tamilnadu

img

மகாத்மா காந்தியும் மதச்சார்பின்மையும் - மயிலை பாலு

குஜராத் மாநில மேற்குக் கடற்கரையின் சௌராஷ்ட்ரா பகுதியில் வேரவல் அருகே ப்ரபாஸ் பதானில் உள்ளது சோமநாதர் ஆலயம். இந்த ஆலயம் வழிபாட்டுக்காகப் பயன்படுவது ஒருபுறமிருக்க, முஸ்லிம் சிறுபான்மையினரை யும் மதச்சார்பற்ற நிலைக்காக நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் வசைபாடவும் பயன்படுத்தப்படுகிறது. கஜினி முகமது என்ற இஸ்லாமிய மன்னன் இந்தக் கோயிலை இடித்து விட்டதாகத் தொடர்ந்து பேசு வதன் மூலம் மதமாச்சரியத்திற்குத் தூபம் போடப் படுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தக் கோயிலைப் புதுப்பித்து இந்துக்களுக்கு ஆதர வாக இருந்தார் என்றும் பேசப்படுகிறது. இந்த விஷயத்தில் மகாத்மா காந்தியும் அவரது மதச்சார் பின்மை நிலையும் மறைக்கப்படுகிறது. அவரது 150 ஆவது பிறந்தநாளில் அதனைத் திரும்பிப் பார்ப்பதும் அது பற்றி எடுத்துச் சொல்வதும் அவசியமாகிறது. 

சோமநாதர் ஆலயம் உள்ள பகுதி 1947க்கு முன் ஜுனாகட் சமஸ்தானத்துக்கு உட்பட்டிருந் தது. இதனை இந்தியாவோடு இணைத்த கதை தனியாக சொல்லப்பட வேண்டியது.  இணைப்பு வெற்றிக்குப் பின் 1947 நவம்பர் 12ஆம் நாள் சர்தார் பட்டேல் சோமநாதர் ஆலயத்துக்குச் சென் றார்.  அவரோடு மத்திய பொதுப்பணித் துறை அமைச் சராக இருந்த நஹர் விஷ்ணு காட்கிலும் சென்றி ருந்தார்.  கோயிலின் பல பகுதிகள் சிதைக்கப் பட்டிருப்பதைக் கண்டு இருவரும் மனம் வருந்தி னர். அப்போதுதான் படேலுடன் சென்றிருந்த காட்கிலுக்கு ஆலயத்தைப் புதுப்பிக்கும் யோசனை தோன்றியது. (1947 க்கு முன் ஏன் தோன்றவில்லை என்பது தனித்த ஆய்வுக்கு உட்பட்டது.) இதனைப் படேலிடம் சொல்ல , அவரும் உடனடியாக ஒப்புக் கொண்டார்.  இதைத்தொடர்ந்து கோவில் அருகே கூடியிருந்த சுமார் 500 பேர் மத்தியில் இந்தக் கோவிலை மீண்டும் கட்டி எழுப்பி விக்கிரகத்தை நிறுவ இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்று காட்கில் அறிவித்தார். படேல் அல்ல என்பது குறிப் பிடத்தக்கது. இந்த அறிவிப்புக்காகக் காத்தி ருந்ததுபோல் நவா நகரின் ஜாம்சாஹேப் என்ப வர் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை யாக அறிவித்தார்.  அடுத்து ஆர்சி ஹுக்குமத் 51 ஆயிரம் ரூபாய் தருவார் என்று சாமல்தாஸ் தெரிவித்தார். 

கட்டுமானப் பணிகளை காட்கில் வகித்த பொ துப்பணித்துறை மேற்கொள்ளும் என்ற நிலை யோடு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால் அமைச்சரவையின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜவஹர்லால் நேரு இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது கோயில் கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கம் கொண்டது அல்ல. மாறாக ஒரு சமயம் சார்ந்த வேலையை அரசு செய்யக் கூடாது என்பது தான்.  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் தீவிரக் கடவுள் நம்பிக்கை கொண்ட சனா தனராக இருந்தபோதும் நேருவின் நிலைதான் காந்தியின் நிலையாக இருந்தது . அரசின் நிதி உதவியில் சோமநாதர் கோயில் கட்டும் திட்டம் பற்றி படேலிடம் காந்தி உரையாடினார்.  காந்தி  - படேல் - நேரு என முக்கோண உரையாடல் தொடர்ந்தது. அறிவிப்பு வெளியிடப்பட்ட 16 நாட்க ளுக்குப் பிறகு 1947, நவம்பர் 28 அன்று கோயில் கட்டுமானத்திற்கு காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். 

“நமது நாடும் அரசும் மதச் சார்பு கொண்டது அல்ல; மதச்சார்பற்றது. எனவே அரசு சார்பில் அல்லது அரசு செலவில் கோயில் கட்டுவது கூடாது. வேண்டுமானால் மக்கள் நிதி உதவியு டன் அறக்கட்டளை அமைத்துக் கொள்ளுங்கள்” என்று தெளிவாகக் கூறினார்.  இதனை படேலிடம் தெரிவித்தபோது அவரும் காந்தியின் கருத்தை ஏற்றுக் கொண்டு ஓர் உறுதி மொழியையும் அளித்தார். அதாவது ஜுனாகட் கஜானாவிலிருந்தோ  மத்திய அரசின் நிதியி லிருந்தோ ஒரு பைசா கூட இதற்காக எடுக்கப்பட மாட்டாது என்பதுதான் அந்த உறுதிமொழி.  சோமநாதர் ஆலயம் கட்டுவது தொடர்பான தனது கருத்தினைக் காங்கிரஸின் மூத்த தலைவர்களிடமும் அமைச்சர்களிடமும் மட்டும் கூறியதோடு காந்தி நின்றுவிடவில்லை. தமது பிரார்த்தனைக் கூட்டத்திலும் பகிரங்கப்படுத்தி னார்.  காந்தி தமது பிரார்த்தனைக் கூட்டங்க ளின்போது ஏடுகளில் வெளியாகும் செய்திகள், தமக்கு வரும் கடிதங்கள் பற்றி வெளிப்படையாக கருத்துத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். அதன்படி 1947 நவம்பர் 28 அன்று நடந்த கூட்டத்தில் செய்தி ஏடு ஒன்றில் கிறிஸ்தவர் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். அத்துடன் தமக்கு ஒரு சகோதரர் எழுதிய கடிதத்தின் மீதும் கருத்து தெரிவித்தார். 

“கோயில் கட்டுவதற்கு அரசின் நிதியை செல விடுவது இந்து தர்மமா?  என்று என்னை இன்று சந்தித்த சர்தார் அவர்களிடம் நான் கேட்டேன். அனைவருக்காகவும் அரசு அமைக்கப்பட்டுள் ளது. இதனை ஆங்கிலத்தில் செக்யூலர் - மதச் சார்பற்றது - என்பார்கள். இதன் பொருள், அரசு எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது அல்ல என்பதா கும். இவ்வளவு தொகையை நாம் இந்துக்களுக்கு செலவு செய்தால் இதே அளவு தொகையை சீக்கி யர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் செலவு செய்ய இயலாது” என்று கூறிவிட்டு இன்னொருவர் எழுதி யதையும் எடுத்துக் காட்டிப் பேசினார். இந்தப் பேச்சு 1947 டிசம்பர் 12ஆம் தேதி இடம் பெற்றது. அது ஒரு இந்து சமய செய்தியாளர் சோமநாதர் ஆலயத்திற்கு நன்கொடை அளிப்பது சம்பந்தப்பட்டது. “இவ்வழியில் பொது மக்களிடம் நிதி திரட்டி கோயிலைப் புதுப்பிக்கலாமே தவிர, அரசு நிதியில் அந்த வேலையை செய்வது சரியாக இருக்காது.  அப்படிச்  செய்தால் மற்றவர்களுக் கும் இது பொருந்த வேண்டும்” என்று அந்த செய்தி யாளர் குறிப்பிட்டிருந்தார்.  இது மிகவும் சரியானது என்று காந்தி பிரார்த்த னைக் கூட்டத்தில் கூறினார்.  இந்தப் பின்னணியில் சோமநாதர் ஆலய புதுப்பித்தலுக்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் நிதி பெறும் அறிவிப்பை படேல் 1948 ஆம் ஆண்டு சிவராத்திரி நாளில் வெளி யிட்டார். 

1947ல்  விடுதலைக்குப்பின் தேசமே வகுப்பு வாத வன்முறை எனும் எரிமலை மேல் நின்ற போதும் மகாத்மா காந்தி மதச்சார்பின்மையின் பக்கம் நின்றது மிகவும் கவனிக்க வேண்டியது.  ஆனால் இன்று காந்தியின் பெயரையும் படேலின் பெயரையும் தங்களின் அரசியல் ஆதா யத்திற்காக மட்டும் சங்பரிவாரின் கும்பல் ஆட்சி தாறுமாறாகப் பயன்படுத்துகிறது. கடந்த கால நிகழ்வுகளிலிருந்து தங்களுக்கு வசதி யானதைப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறது.இதனை முறியடிக்க நாமும் வரலாற்றிலிருந்து சில நல்ல விஷயங்களை நினைவுபடுத்துவது அவசியமாகிறது.  மகாத்மாகாந்தியின் மதச்சார் பின்மை கருத்தால் மதவெறி சக்திகளை எதிர் கொள்ளலாம்.

 

;