tamilnadu

img

கேரள சுகாதார அமைச்சர் சைலஜாவுக்கு இலங்கை முன்னாள் பிரதமர் பாராட்டு

புதுதில்லி:
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை மிகவும் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தியமைக்காக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவினை, இலங்கை முன்னாள் பிரதமரும், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மே 18 அன்று ரணில் விக்ரமசிங்கே , அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்   கூறியிருப்பதாவது:

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் வாய்ப்பு வளங்கள் குறைவாக இருந்தபோதிலும்கூட, கொரோனா வைரஸ் தொற்றை வலுவான முறையில் கட்டுப்படுத்திட முடியும் என்று நீங்கள் மெய்ப்பித்திருக்கிறீர்கள்.தொற்றுநோய்களைக் கையாள்வதில், ‘கேரள மாடல்’ வெற்றி பெற்றிருக்கிறது. கேரளா இத்தொற்றுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் இன்றைய தினம்  உலகின் இதர பகுதியினருக்கு முன்மாதிரியான பல சிறந்த நடைமுறைகளை அளித்திருக்கிறது.

சோதனைச்சாவடிகள் (testing booths) ஏற்படுத்தி, மிகவும் விரிவான அளவில் சோதனைகள் மேற்கொண்டமை, தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும் என்பவர்களை சோதனை செய்து, வலுவான முறையில் அடையாளம் கண்டமை ஆகியவைதான் 3 கோடியே 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் வெறும் நான்கு பேர்களை மட்டுமே இழக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரையிலும் உள்ள நிலைமைப்படி, நம் பிராந்தியத்தில் மிகச்சிறந்த முறையில் விளங்குகிறது.உலகில் பல நாடுகள் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், உங்கள் தலைமையும் மற்றும் உங்கள் முயற்சிகளும் பாராட்டுக்களுக்குத் தகுதியானவைகளாகும்.இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே  குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே, ஏப்ரலில், தி இந்து நாளிதழுக்கு அளித்திருந்த நேர்காணலில், “நாங்களும் (இலங்கையும்) கேரளமும் மிகச் சிறந்த பொது சுகாதார முறையைக் கொண்டிருக்கிறோம். எனவே, இத்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாங்கள் இணைந்து செயல்பட முடியும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து கேரளம், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலகின் பல நாடுகளில் உள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்ததை, இலங்கையில் இயங்கிடும் ஊடகங்களும் விரிவான முறையில் பகிர்ந்திருந்தன. ‘நட்சத்திர சுகாதார அமைச்சர்’ (‘rock star health minister’) என்று கார்டியன் இதழ் புகழாரம் சூட்டியிருந்ததை இலங்கையில் இயங்கிடும் சமூக ஊடகங்களும் பகிர்ந்திருந்தன.

மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ஆலோசனை
மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப், திங்கள் கிழமையன்று, காணொலிக்காட்சி வழியாக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவிடம் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவருக்கும் இடையே ஆலோசனைகள் நடந்தன.  (ந.நி.)
 

;