tamilnadu

img

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்... மாற்றுத் திறனாளிகளை பாதிக்கும் வகையில் திருத்தம் செய்ய பாஜக அரசு முயற்சி

புதுதில்லி:
2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தில் சில ஷரத்துக்களில் திருத்தங்கள் கொண்டுவர நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் ஷரத்துக்களில் சிலவற்றை நீர்த்துப்போகச் செய்திடும் விதத்தில் திருத்தங்கள் கொண்டுவர மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது.அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்தத் திருத்தங்கள், சில குற்றங்களை குற்றவியலின்கீழ் குற்றமாகாது (“decriminalize”) என்று கூறுகிறது. சில குற்றங்களை அற்பம் (‘மைனர்’) என்கிறது. சில குற்றங்களை சேர்த்தும், நீர்த்துப்போகவும் செய்திருக்கிறது. இவை அனைத்தும் இந்தச் சட்டத்தின் இயல்பான தன்மையையே அடியோடு மாற்றி அமைத்திருக்கின்றன. இதற்கு முன்பிருந்து, இப்போது நீக்கப்பட்டிருக்கிற 1995ஆம் ஆண்டு ஊனமுற்றோர் சட்டத்திலிருந்து இப்போதுள்ள 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முற்போக்கான அம்சங்களில் ஒன்று  ஊனமுற்றோரின் உரிமைகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தண்டனைப் பிரிவுகளேயாகும்.

மனித உரிமைகளை காவு கொடுப்பதா?
இத்தகைய ஷரத்துக்கள் “அச்சுறுத்திக் கட்டுப்படுத்து பவைகளாக இருக்கின்றன” என்றும், “இதுதான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்குத் தயங்குவதற்கான பெரிய காரணங்களில் ஒன்றாக உணரப்படுகிறது,” என்றும் அரசாங்கத்தால் கூறப்படுவது கேலிக்குரியவைகளாகும். இவற்றை ஏற்க முடியாது. “வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்துவது” (“Ease of doing business”) என்பதை, நீண்ட நெடிய போராட்டங்களின் மூலமாக வென்றெடுத்த அடிப்படை மனித உரிமைகளைக் காவு கொடுப்பதன் மூலம் ஏற்படுத்திட முடியாது. சமூகத்தில் பல்வேறு வகையிலான பாகுபாடுகளை எதிர்கொள்கின்ற மிகவும் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்காக நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் அனை வருக்கும் பொறுப்பையும் இணக்கத்தையும் உறுதிப்படுத்து வதற்காகவே ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்கீழ் இந்த ஷரத்துக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.இப்போது அரசாங்கமே ஒப்புக்கொள்வதுபோல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டிருக்கின்ற இந்தத் திருத்தங்கள், நம் நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா வைரஸ் தொற்று நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தால் தங்குதடையின்றி சூறையாடுவதற்காக, அகலத் திறந்து வைப்பதற்கான மோடி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவி செய்வதேயாகும்.

ஊனமுற்றோர் நீண்ட நெடிய போராட்டங்களின் மூலம் பெற்ற ஆதாயங்களை மறுதலித்திட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்பவை  நம் நாட்டிலுள்ள ஜனநாயகஉரிமைகள், ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கருத்து வேறுபாடுகளை கூறுவோரைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியமைத்தல் போன்றவற்றுடன் ஒத்துப்போகின்றன.   நாட்டில் சமத்துவம், நீதி மற்றும் பாகுபாடின்மை ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் இத்திருத்தங்களுக்கு எதிராகப் போராட்டப்பாதை யில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான அமைப்புகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஒருமைப் பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ந.நி.) 

;