tamilnadu

img

அமைச்சர் கே.கே.சைலஜாவை ஏளனம் செய்த காங். தலைவரின் பேச்சுக்கு கண்டனம்

கோழிக்கோடு:
கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவை ‘கோவிட் ராணி, நிபா ராஜகுமாரி’ எனவும்நிபா காலத்தில் கவுரவ நடிகை (கெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்) பாத்திரத்தையே அவர் வகித்ததாகவும் கேரள பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இழிவுபடுத்தினார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள கேரளியரை மத்திய அரசும், கேரள அரசும் அவமதிப்பதாக கூறி வெள்ளியன்று திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் முன்பு கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உண்ணாவிரதம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவை இழிவு படுத்த முயற்சித்த முல்லப்பள்ளியின் பேச்சு சமூக ஊடகங்களிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பகிரங்க மன்னிப்பு  கோர வேண்டும்
முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தனது பேச்சுக்காக சைலஜா டீச்சரிடம் பகிரங்க மன்னிப்புகோர வேண்டும் என சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்.     கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சைலஜா டீச்சரை இழிவாகப் பேசியிருப்பது அவமானகரமான செயல். இதற்காக அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். முல்லப்பள்ளிராமச்சந்திரனை கேரளத்தின் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தது காங்கிரஸ் தலைமையாகும். இத்தகைய ஒரு கலாச்சாரத்தை ஆதரிக்கிறார்களா என்பது குறித்து அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

;