tamilnadu

img

கர்நாடகாவில் கனமழை : அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரூ:
கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் தட்சிண கன்னடா, சிவமோகா, பெலஹாவி, ஹவேரி, தார்வாட், குடகு, சிக்மகளூர், ஹாசன், உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெலஹாவி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடியூரப்பா பார்வையிட்டார். இடைவிடாத கனமழையால் மங்களூர் மார்க்கத்தில் ஸ்ரீ பாகிலு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் அவ்வழியே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகள் சேதமடைந்துள்ளதால் மங்களூரில் இருந்து மகாராஷ்டிரா பகுதிகளுக்கு கர்நாடக அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை வெள்ளத்தால் கர்நாடக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே 124 அடி நீர்த்தேக்கும்  உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 86.9 அடியாக உள்ளது. ஹேமாவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 26,000 கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணராஜசாகர் ஆணை முழுக்கொள்ளளவை எட்டிய பிறகு அங்கிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுகிறது.  

கபினியில் தண்ணீர் வெளியேற்றம்
அதே சமயம் 84 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நீர்மட்டம் 81 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 60,000 கனஅடி வீதம் தண்ணீர் வருவதால் அணையில் பாதுகாப்புக் கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அங்கிருந்து வினாடிக்கு 55 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினியில் இருந்து காவிரிக்கு திறந்து விடப்படும் நீர் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வெள்ளிக்கிழமை இரவு ஒக்கேனக்கல் காவிரிக்கு வந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5100 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 54 அடியாகவும், நீர் இருப்பு 21.4 டி.ஏம்.சி.யாகவும் உள்ளது. கர்நாடகத்தில் கபிணியில்  இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படும் நீர் மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;