tamilnadu

img

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே....

புதுதில்லி:
நிலக்கரி சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கக்கூடாது என்று வலியுறுத்தி  ஜூலை 2 முதல்  4 ஆம் தேதி வரை மூன்று நாட்களில்  நாட்டிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் அனைத்து சங்கங்களும் மற்றும் சம்மேளனங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனக் கூட்டாக முடிவெடுத்திருப்பதை, சிஐடியு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிடடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அந்நியர்கள் உட்பட தனியார் நம் நாட்டின்நிலக்கரிச் சுரங்கங்களை வணிகரீதியில் பயன்படுத்துவதற்காக அனுமதித்து மத்திய அரசு எடுத்திருக்கும் நாசகரமான முடிவிற்கு சிஐடியுதனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதுடன் இது இணைந்திருக்கிறது. இத்தகைய படுபிற்போக்குத்தனமான முடிவுகள் 1970 இல், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தி, நாட்டின் நலன்களுக்காக நிலக்கரிச் சுரங்கங்களைத் தேசியமயமாக்கியதை அடியோடு மாற்றியமைப் பதைக் குறிக்கோளாகக் கொண்டு, மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இது நிலக்கரிச் சுரங்கத்தொழிலில் இருந்துவரும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு வழிவகுத்திடும். நிலக்கரிச் சுரங்கங்களை முழுமையாக வணிகமயப்படுத்தி, அந்நிய நிறுவனங்கள் உட்படதனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மத்தியஅரசின் இந்த முடிவு, நாட்டின் தொழிற்சாலைகள் மற்றும் சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உதாசீனம் செய்துவிட்டு, நிலக்கரி போன்ற கேந்திரமான இயற்கை வளங்களில் அரசின் கட்டுப்பாட்டையும் வர்த்தகத்தையும் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைப்பதனைக் குறியாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தின் தன்னிறைவின் மீதும் நாசகரமான முறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும்.

அரசின் இத்தகைய நாசகர முடிவுக்கு எதிராக நிலக்கரித் தொழிலாளர்களின் அனைத்து சம்மேளனங்களும்/சங்கங்களும் இணைந்து, பொதுத்துறையைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் தன்னிறைவைப் பாதுகாப்பதற்காகவும்  ஜூலை 2 முதல்  4 ஆம்தேதி வரை மூன்று நாட்களில்   வேலை நிறுத்தம்மேற்கொள்ள முடிவு எடுத்திருப்பதனை, சிஐடியுபாராட்டுகிறது, வாழ்த்துகிறது. சிஐடியு, இப்போராட்டத்திற்கு தனது முழு ஆதரவினை யும் உரித்தாக்கிக் கொள்கிறது.சிஐடியு, நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கம்சங்க வித்தியாசமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் களுக்கு ஆதரவு அளித்திட வேண்டும் என்று, அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
(ந.நி.)

;