tamilnadu

img

கொரோனா பாதிப்பால் துயரின் பிடியில் உலகப் பொருளாதாரம் : வளர்முக நாடுகளின் சர்வதேசக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும்

புதுதில்லி:
உலகெங்கிலும் கொரோனா பாதிப்பும் அதனால் எழுந்துள்ள பொருளாதாரத் துயரங்களும் உச்சக்கட்டத்தில் எட்டியுள்ள நிலையில், வளர்முக நாடுகள் வாங்கியுள்ள கடன்களை பணக்கார நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என்று பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

இல்லையெனில் வளர்முக நாடுகளும் அவற்றின் மக்களும் தாங்க முடியாத பொருளாதாரத் துயரங்களுக்குள் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.இதுதொடர்பாக பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜுன் 7 ஏட்டில்) பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:

உலகப் பொருளாதாரத்தை ‘கொரோனா’ பீடித்துள்ள நிலையில், மூன்றாம் உலக நாடுகளின் வெளிநாட்டு கடன் (ஐஎம்எப் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் இருந்து வாங்கியுள்ள கடன்கள்) பிரச்சனை என்பது அதிகரித்துள்ளது.
மிகப்பெரும்பான்மையான மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் முதன்மை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை நம்பி இருப்பதால் இந்த வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துள்ளன.  தற்போது இந்த பெருந்தொற்று காலத்தில் கடன்களையோ வட்டியையோ பெரும்பாலான நாடுகளால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பொருட்களின் கொள்முதல் விலையும் வீழ்ந்துள்ளது.  மூன்றாம் உலக நாடுகளின் கரன்சி மதிப்பும் வீழ்ந்துள்ளதால் அவற்றின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனும் குறைந்துள்ளது.  இந்த வெளிநாட்டுக் கடன்கள் அந்நிய செலாவணியில் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது என்பதால் கடன்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி வருவாயின் மீது வரி விதிப்பதின் மூலம் இந்த அரசாங்கங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருந்தது.  தற்போது ஏற்றுமதி குறைந்து போயுள்ளதாலும், இந்த நாடுகளுக்கு வெளிநாட்டுக் கடன்களையும் வட்டியையும் திருப்பி செலுத்துவதற்கு தொகைகளை ஒதுக்க வேண்டியிருப்பதாலும், தற்போது இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவத்திற்கும் நிவாரணத்திற்கும் அதிக தொகை ஒதுக்குவது இரண்டாம்பட்சம் ஆகிறது. மக்களைக் காக்கும் பொருட்டு, அரசுகள், நிதிப் பற்றாக்குறையை பற்றிக் கவலைப்படாமல் கூடுதல் தொகைகளை ஒதுக்க முடியும்.  ஆனால் அப்படி  செய்தால் நாட்டை விட்டு அந்நிய மூலதனம் வெளியேறி  விடும் என்பதால் இந்த வளரும் நாடுகள் இன்னும் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும். இதனைக் காரணம் காட்டி, தற்போதைய அவசர அவசியமாக பொது சுகாதாரத்திற்கு கூடுதல் நிதிச் செலவினம் தேவைப்படுகிற போதும் மூன்றாம் உலக நாடுகள் அதைச் செய்ய மறுக்கின்றன.

இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகள் கடன் நிவாரணம் கோரியுள்ளன.  ஜி20 நாடுகளும் ஒரு “நிவாரண” திட்டத்துடன் முன் வந்துள்ளன.  மூன்றாம் உலக நாடுகளில் 77 ஏழை நாடுகளின் கடன்களுக்கான முன் மொழிவு இது.  இந்த 77 ஏழை நாடுகளும் சேர்ந்து ஜி 20 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 78.286 டிரில்லியன் டாலரில் (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி) 1 சதமானம் அளவில் - 750 பில்லியன் டாலர்கள் அளவிற்குத் தான் கடன் வாங்கியுள்ளன. இந்த தொகையை ரத்து செய்யாமல், வெறுமனே 3 ஆண்டுகளுக்கு ஒத்திப்போடுவது என்ற ஜி 20 நாடுகளின் தற்போதைய முன் மொழிவு என்பது உண்மையில் இந்த நாடுகளின் கடன் சுமையை குறைக்க உதவாது. மூன்றாண்டுகள் ஒத்திப் போடுவதால் இன்னும் நிலைமை மோசமாகும். உலகப் பொருளாதாரம் ஏற்கனவே சரிவினை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், நிச்சயம் இன்னும் இரண்டாண்டுகளில் இன்னும் மோசமான நிலையைத் தான் எட்டும். அப்போது இந்நாடுகளின் ஏற்றுமதி வருமானம் இன்னும் குறையும். அப்போது இந்த பிரச்சனை அதிகமாகும். 

எனவே ஜி 20 நாடுகள் இந்த 77ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்வது ஒன்று தான் அந்த நாடுகளுக்கு உதவுவதாக இருக்கும். இது ஜி 20 நாடுகளுக்கு கடினமல்ல. உண்மையில் 1980களுக்குப் பிறகு சர்வதேச பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய ஜி20 சார்பில், ஜெர்மனி முன்னாள் அதிபர் வில்லி பிராண்ட் தலைமையில் அமைக்கப்பட்ட ‘பிராண்ட் கமிஷன்’, ஜி 20 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஒரு சதவீதத்தினை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் உதவியாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.  இதனை அப்போது எந்த நாடும் எதிர்க்கவில்லை. மாறாக அமல்படுத்தவுமில்லை. இப்படி ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட வேண்டியதில்லை. ஒரே ஒரு முறை ரத்து செய்தால் கூடப் போதும். ஆனால் பன்னாட்டு நிதி மூலதனம் இதனை ஏற்றுக் கொள்ளாது. ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  இன்னும் வரும் நாட்களில் இது போன்று நிறைய கேள்விப்படுவோம்.  நிதி மூலதனம் ஏற்க மறுக்கிறது என்பதற்காக, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட உதவிகளைச் செய்ய மறுத்தால் இந்த நாடுகளிலெல்லாம் மக்களும் போராட வேண்டிய நிலை வரும்.இவ்வாறு பேராசிரியர் பிரபாத் பட்நாயக் எச்சரித்துள்ளார்.
தொகுப்பு : ஆர்.எஸ்.செண்பகம்

;