tamilnadu

img

தோழர் ஏ.அப்துல் வஹாப் ஒரு மகத்தான கம்யூனிஸ்ட் - என்.ராமகிருஷ்ணன்

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப்,  1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று மதுரை மாவட்டம் கம்பத்தில் பிறந்தார். அவர் ஆக்கூர் மீரா லெப்பை சாயபு - பாத்திமா தம்பதியரின் கடைசி புதல்வராவார். மீரா லெப்பை சாயபு 1896 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு வந்த சமயத்தில் கல் காண்ட்ராக்ட் எடுத்திருந்தார். பின்னர் அவர் தோல் வியாபாரம், கல் உடைக்கும் காண்டிராக்ட் போன்றவற்றைச் செய்து வந்தார். சிறிது காலம் கழித்து அவர் தனது நஞ்சை நிலத்தை விற்றுவிட்டு திருவிதாங்கூர் மலைக்குச் சென்று ஏலக்காய் பயிரிடலானார். பெரும் செல்வந்தரானார். அப்துல் வஹாப் ஆரம்பப்படிப்பை கம்பத்தில் முடித்து உத்தமபாளையம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். தினமும் கம்பத்திலிருந்து உத்தமபாளையத்திற்கு சைக்கிளில் சென்று படித்து திரும்புவார்.  அவர் பள்ளியில் படித்து வந்த காலகட்ட மானது சுதந்திரப் போராட்ட இயக்கம் முழுவீச்சில் இருந்த காலகட்டமாகும். 

பள்ளிப் பருவத்திலேயே...

வஹாப் 9ஆவது வகுப்பில் படிக்கும் போது,  அவரது பள்ளியில் மாணவர் சங்கம் துவங்கப் பட்டது. எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில் படித்து வந்த  ஜமால்மொகைதீன் என்ற மாணவர்தான் இந்த  சங்கத்தை அமைப்பதில் முன்னின்றார். மாணவர் களிடையே ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக் கெதிராக தொடர்ந்து அவர் பிரச்சாரம் செய்தார். ஆங்கிலேய அரசாங்கத்திற்கெதிராக ஒரு வேலை நிறுத்தத்தை அவர் உருவாக்கினார். அதில் அப்துல் வஹாப்பும் பங்கேற்றார். இதுதான் அப்துல் வஹாப் பங்கெடுத்த முதல் அரசியல் போராட்டம்.  சிறிது காலம் கழித்து உத்தமபாளையம் மாணவர் சங்கம் துவக்கப்பட்டது. மதுரை மாண வர் சங்கத்தலைவர் என்.சங்கரய்யா இதன் துவக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். பொதுமக்களுடன் ஏராளமான மாணவர்களும் இந்தவிழாவில் பங்கேற்றனர்.

சங்கரய்யா தனது உரையில் இரண்டாவது உலக யுத்தம், பாசிச அபாயம் உலகைச் சூழ்ந்து  வருவது, இட்லரின் படைகளை எதிர்த்து சோவியத் செஞ்சேனையும், அந்நாட்டுமக்களும் தீரத்துடன் போராடி வருவது, போரில் ஏற்பட்ட திருப்பம், மக்கள் யுத்தம், இந்தியத் தொழிலாளிகள் மற்றும் மாணவர் சமூகத்தின் முன்புள்ள கடமைகள் போன்றவை குறித்து விளக்கினார். அவரு டைய ஆவேச உரையானது அப்துல் வஹாபை மிகவும் ஈர்த்தது. மாணவர் சங்க செயல்பாடு களில் தீவிரமாகப் பங்கேற்கலானார்.  

அமெரிக்கன் கல்லூரியில்...

1943ஆம் ஆண்டில் நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வில் அப்துல் வஹாப் வெற்றி பெற்றார். இண்டர்மீடியட்  படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தார்.   அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டே  அப்துல் வஹாப் மாணவர் சங்க வேலைகளை யும் செய்து வரலானார்.

அந்த ஆண்டில் சோவியத் நட்புறவு சங்கத்தின் சார்பில் சோவியத், வங்க கண்காட்சி மதுரையில் நடைபெற்றது. அந்தக் கண்காட்சியை காண வரும் மக்களுக்கு அவற்றை விளக்கிச் சொல்லும் வழிகாட்டிகளாக இளம் தோழர்கள் பலர் பணி யாற்றினர். அப்துல் வஹாப்பும் அவர்களில் ஒருவர். இதே காலகட்டத்தில் அப்துல் வஹாப், எஸ். முகமதலி, வி.முத்தையா ஆகிய மூன்று மாணவர் களைக் கொண்ட கம்யூனிஸ்டுக் கட்சிக் கிளை அமெரிக்கன் கல்லூரியில் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே கட்சி உறுப்பினர்களாக இருந்தவர் களுடன் இம்மூவரும் சேர்ந்து செயல்படலாயினர். அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் சங்கத்தை உருவாக்குவதில் அப்துல் வஹாப் தீவிரமாக  இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், 1945ஆம் ஆண்டில் அவரை ‘செல க்ஷன்’ என்னும் வடிகட்டும் முறை மூலம் இண்டர் மீடியட் தேர்வு எழுத முடியாதபடிசெய்துவிட்டது. 

விமானப்படை பயிற்சி முகாமில்...

வஹாப் தேர்வு பெறவில்லையென்றால் அவரை மலையில் உள்ள தோட்டத்திற்கு அனுப்பி விடப் போவதாக தந்தையார் மிரட்டியது அவர் நினைவிற்கு வந்தது. எனவே, திருச்சியில் உள்ள விமானப்படை ஆள் சேர்ப்பு மையத்திற்குச் சென் றார். அங்கே தேர்வு பெற்று பெங்களூரில் உள்ள விமானப்படை பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு வஹாபிற்கு விமானப்படை பயிற்சி முகாம் வெறுத்துப் போனது. அங்கிருந்து வெளியேற விரும்பினார். எனவே இதன் பொருட்டு மாதத் தேர்வில் வேண்டு மென்றே தவறான  விடைகளை எழுதினார். பல முறை இவ்வாறு செய்து அதிலிருந்து விடுதலை பெற்றார். அவர் வெளியே வந்ததும் அவரது  அண்ணன் அங்கே காத்திருப்பதைக் கண்டு வஹாப் ஆச்சரியமடைந்தார். பின்னர் இருவரும் வீட்டிற்குத் திரும்பினர். 

அப்பொழுது கடுமையான உணவுத் தட்டுப்பாடு. அனைத்துமே ரேஷன்தான். எனவே  ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு, மண்ணெண்ணெய், விறகு கூப்பன் பெற்றுத் தருவதில் இதர கட்சி அனுதாபிகளுடன் சேர்ந்து  வஹாபும் ஈடுபட்டார். பின்னர், வஹாப் திருச்சி க்குச் சென்று தனிப்பயிற்சி கல்லூரியில் படித்தார். அங்கேயும் மாணவர் சங்க வேலைகளில் ஈடுபட்டார். வஹாப் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் மாணவர்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரியாகச் சென்று கட்சியின் மக்கள் யுத்த கோட்பாட்டை மாணவர்களுக்கு விளக்கினர். 

ஜனசக்தி பிரசுராலயத்தில்...

1946 ஆம் ஆண்டில் இண்டர் மீடியட் தேர்வு எழுதியதும் வஹாப் வீட்டிற்குத் திரும்பி னார். அவருடைய தந்தையாரோ மகனை கட்சிப் பணியிலிருந்து விலகச் செய்யவேண்டுமெ ன்பதற்காக மலைத் தோட்டத்திற்கு அனுப்ப முடி வெடுத்தார். எனவே சிறிதுகாலம் வஹாப் தோட்ட வேலைகளை கவனித்தார்.

அச்சமயத்தில் சென்னையிலுள்ள கட்சி அலு வலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘ஜனசக்தி’ யில் பணியாற்ற அவர் வரவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. வஹாப் மிகுந்த மகிழ்ச்சி யடைந்து யாருக்கும் தெரிவிக்காமல் சென்னை க்குச் சென்றார். அங்கிருந்த சர்மா உள்ளிட்ட தோழர்கள் அவரை வரவேற்றனர். ஜனசக்தி பிரசு ராலயத்தில் வரவு - செலவைக் கவனிக்கும் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டது. கட்சித்தலை வர்கள் அனைவருடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அப்பொழுது சிறுவனாக யிருந்த ஜெயகாந்தன் அங்கே புத்தகம் கட்டும் வேலையைச் செய்து வந்தார்.      1948ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கம்யூனிஸ்ட்  கட்சி தடைசெய்யப்பட்டது. ஜனசக்தி பிரசுரால யம் மூடப்படும் நிலமை ஏற்பட்டது. எனவே கட்சித் தலைமை முடிவுப்படி வஹாப் பொன்மலை ரயில்வே தொழிலாளர் சங்கத்திற்கு வந்தார். திருச்சியில் பலதலைவர்கள் கைது செய்யப்  பட்டு சிறையில் இருந்தனர். பலர் தலைமறை வாக இருந்தார்கள். எனவே சங்கத்தின் பொறுப்பு முழுவதும் வஹாப் மீது விழுந்தது. சங்கத்தின் சார்பில் ‘தொழிலரசு’ பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.

தலைமறைவாக...

1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி முதல் ரயில்வே வேலை நிறுத்தம் துவங்க விருந்தது. எனவே பொன்மலை சங்க வளாகம் சோதனைக்குள்ளாயிற்று. வஹாப்பை காவல் துறையினர் தேட ஆரம்பித்தனர். ஆனால் அவர் தொழிலாளி  போல இருந்ததால் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒருநாள் காவல் துறை யினர் அவர் தங்கியிருந்த இடத்தை நோக்கி வர வும், வஹாப் அங்கிருந்து தப்பினார். பின்னர் அவர் திருச்சியில் பல மாதம் தலைமறைவாக யிருந்து கட்சிப் பணிகள் செய்தார். பலமுறை நூலிழையில் அவர் காவல் துறையினரிடமிருந்து தப்பினார்.  பின்னர், கட்சித்தலைமை முடிவுப்படி தஞ்சா வூர் சென்றார். அங்கிருந்து சென்னைக்குச் சென்றார். சென்னையில் தலைமறைவாகயிருந்த ஏ.பாலசுப்ரமணியத்துடன் தங்கினார்.

தேயிலைத் தோட்டத்திலே...

1951 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அனை வரும் வெளிவந்தனர். பின்னர் வஹாப் கேட்டுக் கொண்டபடி கட்சித் தலைமை அவரை தேவி குளம் - பீர்மேடு பகுதியில் தோட்டத் தொழிலாளரி டையே வேலை செய்து சங்கத்தை உருவாக்க அங்கே அனுப்பிவைத்தது. அவர் அங்கே சென்று லெட்சுமி கோவில் தேயிலை எஸ்டேட், லட்சுமி எஸ்டேட், கிளன்மேரி எஸ்டேட், பசுமலை எஸ்டேட் போன்ற இடங்களில் தோட்டத் தொழி லாளரைத் திரட்டி போராட்டங்களை உருவாக்கி னார். சங்கத்தை உருவாக்கினார். இந்தப் போராட்டங்கள் குறித்து ஒரு அறிக்கை எழுதி வஹாப் அதை கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம் கொடுத்தார். அது “தேயிலைத் தோட்டத்திலே” என்ற தலைப்பில் வஹாப்பின் புனைப்பெயரான ‘சாமி’ என்ற பெயரில் வெளிவந்தது.

1952 ஆம் ஆண்டில் அவர் மீதிருந்த வழக் கிற்காக வஹாப் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அந்த வழக்கை ராஜாஜி அரசாங்கம் வாபஸ் வாங்கியது.  

பெரியகுளம் வட்டச்செயலாளர்

அவ்வாண்டின் இறுதியில் வஹாப் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் வட்டச் செய லாளராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்த  அந்த வட்டம் முழுவதும் கட்சிக்கிளைகளை உரு வாக்கும் பணியில் அவர் முழுவீச்சுடன் இறங்கி னார். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பின்னர் மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வஹாப்பிற்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆயிஷா பீபிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆயி ஷாவின் குடும்பமும் கம்யூனிஸ்ட் கட்சிக் குடும்ப மாகும். திருமணத்திற்குப் பின்  குடும்பப் பொறுப்பு  முழுவதையும் ஆயிஷா கவனித்துக்கொண்டார்.  கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நீண்ட காலமாக இருந்து வந்த தத்துவார்த்த மாறுபாடு 1964 ஆம்  ஆண்டில் வெடித்தது. அவ்வாண்டில் கட்சியின் தமிழ்நாடு கவுன்சில் கூட்டம் கும்பகோணத்தில் நடந்த பொழுது அதிலிருந்து 31 மாகாண கவுன்சில் உறுப்பினர்கள் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அப்துல் வஹா பும் அந்த 31 பேரில் ஒருவராவார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பெரியகுளம் வட்டச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கடலூர் சிறையில்...

1964ஆம் ஆண்டின் இறுதியில் வஹாப் உள்ளிட்டு நூறுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தலை வர்கள் தமிழகத்தில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 16 மாதகாலத்திற்குப் பின்னர் தான் அனைவரும் விடுதலையாயினர்.  விடுதலையான பின் வஹாப் மீண்டும் தன் பணியைத் துவக்கினார். பல போராட்டங் களுக்குத் தலைமை தாங்கினார். கேரள மாநிலக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க வஹாப் 1970 ஆம் ஆண்டில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கட்சிப்பணிக்காக அனுப்பி வைக்கப் பட்டார். சில ஆண்டுகளுக்குப்பிறகு தமிழகத் திற்குத் திரும்பிவந்தார். 1975ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரானார்.

தீக்கதிர் பொதுமேலாளராக...

1974ஆம் ஆண்டின் இறுதியில் வஹாப், ‘தீக்கதிர் ’ நாளேட்டின் பொது மேலாளராக நிய மிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டுவரை அப்பொறுப் பில் இருந்தார். இந்த சமயத்தில் பல வருட காலம் அவர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ராகவும் செயல்பட்டார். 1988ஆம் ஆண்டில் கட்சியின் தூதுக்குழு உறுப்பினராக சோவியத் நாட்டிற்குச் சென்று வந்தார். 

2001 க்குப்பின் சில காலம் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச்செயற்குழு உறுப்பினராகவும் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கட்சி வகுப்புக்காக நான் கம்பம் சென்றபோது தோழர் அப்துல் வஹாப் அவர்களை கடைசி முறையாகக் கண்டு நலம் விசாரித்தேன்.     அப்துல் வஹாப் - ஆயிஷா தம்பதியினருக்கு மூன்று புதல்விகளும் ஒரு புதல்வரும் உண்டு. அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.








 

;