tamilnadu

img

தேசிய ஒருமைப்பாடும் மொழிக் கொள்கையும் - எம்.பசவபுன்னையா

இந்திய தேசத்தில் மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும்விட, மொழிக் கொள்கைக்கும் தாய்மொழி வழி கல்வி மற்றும் மொழிவழி மாநிலம் உள்ளிட்ட கோட்பாடுகளுக்கும் உயரிய முக்கியத்துவம் அளித்து, உயர்த்திப்பிடித்து வருகிற கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மொழிக் கொள்கை தொடர்பாக கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலைப்பாடு பற்றி, புதிய தலைமுறையினருக்கு பல்வேறு தருணங்களில் குழப்பங்கள் எழுகின்றன. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி என்றென்றும் தாய்மொழிப் பாதுகாப்பு; இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை உறுதியோடு கடைப்பிடித்து வந்திருக்கிறது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் முதல் அரசியல் தலைமைக்குழுவில் இடம்பெற்ற நவரத்தினங்களில் ஒருவரும் தலைசிறந்த மார்க்சிய - லெனினிய அறிஞருமான தோழர் எம்.பசவபுன்னையா எழுதிய கட்டுரை இது. 1981 ஜனவரி 4 முதல் 11 வரை மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற சமயத்தில் தீக்கதிர் நாளேடு வெளியிட்ட சிறப்பு மலரில் தோழர் பசவபுன்னையாவின் இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. 

இன்றும் தாய்மொழிக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தித் திணிப்பு, மத்திய பாஜக அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதை எதிர்த்து நவம்பர் 5 அன்று “தாய்மொழிப் பாதுகாப்பு; இந்தித் திணிப்பு எதிர்ப்பு” என்ற முழக்கத்துடன் தென் மாநிலங்களின் மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நடத்துகிறது. கட்சியின் தமிழக, கேரள, ஆந்திர, தெலுங்கானா, கர்நாடக மாநில செயலாளர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி தோழர் பசவபுன்னையா அவர்களின் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இக்கட்டுரையை ‘‘வளன்” என்ற புனைபெயரில் தமிழில் தந்திருப்பவர், காப்பீட்டு ஊழியர் இயக்கத்தின் மறைந்த முதுபெரும் தலைவர் தோழர் இ.எம்.ஜோசப்.

ஒவ்வொரு அரசியல் கட்சியின் மொழிக் கொள்கை, அடிப்படையில் சரியானதா, அல்லது தவறானதா என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?

இந்திய நாட்டின் வேறுபட்ட மொழிகளைப் பேசுகின்ற பல்வேறு மக்களிடையே ஒற்றுமையை வளர்த்திட உதவுகிறதா? பல்வேறு இனங்கள் மற்றும் மதக் குழுக்கள் ஆகிய அனைத்துப்பகுதியினரின் ஒற்றுமையை வளர்த்திட துணை செய்யுமா, செய்யாதா என்ற அடிப்படையில்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். இந்திய யூனியனின் (ஒன்றியத்தின்) ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு மொழிக் கொள்கையை ஆதரித்துப் பேசுபவர்கள் கூட, நாட்டின் எதிர்காலத்துக்கு அத்தகைய கொள்கை விளைவிக்கும் கேடுகளைப் பற்றிச் சில வேளை அறியாமலிருக்கக் கூடும். அத்தகைய கொள்கையை ஜனநாயகப் பூர்வமானதாகவோ அறிவியல் பூர்வமானதாகவோ கொள்ள முடியாது.

ஒவ்வொரு ஆணாயினும், பெண்ணாயினும் தத்தம் தாய்மொழியை நேசிப்பவர்களே! தாய்மொழிப் பற்று இயல்பானதும் கூட. பல்வேறு மொழிகளையும், தேசிய இனங்களையும் கொண்ட இந்நாட்டில், ஒருவர் தன் தாய்மொழி மீது கொண்டிருக்கும் மரியாதை, மற்றவர்களின் தாய்மொழிகளை மதிப்பதற்கும் தூண்டுகோலாக இருக்க வேண்டும். அசோகர் காலத்திலோ அல்லது அக்பர் காலத்திலோ அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக் காலத்திலோ இருந்த ‘ஒன்றுபட்ட’ இந்தியாவும், இன்றிருக்கும் ‘இந்திய ஒன்றியம்’, அதனுடைய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடும் முற்றிலும் வேறுபட்ட அடிப்படையைக் கொண்டவை. அத்தகைய கடந்துவிட்ட யுகங்கள், மற்றும் வரலாற்றுக் கட்டங்களின் அடிப்படையில் சிந்தனையைத் தொடர்வது, எத்துணை நன்னோக்குடைத்தாயினும் பின்னோக்குப் பார்வைக்கும், பிற்போக்குத்தனத்துக்கும், யதார்த்தத்துக்குப் புறம்பான நிலைக்குமே வழிகோலும்.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை நமக்குப் போதிக்கும் பாடம் என்ன?

மவுண்ட்பேட்டனின் அரசியல் தீர்ப்பை பல்வேறு கருத்தோட்டங்களைக் கொண்ட, தேசிய விடுதலை இயக்கத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு இந்திய நாடு விடுதலையடைந்தது. நமது தலைமுறை அக்கறை கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை என்பது எது? அது இந்திய விடுதலைக்குப் பின் தோற்றுவிக்கப்பட்ட, இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமையேயாகும். மவுண்ட்பேட்டன் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட அன்றைய விடுதலைப் போராட்டத் தலைவர்கள், நாட்டை ‘இந்திய ஒன்றியம்’ என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டாகப் பிரிப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள்.  இதன் பொருளென்ன? பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அதாவது விடுதலைக்கு முன்பிருந்த நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் இனிமேல் காக்கமுடியாது என்ற தங்கள் இயலாமையை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்பதுதானே! இரு வகுப்பினரிடையேயும் ‘இந்து - முஸ்லீம்’ - குறிப்பாக, காலஞ்சென்ற ஜின்னா மற்றும் அவர் தலைமை தாங்கிய முஸ்லீம் லீக் ஆகியோரின் வகுப்புவாதக் கண்ணோட்டத்தின் தீங்கான பாத்திரத்தையும், அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் நெடுங்காலமாகவிருந்த பிரிட்டிஷ் ஆட்சியின் ‘பிரித்தாளும் கொள்கை’யின் ஒரு பகுதியான வகுப்புப் பிளவுகளை நீடித்து நிற்கச் செய்வதில் பிரிட்டிஷ் ஆட்சி வகித்த சதிகாரப் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இறந்த காலத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதில் பயனேதுமில்லை. வரலாற்றைத் திருத்தியமைப்பதும், விளைந்த சேதத்தை நிவர்த்தி செய்வதும் இயலாத ஒன்று. முன்னாள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ‘ பிரித்தாளும் கொள்கை’ மற்றும் மத அடிப்படையில் இந்தியா பிரிந்ததை தடுக்க முடியாத நமது இயலாமை ஆகியவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? மதச்சார்பற்ற ஜனநாயக அஸ்திவாரத்தின் மீது, இந்திய ஒன்றியத்தின் உண்மையான தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டும் வகையில் நாம் உழைக்க வேண்டும் என்பதே.  மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, சாதிகளின் பெயராலோ, இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எதையும் செய்யக் கூடாது என்பதே!

வரலாற்றில் ‘நாடுகளைத் துண்டாடுவது’ என்ற போக்கினை உடைய கொள்கையின் அடிப்படையில், இந்திய ஒன்றியத்தைத் துண்டாடுவதற்குச் செய்யப்படும் எந்த முயற்சியும், இந்திய ஒன்றியத்தில் வாழும் ஒவ்வொரு மத, மற்றும் இனக்குழுக்களுக்கு எதிராகவும், இந்திய ஒன்றியத்தின் அனைத்து மக்ககளுக்கெதிராகவும் புரியப்படும் குற்றமாகும்.

நாளை தொடரும்...
 

 

;