tamilnadu

img

நல்ல நாளில் நல்ல முடிவை எடுங்கள் நிதியமைச்சரே - சு.வெங்கடேசன் கடிதம்

நல்ல நாளில் நல்ல முடிவை எடுங்கள் நிதியமைச்சரே என்று மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்தியாவின் பிரம்மாண்டமான நிதி நிறுவனம், நாளை (செப் 1) 65 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

கடந்த 64 ஆண்டுகளாக தேச நிர்மாணப் பணிகளுக்கு எல்.ஐ.சியின் பெரும் பங்களிப்பு மகத்தானது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் துவங்கி, 13 வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டு வரை எல்.ஐ.சியின் மொத்த பங்களிப்பு ரூ 34 லட்சம் கோடிகளை கடந்துள்ளது. அரசு நிறுவனமான இதன் வெற்றி ஆயுள் காப்பீட்டுத் தொழிலுக்கு மட்டுமின்றி எல்லாத் தொழில் நிறுவனங்களுக்குமே ஓர் சீரிய முன்னுதாரணம் ஆகும்.

1956 ல் 5 கோடி அரசு முதலீட்டோடு துவங்கிய எல்.ஐ.சி, பின்னர் சட்டத் தேவைகளுக்காக ரூ 100 கோடிகளாக அதன் மூலதனம் உயர்த்தப்பட்டாலும், எந்தவொரு நேரத்திலும் அரசிடம் இருந்து எல்.ஐ.சி கூடுதல் மூலதனத்தை எதிர்பார்த்ததே கிடையாது. அவ்வளவு சிறிய மூலதன தளத்தில் எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகளாக இன்றைய நாளில் வளர்ந்துள்ளது. இது எல்.ஐ.சியின் பளிச்சிடும் சாதனையாகும். அரச உத்தரவாதம் இருந்த போதிலும் ஒரு முறை கூட அதை எல்.ஐ.சி பயன்படுத்தியது இல்லை.

இம் மாபெரும் தேசத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் எல்.ஐ.சியின் சிறகுகள் விரிந்துள்ளன. அதன் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகவே இல்லை. உலகம் முழுவதுமுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 42 கோடி பாலிசிகளோடு எல்.ஐ.சி எட்டியுள்ள உயரம் ஒப்பிட இயலாத ஒன்று. ஆயுள் காப்பீட்டுத் தொழில் என்பது "வாக்குறுதிகளை" பாலிசிதாரர்களுக்கு விற்பது என்பதை தாங்கள் அறிவீர்கள். அத்தகைய விரிந்த பாலிசி தளம் இருக்கும் நிலையில் எல்.ஐ.சி 98% உரிமப் பட்டுவாடாவை 2018-19 நிதியாண்டில் எட்டியுள்ளது. 2019-20 ல், கோவிட் - ஊரடங்கு காலம் கடைசி வாரங்களில் குறுக்கிட்ட போதும், இறப்பு உரிமங்களில் 95 சதவீதத்தை எட்டியுள்ளது.

வேகமாக வளர்கிற நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு "உள் நாட்டு சேமிப்பு" திரட்டலே மிகச் சிறந்த வழிமுறை என்பதை எல்.ஐ.சி நிரூபித்துள்ளது. இந்திய ரயில்வே நிதித் தேவைகளுக்காக எல்.ஐ.சியை அணுகிய போது 1.5 லட்சம் கோடிகளை, அதாவது ஆண்டுக்கு 30000 கோடிகள் வீதம் 5 ஆண்டுகளுக்கு, தருவதாக உடனே உறுதி தந்தது. அது போன்று நெடுஞ்சாலை, குடி நீர் திட்டங்கள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுக மேம்பாடு, நீர்ப்பாசனம், மின்சாரம் என ஆதாரத் தொழில்களுக்கு பெரும் நிதியாதாரங்களை தந்துள்ளது.

ஒரு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு வேறு என்ன வேண்டும்!

இந்நாளில் ஓர் வேண்டுகோளை உங்களுக்கு முன் வைக்கிறேன். எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாத எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.

 

;