tamilnadu

img

ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் மீது இந்துத்துவா மதவெறியன் துப்பாக்கிச் சூடு

புதுதில்லி, ஜன.30 - மகாத்மா காந்தியின் தியாக தினமான ஜனவரி 30 வியாழனன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேரணியாகச் செல்வதற்காக அணிதிரண்டு கொண்டிருந்த புதுதில்லி, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை.கழக மாணவர்கள் மீது, இந்துத்துவா மதவெறியன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.  தில்லிக் காவல்துறையினர் ஏராளமானவர்கள் சம்பவ இடத்திலேயே இருந்தும் அதனைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவன் மாணவர் களைப் பார்த்துச் சுடும் புகைப்படமும், பக்கத்திலேயே காவல்துறையினர் வேறெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் படமும் முகநூலில் வலம் வந்ததைத் தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். இச்சம்பவத்தில் ஒரு மாணவருக்குக் காயங்கள்  ஏற்பட்டிருக்கிறது. கைத்துப்பாக்கியால் சுட்டவனின் பெயர் ராம்பக்த கோபால் என்பதாகும். உத்தரப்பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் ஜேவர் பகுதியைச் சேர்ந்தவன். இவன் மாணவர்களைப் பார்த்துச் சுடும்போது, “இதுதான் உங்களுக்கு விடுதலை”  (“யே லோ ஆசாதி”) என்று கத்திக்கொண்டே சுட்டிருக் கிறான். போலீசார் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தும் அதைப்பற்றியெல்லாம் அவன் சிறிதும் கவலைப்படாமல் மாணவர்களைப் பார்த்துக் கைத்துப்பாக்கியால் குறி வைத்துச் சுட்டிருக்கிறான். இந்த சம்பவம் மிகவும் வேகமாக சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் அவனைக் கைது செய்திருக்கிறார்கள். சம்பவத்தைத் தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் அருகில் உள்ள மூன்று மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் மனிதச் சங்கிலி அமைப்பதிலிருந்து தடுக்கப் பட்டிருக்கின்றனர். போலீசார் பார்த்துக்கொண்டிருக் கும்போது ஒருவன் கைத்துப்பாக்கியால் கிளர்ச்சி யாளர்களைப் பார்த்துச் சுட்டிருக்கிறான். இவை அனைத்தும் அஹிம்சையை உயர்த்திப்பிடித்த மகாத்மா காந்தியின் தியாக தினமான ஜனவரி 30 அன்று நடந்திருக்கிறது. தில்லிக் காவல்துறையினருக்குப் பொறுப்பு வகிக்கும் நரேந்திர மோடி அரசாங்கமும், அமித் ஷாவும் வெட்கப்பட வேண்டும். இந்தச் செயலை நாங்கள் கண்டிக்கிறோம். குடியரசைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும்.” இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.  (ந.நி.)
 

;