தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் குழுவின் உறுப்பினர்கள்
டி.ஆர்.சுப்ரமணியம்
தோழர் டி.ஆர்.சுப்ரமணியம் கோவை மாவட்டம் பேரூரில் பிறந்தார். 12ஆம் வயதில் தேசிய இயக்க ஈர்ப்பு காரணமாக வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வந்த அவர் சங்கு கணேசன் என்ற தேசபக்தர் நடத்தி வந்த ‘சுதந்திரச் சங்கு’ என்ற பத்திரிகையில் பணியாற்றினார். தீவிர காங்கிரஸ் ஊழியரான அவர் 1934ஆம் ஆண்டில் முதல் சென்னை சதி வழக்கில் பலஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். மீண்டும் 1940ஆம் ஆண்டுகளில் பல முறை சிறைக்குச் சென்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட 1948-51ஆம் ஆண்டுகளில் அவர் 3 1/2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மூன்று முறை அவர் சிறையிலிருந்து தப்பியுள்ளார். மொத்தத்தில் 14 ஆண்டுகள் சிறைவாசம் செய்துள்ளார். 1952ஆம் ஆண்டில் அவர் கட்சியின் முடிவுப்படி நெல்லை மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி அதை பலப்படுத்தும் பணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்தும் பணிக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.
பி.சீனிவாசராவ்
தோழர் பி.சீனிவாசராவ் இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறிது காலம் சிங்கப்பூரில் உணவகம் ஒன்றை நடத்திய அவர் பின்னர் சென்னை திரும்பி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பி.ராமமூர்த்தி போன்ற காங்கிரஸ் ஊழியர்களுடன் சேர்ந்து அந்நிய துணிக்கடை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டார். இதில் மண்டை உடையும் அளவிற்கு அவர் மீது தடியடி நடந்தது. அவர் இரத்தம் சிந்துவதைக் காணும் பொதுமக்கள் கதர் துணிக்கடைக்குப் போய் கதரை வாங்கிக் கட்டுவார்கள். அந்த அளவிற்கு அவருடைய தியாகம் இருந்தது.
1930ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர் கானுடன் சென்னை சிறையில் ஏற்பட்ட தொடர்பு காரணமாக அவர் கம்யூனிஸ்ட் ஆதரவாளரானார். சென்னை அச்சகத் தொழிலாளர் சங்கம் போன்றவற்றிற்கு பெரும் உதவி செய்தார். 1936ஆம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டபோது சீனிவாசராவ் அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1943ஆம் ஆண்டில் தமிழகத்தில் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டபோது சீனிவாசராவ் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய பண்ணை அடிமை முறையை ஒழிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பயணம் செய்தார். மணலி கந்தசாமி, அமிர்தலிங்கம் போன்ற தோழர்களுடன் சேர்ந்து பண்ணையடிமைகளைத் திரட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி பண்ணை அடிமை முறையை ஒழித்தார். தமிழகத்தில் விவசாயிகள் சங்கத்தை பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றினார்.
1961ஆம் ஆண்டில் உச்ச வரம்புச் சட்டம் கோரி லட்சம் விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் மறியல் போருக்கு தலைமை தாங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்திய அவர் அந்தப் போராட்டம் முடிவுற்ற சமயத்தில் ஆஸ்துமா நோயினால் காலமானார். அவரது உடல் தஞ்சையிலிருந்து திருத்துறைப்பூண்டி நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் முல்லை ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் அங்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சி.பி.இளங்கோ
தோழர் சி.பி.இளங்கோ நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இளமையிலே தேசிய இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட அவர் 1930-32 ஆம் ஆண்டுகளில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். விடுதலை ஆன பின் ஜீவாவுடன் சேர்ந்து அவர் நடத்தி வந்த சிராவயல் ஆசிரமத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1942 அக்டோபரில் ஜீவாவுடன் கைதுசெய்யப்பட்ட அவர் ஓராண்டுக் காலத்திற்குப் பின் விடுதலை ஆனார். பின் சென்னையில் அச்சுத்தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். 1940ஆம் ஆண்டுக்கு பின் அவர் நாகர்கோவிலுக்குச் சென்று கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் ஜீவாவுடன் சேர்ந்து ஈடுபட்டார். 1956-ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் இளங்கோ நாகர்கோவிலில் தன் குடும்பத்துடன் தங்கிவிட்டார். தன் காலம் முழுவதும் தலைசிறந்த தேச பக்தராகவும், கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து மறைந்தார்.
பி.ராமமூர்த்தி
தோழர் பி.ராமமூர்த்தி தஞ்சை மாவட்டம் வேப்பத்தூரைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காங்கிரஸ் கட்சியிலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டு கம்யூனிஸ்ட் ஆனவர். தொழிற்சங்க தலைவராக மட்டுமின்றி தொழில் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தியவர். சிஐடியுவின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர்.
திருத்துறைப்பூண்டி சுந்தரேசன்
தோழர் சுந்தரேசன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பணியாற்றியவர்.