tamilnadu

img

பேருந்துக்கு தீ வைக்கும் போலீசார்?

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தில்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர், இதைத்தொடர்ந்து மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களே வாகனங்களுக்கு தீ வைத்ததாக காவல் துறையினர் குற்றம் சாட்டினர். 
ஆனால் காவலர் ஒரு எரிபொருளை வாகனங்கள் மீது ஊற்றுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல காவல் துறையினருடன் இணைந்து முகமூடி அணிந்த நபர் மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
இதுகுறித்து துணை முதல்வர் சிசோடியா தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இந்த புகைப்படத்தை பாருங்கள்... பேருந்து மற்றும் கார்களுக்கு யார் தீ வைப்பது என்பதை.. பாஜகவின் பரிதாப அரசியலுக்கு இந்த புகைப்படம் மிகப்பெரிய சான்று... இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க முடியுமா?.. என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.