tamilnadu

img

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

மீரட் ஆவணம்  

      நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு பைஸ்பூரில் நடைபெற்றது. இந்த மாநாடு மேலே குறிப்பிட்ட மீரட் ஆவணத்தின் சில கருத்துக்களை மேலும் செழுமைப்படுத்தியது:

“ காங்கிரஸ் கட்சியை நாம் ஒரு அடிப்படை அலகாக எடுத்துக்கொண்டு, துவக்கப்புள்ளியாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஐக்கியப்படுத்திய ஒரு முன்னணியாக அதை மாற்றுவதற்கான முயற்சியை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக இந்திய மக்களில் விரிவான அளவில் பல்வேறு சக்திகளை ஐக்கியப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெற்றிபெற்றிருக்கிறது. இதில் இன்னும் அணிசேராமல் எஞ்சியிருப்பது தேசிய விடுதலை கோரும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட முதன்மையான வெகுமக்கள் இயக்கங்கள்தான்...காங்கிரஸ் கட்சியே ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் என்றபோதிலும் அதன் தலைமை என்பது பிரதானமாக நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளிடம் இருக்கிறது. எனவே அதன் நலன்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு அல்லாமல், மாபெரும் மக்கள் திரளின் விடுதலைப் போராட்டத்தை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்துக் கொண்டு செல்ல அந்த தலைமையால் இயலவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமை நீண்டகாலத்திற்கு ஒற்றுமையாக இருக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சமீபத்தில், காங்கிரசுக்குள் மிகத்தெளிவான சிந்தனை கொண்ட இடதுசாரி இயக்கம் உருவாகியுள்ளது. இந்த வளர்ச்சிப்போக்கு, காங்கிரஸ் தலைமையிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது...

நமது இலக்கு என்பது, காங்கிரஸ் கட்சிக்குள் அதன் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ தலைமையிடமிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை பிரித்து கொண்டுவருவது மட்டுமல்ல, காங்கிரஸ் இயக்கத்தையே ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக விரிவுபடுத்தவும் வளர்த்துக்கொண்டு செல்லவும் செய்வது என்பதுதான்.” காங்கிரசை இத்தகைய மாற்றத்துக்கு உள்ளாக்கும் பொருட்டு, அனைத்து சோசலிச சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் தேவை இருக்கிறது என்ற முடிவுக்கு பைஸ்பூர் ஆவணம் வந்தது: “ இந்த சக்திகள் (சோசலிச சக்திகள்) துரதிர்ஷ்டவசமான முறையில் இன்னும் பிரிந்தே கிடக்கின்றன. துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் தலைவர்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறது... சோசலிஸ்ட்  தலைவர்களிடையே ஒற்றுமை அல்லது செயல்பாடுகளில் இயைந்து செல்வது என்பதையும் தாண்டி, இடதுசாரி சக்திகள் ஒருங்கிணைந்து நிற்பதும் கட்சியின் தலைமைக்குள் புரிந்துணர்வு மேம்படுவதும் மிகமிக அவசியமாகும்.”

( நூல் ஆதாரம்:இந்தியாவில் சோசலிச இயக்கம், அசிம்குமார் சவுத்ரி,அத்தியாயம் 2).

இப்படியாக,புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைமை, அதற்கு முன்பே தோன்றிய சோசலிஸ்ட் -கம்யூனிஸ்டுகளின் குழுக்களோடு மிகப்பெரிய அளவிற்கு இருந்த இடைவெளியை நிரப்புவதற்கான-கைகோர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. இவர்களோடு,1930 களின் துவக்கத்தில் சர்வதேசிய-தேசிய வளர்ச்சிப்போக்குகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோடு செயல்பட்டு, தலைமை பொறுப்புக்கு வந்த சில தலைவர்களுடனும் கைகோர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்த முயற்சிகளின் மையமான அம்சம் என்னவென்றால், மறு சீரமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் ஒன்றுபட்டு செயல்படுவது என்பதுதான். எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே ஒரு முறையான ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷியும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம்தான் , இரண்டாம் உலகப்போர் வெடிப்பதற்கு முன்பு இந்தியாவில் நடந்த மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சிகளில் மிகப்பெரும் பங்கினை ஆற்றியது. இந்த ஒப்பந்தம், இந்திய தொழிற்சங்க இயக்கத்தை ஒன்றுபடுத்த உதவியது. அடுத்தடுத்து ,விவசாயிகள் இயக்கமும் மாணவர் இயக்கமும் உருவாவதற்கு வழிகோலியது. தொழிற்சங்க இயக்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் விவசாயிகள், மாணவர் இயக்கங்களின் தோற்றம் ஆகிய இரண்டும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் விரிவான ஒற்றுமையை நோக்கிய நடவடிக்கைகளாக அமைந்தன. அதேநேரத்தில் காங்கிரசாரில் முற்போக்குப் பிரிவினருக்கு அது உதவியது; காங்கிரஸ் அமைப்பிற்குள் வலுவாக அணிதிரட்டப்பட்ட இடதுசாரி இயக்கம் வளர்வதற்கும் அக்கட்சியின் வலதுசாரி தலைமையின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைவதற்கும் வழிவகுத்தது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மகாத்மா காந்தியின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டது என்பது காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி சக்திகளிடையே வலுவடைந்த ஒற்றுமையின் பலனாக ஏற்பட்ட மிகமிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்பட்டது. மகாத்மா காந்தி இந்த தோல்வியை, தனது தனிப்பட்ட தோல்வி என்று கூறுமளவிற்கு நிலைமை இருந்தது.  

புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் மறு கட்டமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும் இடையிலான ஒப்பந்தம் இந்த இரண்டு கட்சிகளை மட்டும் ஒருங்கிணைக்கவில்லை; அதையும் தாண்டி பெரும் எண்ணிக்கையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க உதவியது.காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகளின் மிக உயர்ந்த தலைவர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களும் இந்த ஒப்பந்தத்தோடு விரிவான அளவில் ஒருங்கிணைப்பு கொண்டிருந்தார்கள். இரண்டாண்டு காலம் காங்கிரஸ் தலைவராக இருந்து நேரு வெளியிட்ட பிரகடனங்கள், அதைத்தொடர்ந்து போஸ் பிரதிபலித்த கருத்துக்கள் , இவையெல்லாம் அந்த இருபெரும் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாக அல்ல ; மாறாக காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒட்டுமொத்த இடதுசாரிகளின் கருத்துக்களாக வெளிப்பட்டன. 

அனைத்து இடதுசாரிகளிடையே இத்தகைய விரிவான ஒப்பந்தம் எப்படி சாத்தியமானது என்றால், அந்த சமயத்தில் உலக அரசியலில் மாபெரும் சகாப்தத்தை படைக்கும் விதத்தில் முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே மிகப்பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது ; போருக்கும் அமைதிக்கும் இடையிலான போராட்டம் நடந்துகொண்டிருந்தது என்பதுதான் காரணம். மிகப்பெரும் எண்ணிக்கையிலான காங்கிரஸ்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள். இவர்களை இந்த வரலாற்றுப்பூர்வமான உலக வளர்ச்சிப் போக்குகள் ஈர்த்தன; அவர்களோடு ஏற்கெனவே தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் சோசலிஸ்டுகள் என்றும் அறிவித்து கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும் இதர இடதுசாரி கட்சியினரும் தங்களது செயல்பாடுகளை மேலும் மேலும் விரிவுபடுத்துவதற்கு உத்வேகமளித்தன. இந்த நிலையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உருவாக்கம், விரக்தியின் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ்காரர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிப்பதற்குமான அமைப்பாக வடிவம் பெற்றது. அவர்களை காங்கிரசுக்கு வெளியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடனும் இதர இடதுசாரி சக்திகளுடனும் இணைந்து ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அதன் முத்தாய்ப்பாக ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாவதற்கும் உதவியது.
 

 

;