tamilnadu

தமிழர்களுக்கு 5 சதவீத பணியிடங்களே... தெற்கு ரயில்வே பணிநியமனத்தில் 66 சதவீதம் பேர் இந்தி பேசும் வடமாநிலத்தவர்

புதுதில்லி:
தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனங்கள் பெற்ற 2556 பேரில் 1686பேர் (66 சதவீதம் பேர்) இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்  எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். 

2018 இல் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் பற்றிய விவரங்களை சு. வெங்கடேசன் எம்.பி   கோரியிருந்தார். இதற்கு அமைச்சர் பதிலளித்து பேசுகையில், டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் மொத்தம் 2556பேரில் இந்தியில் எழுதி தேர்வு பெற்றவர்கள் 1686 பேர். தமிழில் எழுதியவர்கள் 139 பேர் ( 5.4 சதவீதம் பேர்) . மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் எழுதியவர்கள் 504 பேர் என்று தெரிவித்துள்ளார். ஜூனியர் இன்ஜீனியர் நியமனத்தில் மொத்தம் 1180 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 160 பேர்,மலையாளம் 315 பேர், தமிழ் 268 பேர், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 437 பேர் ஆவர்.அசிஸ்டெண்ட் லோகோ பைலட்நியமனத்தில் மொத்தம் 908 பேரில் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் 90 பேர். மலையாளம் 176 பேர், தமிழ்333 பேர். ஆங்கிலம் உள்ளிட்ட மற்றமொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 309 பேர் என்றும் அமைச்சர் அளித்தபதிலில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் எந்தெந்த மாநிலங்களில் முகவரிகளைக்கொண்ட வர்கள் என்ற கேள்விக்கு அமைச்சர்பதில் தரவில்லை.

மாநில மொழி அறிவு தேவை
இதுகுறித்து கருத்து தெரிவித்த சு. வெங்கடேசன்,  “ரயில்வே நியமனங்களில் தொடர்ந்து அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவாக தேர்வு பெறுவது நடக்கிறது. இது மக்களுக்கான சேவையையும் பாதிக்கும். சேவை சார்ந்த நிறுவனங்களில் மக்களோடு உரையாடவும், சக தொழிலாளர்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் மாநில மொழி அறிவு மிக முக்கியம். இந்தி பேசக் கூடியவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் அதாவது 66 சதவீதம் டெக்னீசியன் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ரயில்வே நிர்வாகம் அந்தந்தமாநில மொழிகளில், தெற்கு ரயில்வே எனில் தமிழ், மலையாளத்திலான மொழி அறிவை எல்லா தேர்வர்களுக்கும், கூடுதல் தேர்வை இணைக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் மற்றபல பொதுத் துறை நிறுவனங்களில் உள்ளன. இதுவே வேலைவாய்ப்புகளில் எல்லா மாநிலங்களுக்கான நீதியையும், மக்களுக்கான சேவையையும், பயணிகளுக்கான பாதுகாப்பையும், திறம்பட்ட செயல்பாட்டையும் உருவாக்கும்” என்று கூறியுள்ளார்.

;