவது சாதாரண விசயம் இல்லை. பல வெளிநாடுகளில் நடந்த கராத்தே போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு முறை வெற்றி பெறும் போதும் என் மாணவர்கள் என்ற பெருமை எனக்கு இருக்கும். இவர்கள் இருவரும் உலக சாதனையில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களின் அர்ப்பணிப்புக்கும், உழைப்புக்கும் நிச்சயமாக தங்கப்பதக்கம் கிடைக்கும் என்றார் உறுதியாக.

 

;