tamilnadu

img

பெரும் கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றும்...

புதுதில்லி/சென்னை:
சர்வதேச நிதி சேவை ஆணையம் உருவாக்கும் மசோதா 2019, கட்டற்ற நிதி மூலதன லாப வேட்கைக்கு இந்தியாவில் களம் அமைத்து கொடுக்கும் மிகப்பெரும் ஆபத்தினை உள்ளடக்கியது என்று கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இம்மசோதாவுக்கு எதிராக மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் மற்றும் இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதத்தை முன்வைத்தனர். 

டிசம்பர் 11 புதனன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச நிதி சேவை ஆணையத்தை உருவாக்கும் மசோதா,  ஏற்கனவே 2019 பிப்ரவரியில் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டு, தற்போது திரும்பப் பெறப்பட்டு ‘பண மசோதாவாக’ மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. பண மசோதாவாக கொண்டு வரப்படுவதன் நோக்கமே ஆளும் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையை தவிர்க்கத்தான் என்பது வெளிப்படை.“உலக நிதிச் சந்தையில் போட்டியிட இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு சுலபமாக வழி வகுப்பது தான்” இம்மசோதாவின் நோக்கம் என்று மசோதாவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 

2007லேயே எடுக்கப்பட்ட முயற்சி
இம்மசோதா பற்றி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பெபி) அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் விளக்குகிறார்:கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே இத்தகைய சர்வதேச நிதி சேவை மையத்தை(IFSC) உருவாக்குவதற்கான அழுத்தத்தை உலக வங்கி இந்தியா மீது செலுத்தி வருகிறது. 2006ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்  எஸ்.எஸ்.தாராபூர் தலைமையில் இரண்டாவது முறையாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அக்கமிட்டி இந்தியாவின் பொருளாதாரத்தை அந்நிய நாட்டு பொருளாதாரத்துடன் முழுவதுமாக இணைக்க வேண்டும் என்று மீண்டும் பரிந்துரை செய்தது. 2007ம் ஆண்டு உலக வங்கியின் பொருளாதார நிபுணர் பெர்ஸி மிஸ்ட்ரி சமர்ப்பித்த அறிக்கையில் மும்பையை தலைமையகமாகக் கொண்டு “சர்வதேச நிதி சேவை ஆணையம்” அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இது நமது சந்தையை வெளி நாடுகளுக்கு திறந்து விடவும் வழி வகுக்கும். ஆனால் 2008ல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் விளைவாக, இத்தகைய முயற்சி நமது பொருளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதனால் யுபிஏ – 1 அரசு இதில் ஈடுபடாமல், மெல்லத் தவிர்த்துவிட்டது.அடுத்த 20 ஆண்டுகளில் புதிய சர்வதேச பயணிகளில் 50% க்கும் கூடுதலானவர்கள் ஆசியாவிலிருந்து இருப்பார்கள் என்றும், 2030ல் ஆகாயப் போக்குவரத்து சந்தையில் முதல் நான்கு இடங்களில் சீனா, இந்தியா. இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளும் இருக்கும் என்றும் ஐஏடிஏ (சர்வதேச ஆகாய போக்குவரத்து கழகம்) சென்ற வருடம் கணித்துள்ளது. இந்திய கார்ப்பரேட்டுகள் சர்வதேச ஆகாயச் சந்தையை கைப்பற்றுவதற்கு உதவுவது, இத்தகைய ஆணையம் உருவாக்கப்படுவதன் நோக்கங்களில் ஒன்று.

காந்தி நகரில் 2015ல் உருவாக்கப்பட்ட மையம்
சர்வதேச நிதி சேவை மையம் ஏற்கனவே 2015ல் காந்தி நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி, செபி, ஐஆர்டிஏஐ ஆகிய அமைப்புகள் ஒழுங்குபடுத்துகின்றன. இவற்றிற்கிடையே தற்போது போதுமான ஒருங்கிணைப்பு இல்லையாம். எனவே இம்மையத்தின் நடவடிக்கைகளை இம்மூன்று அமைப்பு களின்  கட்டுப்பாட்டிலிருந்துவிடுவித்து புதிய ஓர் ஆணையம் உருவாக்கப்படு கிறது என்கிறது மத்திய அரசு.

கட்டற்ற சுதந்திரம் உள்ள ஆணையம்
எல்லா சட்டங்களுக்கும் மேலானதான ஆணையத்தை உருவாக்குவதுதான் மத்திய பாஜக அரசின் நோக்கம்.  இதை நடைமுறையில் உடனுக்குடன் கண்காணிக்கும் நிறுவனம் எதுவும் இருக்காது.  இவ்வாணையத்தின் நடவடிக்கைகளை இதன் இரு உறுப்பினர்களே வருடாந்திர அடிப்படையில் பரிசீலிப்பார்களாம். அதன் அறிக்கை இவ்வாணையத்திடமே சமர்ப்பிக்கப்படுமாம். அதில் ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தால் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் இணைத்து இவ்வாணையம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாம்.

14 சட்டங்களின் அதிகாரம் பறிப்பு
ரிசர்வ் வங்கி சட்டம் 1934, இன்சூரன்ஸ் சட்டம் 1938, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949, டிஐசிஜிசி சட்டம் 1961,பொதுக் காப்பீட்டு சட்டம் 1972, செபி சட்டம் 1992, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணைய சட்டம் 1999, அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் 1999, பென்ஷன் நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணைய சட்டம் 2013 உள்ளிட்ட 14 சட்டங்கள் மாற்றப்பட்டு இவற்றின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டு சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்திற்கு முழு முதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.இம்மசோதாவின் பிரிவு 20ன் படி “இம்மையத்தின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் இவ்வாணையம் குறிப்பிடும் வெளிநாட்டு நாணயத்தில் தான் நடைபெற வேண்டும்; ஆனால் இதனை அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் 1999 கட்டுப்படுத்தாது. இம்மசோதாவின் பிரிவு 30ல் “மற்ற எந்த சட்டத்தில் உள்ள எந்த அம்சங்கள் மாறுபட்டாலும் இச்சட்டத்தின் அம்சங்கள் மட்டுமே செல்லும்” என்று கூறப்பட்டுள்ளது. ஆக, கட்டற்ற சுதந்திரம் உள்ள முழுமையாக மையப்படுத்தப்பட்ட தனித்துவமான ஆணையமாக இது இருக்கும் என்று தெளிவாகிறது.

ஆபத்தான சட்டம்
இம்மசோதாவின் பிரிவு 25ல் “நன்னம்பிக்கையில்” எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்காகவும் மத்திய அரசையோ, இந்த ஆணைய அதிகாரிகளையோ எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த நாட்டில் உள்ள மத்திய புலன் விசாரணையோ, அமலாக்க இயக்குநரகமோ அல்லது ஊழல் தடுப்பு சட்டம், பண மோசடி தடுப்பு சட்டம் போன்ற எந்த சட்டத்தின் மூலமோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இது மிகவும் ஆபத்தானது. இது உலக மெகா ஊழலுக்கு வழி வகுக்கும். எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாத, எந்த சட்டத்திட்டத்திற்கும் கட்டுப்படாத ஓர் ஆணையத்தினால் ஏற்படும் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. சர்வதேச நிதி தாராளமயத்தை நோக்கிய மற்றும் இந்திய சந்தையை முழுமையாக திறந்து விடும் திசையின் முதல் படியாகத்தான் இம்மசோதா அமைந்துள்ளது. இவ்வாறு சி. பி. கிருஷ்ணன் கூறியுள்ளார்.

;