tamilnadu

img

எப்ஐஆர் கூட பதியாத  காவல்துறையினருக்கு  எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் கண்டனம்

புதுதில்லி:
வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக செய்திகள் வெளியிட்ட பத்திரிகையாளர்களைத் தாக்கிய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை பத்திரிகையாளர் சங்கமும், தில்லி சிவில் சமூக உறுப்பினர்களும் கண்டித்துள்ளனர்.புதுதில்லியில் உள்ள ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’-வில் வியாழனன்று பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அருந்ததி ராய், ஆனந்த் சஹாய், ஷாஹீத் அப்பாஸ், ஹர்தோஷ் சிங் பால் முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த சமயத்தில் வடகிழக்கு தில்லியில் குண்டர் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் தாங்கள் எவ்வாறெல்லாம் தாக்குதலுக்கு ஆளானோம் என்பதையும், தாங்கள் இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் செய்யச் சென்றபோது அவர்கள் தங்களிடம் மிகவும் பொருத்தமற்றமுறையில் நடந்துகொண்டதையும் விவரித்தார்கள்.தி கேரவன் இதழின் பெண் செய்தியாளர் தில்லிக் கலவரங்கள் சம்பந்தமாக தன் இருசக ஊழியர்களுடன் செய்தி தயார்செய்துகொண்டிருந்த சமயத்தில் ஆகஸ்ட் 11 அன்று வடக்கு கோண்டா பக்கத்தில் குண்டர் கும்பலால் தாக்கப்பட்டது குறித்தும், பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் வெளியிட்டிருந்த அறிக்கையை ஹர்தோஷ் சிங் பால் வாசித்தார். இந்தத் தாக்குதலைத் தொடுத்த கயவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசாந்த் பூஷன் பேசுகையில், இவ்வாறு புகார் அளித்தபிறகும்கூட காவல்துறையினர் அதன்மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவில்லை. இது, காவல்துறை அமைப்பு முற்றிலுமாக முறிந்து போயுள்ளதையே காட்டுகிறது என்று கூறினார். (ந.நி.)

;