tamilnadu

img

வெளிநாட்டிலிருந்து வந்த 81 % பேரை இந்தியா சோதனை செய்யவில்லை

புதுதில்லி:
ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னதாக, மார்ச் 23 வரை, வெளிநாடுகளில் இருந்துஇந்தியாவுக்கு வந்தவர்களில், 81 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்பது தெரியவந் துள்ளது.
2019 டிசம்பரில் சீனாவில் உள்ள வூகான்நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சில நாட்களிலேயே ஆயிரக்கணக் கானோருக்கு இத்தொற்றுப் பரவியது. ஒவ்வொரு நாளும் கொத்துக் கொத்தாகமக்கள் செத்து மடிந்தனர். இது என்ன வகையான தொற்று; எவ்வாறு தொற்றுகிறது; பாதிப்பின் அறிகுறிகள் என்ன; எந்த மருந்தைக் கொடுப்பது; பரவலை எவ்வாறுதடுப்பது என்று தெரியாமல் சீனா ஆரம் பத்தில் திணறித்தான் போனது. பின்னர் ஒருவழியாக பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்நிலையில், சீனாவின் அண்டை நாடான இந்தியா, கொரோனா தொற்று இந்தியாவுக்குள் பரவிவிடாத வகையில், 2020ஜனவரி 17 அன்று மும்பை, தில்லி, கொல் கத்தா ஆகிய விமான நிலையங்களில் சீனாமற்றும் ஹாங்காங்-கில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனையை துவங்கியது.

அதற்கு நான்கு நாட்களுக்கு பிறகு சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் பெங்களூரு விமான நிலையங்களிலும் சோதனையை விரிவுபடுத்தியது.ஆனால், சீனாவுக்கு வெளியிலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்று உலகசுகாதார மையம் எச்சரித்த நிலையில், பிப்ரவரி 2 முதல் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரையும், பிப்ரவரி 12 முதல் ஜப்பான் மற்றும் தென் கொரியப் பயணிகளையும் இந்தியா சோதனைக்கு உட்படுத்தியது. இந்த காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் 45 ஆயிரத்து170 என்ற எண்ணிக்கையைத் தாண்டியிருந் தது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உட்பட 24 உலக நாடுகளிலும் பரவி இருந்தது. இதனால் பிப்ரவரி 26 முதல் இத்தாலிஉள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரையும் இந்தியா சோதனைக்கு உட்படுத்தியது. 

அதேசமயம், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவோருக்குச் சோதனை நடத்தவில்லை. மார்ச் 4 முதலே, இந்தியா வரும் அனைத்து சர்வதேச விமானப் பயணிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
அதற்குள்ளாக இந்தியாவில் 44 பேருக்குகொரோனா உறுதியாகி விட்டது. அதாவது, ஜனவரி 17 அன்றே விமான நிலையங்களில் பரிசோதனைகளைத் துவங்கி விட்ட பின்னரும், கொரோனா ஊடுருவி விட்டது. தற்போது மே மாதத்தில் சீனாவில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையை இந்தியா தாண்டிவிட்டது. வேகமாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக் கையும் 3 ஆயிரத்தை நெருங்கி விட்டது.இந்நிலையில், இந்திய விமானநிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது குறித்து, சமூக செயற்பாட்டாளரான சாகேத் கோகலே என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

அதில், கடந்த ஜனவரி 15 முதல் மார்ச் 23 வரை மொத்த வெளிநாட்டுப் பயணிகளில் 19 சதவிகிதம் பேர்களுக்கு மட்டுமேகொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், 81 சதவிகிதம் பேர் சோதனை
செய்யப்படவில்லை என்றும் அதிர்ச்சிகரமான பதில் கிடைத்துள்ளது.இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்திய பாஜக அரசின்மெத்தனமும், அலட்சியமுமே காரணம் என்பது அம்பலமாகி இருக்கிறது.

;