tamilnadu

img

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஹைட்ரோ கார்பன் - ஐ.வி.நாகராஜன்

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க நாடு முழுவதும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியோ, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமோ தேவையில்லை என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. அதோடு இதுகுறித்து அவசரச் சட்டமும் நிறைவேற்றி அரசிதழிலும் வெளி யிட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடு மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணான தாகும். இதன்மூலம் ஆய்வு கிணறுகளை மிக விரை வாகத் தோண்ட வேதாந்தா உள்ளிட்ட தனியார் நிறு வனங்களுக்கு பெரும் வாய்ப்பை மத்திய அரசு அளித்துள்ளது. இது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நேரடியாக உதவி செய்வதாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை காவிரி டெல்டா என்று அழைக்கிறோம். இந்த மாவட்டங்களில் கடந்த காலங்களில் பருவ நிலை மாற்றம், இயற்கை பேரிடர் மற்றும் பல்வேறு காரணங்களால் நெற்பயிர் சாகுபடி  என்பது பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறியாக மாறியது. கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது காவிரி நீர் வரத்தும் ஓரளவிற்கு கைகொடுத்ததால் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்நிலையில் அறுவடை பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகின்றன. இதனால் நீண்டகாலத்திற்கு பின்னர் விவசாயிகள் சற்று திருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் திருப்திக்கு வேட்டு வைக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு பகிரங்கமாக வெளி யிட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவதற்கும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கும் அவசியமில்லை என்ற அறிவிப்பு மத்திய அரசின் எதேச்சதிகரமான போக்காகும். வறட்சி, கஜா புயல் என்று தொடர்ந்து பாதிப்பை சந்தித்த டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டுதான் நல்ல மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கருதிய நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைந்துள்ளது.

தற்போதைய விவசாயத்தில் ஆணைக்கொம்பன் நோய் தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் என்று புதுப்புது பிரச்சனைகள் ஏற்பட்டு பெரும் மகசூல் இழப்பு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ள சூழலில் அதையும் சமாளித்து விவசாயிகள் முண்டியடித்து முன்னுக்கு வருகின்றனர். இந்தப் பின்னணியில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான அறிவிப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அருகிலுள்ள புதுவைப் பிரதேசத்தில் மத்திய அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிராக அரசே நேரடியாக ஹைட்ரோ கார்பனைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நடத்து வோம் என்று அப்பிரதேச முதலமைச்சர் நாராயண சாமி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் இந்த  நெருக்கடி நிலையை எதிர்த்து சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து மாநில அதிமுக அரசும் உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். தற்போது மத்திய அரசின் அறிவிப்புக்கு விவசாய அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கடும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.