tamilnadu

img

ஆழ்துளை கிணறுகள் : கற்க வேண்டிய பாடம் - ஐ.வி.நாகராஜன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடு காட்டுபட்டி என்ற கிராமத்தில் கடந்த 25.10.2019 மாலை 4.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற 2 வயது குழந்தையை மீட்பதற்கு பல்வேறு குழு வினர் 80 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் பலனளிக்கவில்லை. இருப்பினும் 4 நாட்களாக பல்வேறு குழுவினர், தொண்டு நிறுவனம், சமூக ஆர்வலர்கள். அரசு அதிகாரிகள் என அனை வரும் எடுத்துக்கொண்ட கடும் முயற்சி பாராட்டுக் குரியது. எனினும் ஒரு விசயத்தை முன்கூட்டியே முடிவு செய்யமுடியாமல் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகுதான் விழித்துக் கொள்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை.  ஆழ்துளைக் குழியில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற ஆபத்திலிருந்து மீட்பதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்குவதற்கு மத்திய - மாநில அரசுகள் தயாராக இல்லை. 

ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கியது தொடர்பாக 8 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தி லேயே முதன் முறையாக நெல்லையில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இத்தனை ஆண்டுகளை கடந்தும் தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் சிக்கும் சோகம் இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகேயுள்ள கைலாசநாதபுரம் என்னும் கிராமத்தில் 2011 செப்டம்பர் 7 அன்று அங்குள்ள மலையரசன் சுடலைமாடசாமி கோவிலில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்தன. கோவிலுக்கு அருகில் கொடை விழா பயன் பாட்டிற்காக தனியார் ஒருவரின் நன்கொடை மூலம் சுமார் 200 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. அதில் பாறை அதிக மாகவும், தண்ணீர் இல்லாமலும் போனதால் போர்வெல் பணியை நிறுத்தினர். அந்த குழியை மூடவில்லை. இந்நிலையில் மறுநாள் காலையில் அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவ ருடைய மகன் 5 வயது சுதர்சன் என்ற சிறுவன் அங்கு ஓடி விளையாடிய போது குழிக்குள் தவறி விழுந்து விட்டான். 

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், கடற்படை வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சிறுவனை உயிரோடு மீட்கும் முயற்சியில் ஈடு பட்டனர். நடுகாட்டுபட்டியில் நடந்த சம்பவம் போல் சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டு 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரவில் சிறுவன் மீட்கப்பட்டான்.  பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தவறு இழைத்த வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. இதை தொடர்ந்து விஜயநாராயணம் காவல் துறை விசாரணை நடத்தி போர்வெல் புரோக்கர்கள் -மற்றும் உரிமை யாளர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  கடந்த 2013 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்த குழந்தை பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது. இந்த சம்பவத்தை அடுத்து சிவகாமி எனும் சட்டக் கல்லூரி மாணவி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஆழ்துளை கிணற்றுக் கான சட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றி கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூபாய் 1 லட்சத்தை உடனடியாக நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அந்த தொகையை ஆழ்துளை கிணற்றை சரியாக பராமரிக்காத சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு அந்த பொதுநல வழக்கை முடித்து வைத்தது.

அதன்பிறகு தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் விதிகள் சட்டம் 2015 –ஐ தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் 2015 பிப்ரவரி 18 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி பாதுகாப்பு நெறிமுறைகள் அமல்படுத்தப் பட்டன. ஆழ்துளை கிணறு வெட்டுவதற்கான உரிமம் வைத்திருக்கும் நபர் அல்லது கிணற்றின் உரிமையாளர் கிணறு புதிதாக தோண்டும் போதும் அல்லது ஆழப்படுத்தும் போதும் அல்லது சீரமைக்கும்போதும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று சில பரிந்துரைகளை உரு வாக்கியது. அது கீழ்கண்டவாறு உள்ளது:

  • கிணறு தோண்டும் பணியாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் வேலை செய்கிறார் என்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை செய்யும் பணியாளர்கள் உரிய உரிமத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும். 
  • கிணறு தோண்டும் பணியை சற்று நிறுத்தினாலோ அல்லது ஓய்வெடுத்தாலோ கிணறு மூடி இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை கண்டிப்பாக சமதளமாக மூடிவிட வேண்டும்.
  • ஆழ்துளை கிணறுகள் வெட்டும்போ தும், சீரமைக்கும்போதும் இத்தகைய நடை முறைகள் உறுதியாக கடைபிடிக்கப்பட வேண்டும். கிணறு வெட்டும்போது அதன் நீளம், அகலம், நிலத்தின் உரிமையாளர் முகவரி ஆகியவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் படி விளம்பர பலகை வைக்க வேண்டும்.
  • எந்த காரணத்தை கொண்டும் வேலை செய்யும்போது திறந்த கிணற்றை விட்டு பணி யாளர்கள் வெளியே செல்லக் கூடாது. கிணறு வெட்டி பணி நிறைவடைந்த உடன் ஆழ்துளை கிணற்றில் வாயை மூடி பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ஆழ்துளை கிணற்றின் பணி சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். பணியில் திருப்தி இல்லை எனில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதுகாப்பு விசயத்தில் நிலத்தின் உரிமையாளர் நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்கவில்லை எனில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற பரிந்துரைகள் உரு வாக்கப்பட்டுள்ளன.

அதனையும் தாண்டி நிலத்தின் உரிமை யாளர் கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனை  சட்டப்பிரிவு 304-11 படி நிலத்தின் அல்லது கிணற்றின் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்ய லாம். இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.  ஒவ்வொரு முறையும் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பிரச்சணை ஏற்படும் போதுதான் இந்த சட்டத்தை அமல் படுத்துகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய சட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி கள் முறையாக அமல்படுத்தினால் சிறுவன் சுஜித் போன்ற குழந்தைகளுக்கு ஏற்பட்ட சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும். இனியாவது இந்த சட்டத்தை கண்டிப்பாக அமல்நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.