tamilnadu

img

இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் விவரிக்கிறார் காஷ்மீர் விஷயத்திலும் மோடி அரசு தோல்வி!

புதுதில்லி, ஏப். 7 -

ஐந்தாண்டு ஆட்சியில், ஏனைய அனைத்துத் துறைகளிலும் மோடி அரசு தோற்றுப் போயிருப்பது போலவே, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் விஷயத்திலும் மோடி அரசு படுதோல்வி கண்டிருப்பதாக, இந்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் கூறியுள்ளார். இந்திய உளவுத்துறையின் (ஐவேநடடபைநnஉந க்ஷரசநயர) சிறப்பு இயக்குநராகவும், வெளிநாடுகளுக்கான உளவுப் பிரிவான ‘ரா’ (சுஹறு) அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஐபிஎஸ் அதிகாரி ஏ.எஸ். துலாத். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் குறித்து, ஏ.எஸ். துலாத் நேர்காணல் ஒன்றில் விமர்சித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:காஷ்மீர் விவகாரத்தை ஒவ்வொரு பிரதமரும் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். இவ்விஷயத்தில் நேருவுக்குப் பிறகு, வாஜ்பாய் நிறைய அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவை தோல்வியில் முடிந்தாலும் கூட, அந்த முயற்சிகளை அவர் கைவிடவில்லை. இதனாலேயே வாஜ்பாயின் முயற்சிகளை காஷ்மீரிகளே பெரிதும் விரும்பினார்கள். 2014-இல் பிரதமரான மோடி மீதும், துவக்கத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். ஆனால், ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதன் மூலமாக, தான் வாஜ்பாய் அல்ல என்பதை விரைவிலேயே மோடி உணர்த்தி விட்டார். வாஜ்பாய் மேற்கொண்ட அமைதி முயற்சிகளை அவசியமானதென மோடி கருதவில்லை. தனது பதவியேற்பு விழாவிற்கு நவாஸ் செரீப்பை அழைத்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதற்குமேல் எதையும் செய்யவில்லை.காஷ்மீரில் செயல்படும் யாசின் மாலிக் மற்றும் மீர்வெய்ஸ் போன்றவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. கடந்த 2002-ஆம் ஆண்டு பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் சிலர் தேர்தலிலும் பங்கேற்றார்கள். 2004-ஆம் ஆண்டு அப்போதைய துணைப்பிரதமராக இருந்த அத்வானி, பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வாஜ்பாயும் அவர்களைச் சந்தித்துப் பேசினார். இவர்கள் அனைவருக்கும், பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனாலேயே தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, கார்கில் போர், விமானக் கடத்தல், நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டார். எனினும் அவர் கடைசிவரை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது கிடையாது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மும்பைத் தாக்குதலை எதிர்கொண்டார். இவர்களோடு ஒப்பிடுகையில், மோடி ஒரு அதிர்ஷ்டசாலி. புல்வாமா தாக்குதல்தான் அவர் சந்தித்த பெரிய சோதனை. இருந்தும் அவர் காஷ்மீர் சிக்கலை அதிகப்படுத்தி விட்டார்.வாஜ்பாய் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அவர்களெல்லாம் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களைத் தவிர அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். இவ்வாறு இருந்தால் காஷ்மீர் விவகாரத்தில் எப்படி முன்னேற்றம் ஏற்படும்? காஷ்மீர் விவகாரத்தை தனது தவறான அணுகுமுறையால் மோடி குலைத்து விட்டார்.இவ்வாறு ஏ.எஸ். துலாத் கூறியுள்ளார்.

;