tamilnadu

மத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பு...

இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள பட்ஜெட் செலவினம்,   30 லட்சத்து, 42ஆயிரத்து, 230கோடி ரூபாய்களாகும். ஓர் ஊக்குவிப்பு என்பது, இதைவிடக் கூடுதல் தொகை என்று பொருளாகும். இவர்கள் பட்ஜெட்டில் அறிவித்த செலவினங்களையே செய்திருக்கிறார்களா, இல்லையா என்று எவருக்கும் தெரியாது. அரசாங்கத்தின் வருவாய்கள், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதுதெளிவாகும். சமூக முடக்கக் காலத்தில் அது மேலும் மோச மாக மாறியிருக்கிறது. எனவே, இவர்கள் அறிவித்துள்ள கூடுதல்செலவினமும் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படும் என்பதும்மிகவும் நிச்சயமற்ற தன்மையேயாகும்.   சரியாகச் சொல்லவேண்டுமென்றால், அரசாங்கம், அறிவித்துள்ள “ஊக்குவிப்பு” உண்மையில் மேற்கொள்ளப்படுகிறதா, இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு, அது தன்னுடைய வருவாய்கள் மற்றும் செலவினங்களை காட்டும் பட்ஜெட் அறிக்கையை அறிவித்திட வேண்டும்.

முழுவீச்சில் தனியார்மயம் மற்றும் தாராளமயம்
நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப்போல, அனைத்துத்துறைகளும் அந்நிய நேரடி முதலீட்டிற்கும், உள்நாட்டுக்கார்ப்பரேட்டுகளுக்கும், இப்போது அகலத் திறந்துவிடப்பட்டிரு க்கின்றன. இந்தத் தனியார்மயம், நாட்டின் சொத்துக்களை அரசாங்கத்தின் தினச் செலவுகளுக்காக விற்பனை செய்வதுபோன்றதாகும். இது, ஓர் விவசாயி தன்னுடைய தினசரி செலவுகளுக்காக, தன்னுடைய நிலத்தை விற்பது போன்றதாகும். இச்செயல் பொருளாதார அறிவுடனும் செய்யப்படவில்லை, சாமானியப் பொது அறிவுடனும் கூட செய்யப்படவில்லை. எனினும், இது இரக்கமற்ற கொள்ளை லாப வேட்டைக்கான பாதையாகும். நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதற்கு, தொழிலாளர்வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்புவந்துவிடக் கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதற்காகத் தான், எட்டு மணி நேர வேலை மற்றும் தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற முக்கியமான உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தொழிலாளர் நலச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது, வெளிப்படையான சூறையாடல் மற்றும் சர்வாதிகாரத் தாக்குதல்களின் ஒரு கூட்டுக் கலவையாகும்.

வேளாண்மை: பொது முதலீடுகளின் மூலமாக விவசாயநெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மீண்டும், விவசாயிகளுக்குக் கடன் வசதிகள் செய்துதரப்படும் என்று கூறி யிருக்கிறார்கள். விவசாயிகள், ஏற்கனவே பெற்ற கடன் சுமைகளிலிருந்து மீளமுடியாமல் தற்கொலைகளைச் செய்துகொண்டிருக்கக்கூடிய தருணத்தில், புதிய கடன்களை அவர்கள்பெற முன்வருவார்களா என்பது அநேகமாக சந்தேகம்தான்.இந்தத் தருணத்தில் என்னசெய்ய வேண்டும்? அறுவடைக் காலம் வந்திருக்கிறது. அறுவடை செய்த பயிர்கள் அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன. இது குறித்தெல்லாம் ஒருவார்த்தை கூட இந்தத் தொகுப்பில் காணப்பட வில்லை. அடுத்த விவசாயப் பருவமும் ஜூன் மாதத்தில் துவங்கஇருக்கிறது. விதைகள் மற்றும் இடுபொருட்கள் பற்றாக்குறைகடுமையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு இவற்றை யெல்லாம் அளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை.   
இந்தத் தொகுப்பில்  குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், சந்தைகள் குறித்தெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இருந்துவரும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தைக் கிழித்தெறிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம் உணவு தானியங்கள் மாநிலங்களுக்கிடையே முறைப்படுத்தப்படாத விலைகளின் அடிப்படையில் விற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. இது, எதிர்காலத்தில் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திடும். 

மாநிலங்களின் மீதான தாக்குதல்கள்
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடித்திடும் நடவடிக்கைகளில் மாநில அரசாங்கங்கள் முன்னணியில் நிற்கின்றன. அவற்றுக்கு உரிய வாய்ப்பு வசதிகளைச் செய்துதரவில்லை என்பது மட்டுமல்லாமல், இந்த நிதித்தொகுப்பா னது அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டிநிலைவைத் தொகைகள் அளிக்கப்படும் என்கிற உத்தர வாதத்தைக்கூட அளிக்கவில்லை. மாநில அரசாங்கங்கள் தற்போது தங்களுடைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 முதல் 5 சதவீதம் வரை கடன்பெறும் வரம்பை உயர்த்திக்கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. எனினும், இவ்வாறுவரம்பை உயர்த்தியிருப்பதன் பொருள் அநேகமாக எதுவும் கிடையாது. ஏனெனில், இவ்வாறு உயர்த்தியிருக்கும் கடன் வரம்பு, வணிக அடிப்படையில்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதிக வட்டி விகிதத்தில் மாநிலங்களைத் தள்ளி இருப்பது அவற்றுக்கு பெரிய அளவில் கடன் சுமைகளை ஏற்படுத்திடும். இந்திய ரிசர்வ் வங்கி மாநில அரசாங்கங்களால் வெளியிடப்படும் பத்திரங்களை அறிவிக்கப்படும் ரெபோ விகிதத்தில்’ வாங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தத் தொகுப்பு இது தொடர்பாக எதுவும் கூறவில்லை.

எல்லாவற்றையும்விட மோசமான விஷயம் என்ன வென்றால், மத்திய அரசாங்கம் தற்போது பேரிடர் நிவாரண நிதியத்தின்கீழ்  சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய மாற்றல்களைக் (statutorily mandated transfer) கூட, மாநிலங்களுக்கு ஓர் ஊக்குவிப்புத் தொகுப்பாக அளித்ததாக, அல்லது, மத்திய அரசு, மாநில அரசுகள்மீது காட்டிய “தாராளம்” என்பதுபோல் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. மத்திய அரசாங்கம், பிஎம்கேர்ஸ் என்னும் பெயரில் ஏற்படுத்திய தனியார் அறக்கட்டளையின்கீழ்  வசூலித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களிலிருந்து, மாநிலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்காக நிதி உதவிகளைச் செய்திட வேண்டும்.இந்த நிதித்தொகுப்பின் பல்வேறு அம்சங்கள் ஆய்வுசெய்து பார்க்கப்படும் போது, இவற்றில் பல நீண்டகால நடவடிக்கைகளாக இருப்பதையும், நாட்டின் பொருளாதாரத்திற்கோ, அல்லது, அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ, உடனடி ஊக்குவிப்பு அளிக்கக்கூடிய விதத்தில் எதுவும் இல்லாமல் இருப்பதையுமே காட்டுகின்றன. நிதித் தொகுப்பின் இதர அம்சங்கள் குறித்து தனியே ஆய்வு செய்யப்படும்.

கட்சியின் பொருளாதார செயல்திட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நடப்பு நிலைமையில் பின்பற்றப்பட வேண்டிய, பொருளாதார செயல்திட்டம் ஒன்றை பொதுவெளியில் வெளியிட்டு, அதில் தன்னுடைய பரிந்துரைகளையும் தெரிவித்திருக்கிறது. அதனைக் குடியரசத் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அதில் நாம், அரசாங்கத்தால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதாரத் திட்டம்என்ன என்பதை முன்வைத்திருக்கிறோம். பொருளாதார நெருக்கடியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாங்கொணா வேதனைகளும் தீர்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என்ன என்று அதில் குறிப்பிட்டிருக்கிறோம். இந்த மூன்று நடவடிக்கைகளையும்  இப்போது மேற்கொள்ள வேண்டும்.“மத்திய அரசாங்கம் நமது பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் சரி செய்ய நாம் அளித்துள்ள இந்த முன்மொழிவுகளை உடனடியாக உரிய அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. “இந்த நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் உடனடியாக மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நிர்பந்தங்களையும் அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேட்டுக் கொள்கிறது.” 

இந்த செயல்திட்டம், இந்தியப் பொருளாதாரத்தைப் பீடித்துள்ள அடிப்படை பிரச்சனை என்ன என்பதை சரியாக அடையாளம் காட்டியது. இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே,கொரோனா வைரஸ் தொற்று வருவதற்கு முன்பே, பொருளாதார மந்த நிலைக்குள் (recession) நுழைந்துவிட்டது. இதன் காரணமாக மக்களின் தேவைகள் அனைத்து அளவிலும் கூர்மையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி மிகவும் கூர்மையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, பொருளாதாரத்தில் கிராக்கியின்மை (lack of demand) ஏற்பட்டு, ஏராளமான தொழில் பிரிவுகள் மூடப்படுவதற்கும், பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படுவதற்கும் இட்டுச்சென்றன. இந்த நிலைமை தேசிய சமூக முடக்கக் காலத்தில்மேலும் மோசமாகியது. ஆகையால், மக்களின் கைகளில் வாங்கும் சக்தியை அதிகரிக்கக்கூடிய விதத்தில் பொருளா தாரத்தை புதுப்பித்திட வேண்டிய முக்கிய பிரச்சனையை உடனடியான, குறுகிய கால மற்றும் நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பொது முதலீடுகள்: இதனை கடன்கள் அளிப்பதன் மூலமாகச் செய்திடாமல், அரசாங்கம் நேரடியாக செலவு செய்வதன் மூலமாகவே மேற்கொள்ள முடியும். நம் நாட்டிற்கு அதிக அளவில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட மிகப்பெரிய அளவில் பொது முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை தனியார் மூலதனத்திடம் ஒப்படைப்பது என்பது எப்போதும் வெற்றி பெற முடியாது. ஏனெனில் அவர்கள் இவற்றுக்காக முதலீடு செய்வதிலிருந்து லாபத்தை எடுப்பதற்கு வெகு காலமாகும் என்பதால், அவர்கள் இதற்காக கடன்களை எழுப்புவார்கள். எனவே, உலகில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் அனைத்துமே – அமெரிக்கா முதல் மக்கள் சீனக் குடியரசு  வரையிலும் – அரசாங்கங்கள்தான் பொது முதலீடுகள் மூலமாக உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதில் பிரதான பங்கினை ஆற்றி இருக்கின்றன. இன்றைய நிலைமைகளில் எவ்விதமான நிதித் தொகுப்பாக இருந்தாலும் இத்தகைய அணுகுமுறைதான் இருந்திட வேண்டும்.
இத்தகைய பொது முதலீடுகள் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்ப,  கோடானுகோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இட்டுச் செல்லும். தொழிலாளர்கள் தாங்கள் ஈட்டிய ஊதியங்களைச் செலவு செய்யத் தொடங்கிவிட்டார்களானால், உள்நாட்டுத் தேவை உயரத் தொடங்கிடும், பின்னர் அதன் காரணமாக, மூடிய தொழிற்சாலைகளும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளும் மீண்டும் திறக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும்.

மறுதொகுப்பு திட்டங்களால் புத்துயிரூட்ட முடியாது
இவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்த அரசாங்கத்தின் நிதித்தொகுப்பு, கார்ப்பரேட்டுகளுக்கும் மற்றும் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளுக்கும் முதலீடு செய்வதற்காகப் பெரிய அளவில் மூலதனத்தை அளிப்பதன் மீதுகவனம் செலுத்தி இருக்கிறது. லாபம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே எவரும் முதலீடு செய்திட முன்வருவார்கள். பொருளாதாரத்தில் கிராக்கி இல்லை என்கிறபோது, இத்தகைய முதலீடுகளின் மூலம் உற்பத்தியாகும் பொருள்கள் உள்நாட்டில் விற்க முடியாது. அவற்றை சர்வதேச அளவிலும் விற்க முடியாது. ஏனெனில் உலகப் பொருளாதார நிலைமையும் மந்தமாகவே இருக்கிறது.

எனவே லாபம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகளே இருக்க முடியாது. எவ்வளவுதான் அரசாங்கம் நிதியைக் கொட்டிக்கொடுத்தாலும், எவ்வளவுதான் அத்தகைய நிதிச் செலவினத்தைக் குறைத்தாலும், பொருளாதாரத்தில் கிராக்கி இல்லையேல் அவற்றால் வேலை செய்ய முடியாது.எனவே, மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பால் நம் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்ட முடியாது. எனினும் இந்த நிதித்தொகுப்பின் உண்மையான நோக்கம், நாம் முன்பே கூறியதுபோல், முன்பு அறிவித்த திட்டங்களுக்கான மறுதொகுப்பேயாகும். மேலும், கொரோனா வைரஸ் தொற்றாலும், சமூக முடக்கத்தாலும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களை அளித்து அவர்களைச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கிடும் சமயத்திலேயே, நாட்டின் சொத்துக்களை எந்த அளவிற்கு வேகமாகச் சூறையாட முடியுமோ அந்த அளவிற்குச் சூறையாட வேண்டும் என்பதுமேயாகும்.

இவர்களின் இந்தப் பாதை, இந்தியாவின் பொருளாதார சுயச்சார்பின் நலன்களுக்கு எதிரானதாகும். இந்தப் பாதை, இந்திய மக்களின் நலன்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் வளத்திற்கு எதிரானவைகளாகும். இந்தப் பாதை கூட்டுக் களவாணி முதலாளித்துவத்திற்கு வசதி செய்து கொடுக்கும் பாதையாகும். அதன் மூலம் ஆளும் கட்சிக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய விதத்தில் ஆதாயங்கள் கிடைத்திடும் என்பதில் ஐயமில்லை. இந்த மக்கள் விரோதப் பாதையை ஏற்க முடியாது.
இப்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக முடக்கக் காலத்தின்கீழ், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இப்போதைய நிலைமையில், நாட்டின் கோடானுகோடி மக்களின் உடனடித் தேவைகளுக்கு உடனடியாக உதவிடும் விதத்தில், இந்த அரசாங்கம் இந்தப் பாதையில் செல்வதை மாற்றுவதற்குத் தேவையான அளவுக்கு மக்களின் நிர்ப்பந்தங்களை வலுப்படுத்திட வேண்டும்.        

====தமிழில்:ச.வீரமணி===

;