tamilnadu

img

‘என்ஆர்சியால் இந்தியாவின் எதிர்காலத்திற்கு ஆபத்து!’

ஹைதராபாத்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), மக்கட் தொகைப் பதிவேடு (NPR), குடிமக்கள் பதிவேடு (NRC)) ஆகியவற்றுக்கு எதிராக,தெலுங்கானா சட்டப்பேரவை திங்களன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.முன்னதாக தீர்மானத்தை முன் மொழிந்து பேசிய, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான கே. சந்திரசேகர் ராவ், மத்திய பாஜக அரசின் நோக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியகுடிமக்கள் பதிவேட்டில் (என்பிஆர்) ஏராளமான சந்தேகங்கள் இருப்பதால்தான் போராட்டம் நடக்கிறது.கடந்த 2018-19 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், என்ஆர்சி தயாரிப்பதற்கான முதற்கட்ட தயாரிப்புப் பணிதான் என்பிஆர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசை நம்பிச் செயல்பட யாரும் தயாரில்லை. உள்துறை அமைச்சர் பேசுகிறாரா;அல்லது அறிக்கைதான் உண்மை பேசுகிறதா? 

வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அந்த வாக்காளர் அடையாள அட்டையையே குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. ஓட்டுநர் உரிமம் செல்லாது, ஆதார் செல்லாது, ரேசன்கார்டு செல்லாது, பாஸ்போர்ட் கூட செல்லாது என்றால் எதை வைத்து குடியுரிமையை நிரூபிப்பது?குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்தியஅரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்து மக்களை ஒதுக்கி வைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. இது இந்துக்கள், முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சனை அல்ல. இது நாட்டின் எதிர்காலம் தொடர்புடையது. சர்வதேச அளவில் இந்தியாவின்கவுரவம் தொடர்புடையது.

கோலி மாரோ (சுட்டுத் தள்ளுங்கள்) என்ற வார்த்தையைப் பேசுகிறார்கள். என்ன விதமான மொழி இது. பண்பட்ட சமூகத்தினர் வசிக்கும் இந்தியா போன்ற நாட்டில் இதுபோன்ற முட்டாள்தனத்தைப் பொறுக்க முடியாது; சகிப்பின்மை இல்லாத சிந்தனை இந்த நாட்டுக்கு நல்லதல்ல. நாடு இதை ஏற்காது.”இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.

;