tamilnadu

img

காங்கிரசுக்கு எதிராக  சிபிஐ, வருமான வரித்துறை!

புதுதில்லி:
மக்களவைத் தேர்தல் தோல்வியால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை, அனைவரும் துவண்டு போயிருக்கும் நிலையில், காங்கிரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அமைப்புக்களும் ஏவி விடப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலின்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் 11 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு மட்டும் சுமார் ரூ. 20 கோடி தொகை வழங்கப்பட்டதாகவும் ஏற்கெனவே, தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.தற்போது அந்த அறிக்கைகளும், ஆவணங்களும் சிபிஐ விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்துக்கு தொடர்புடைய ஐந்து முக்கிய நபர்களின் இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, வாட்சப் உரையாடல்கள், தொலைபேசி அழைப்பு பதிவுகள் வாயிலாக வேட்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதை வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, முன்னாள் முதல்வரும், போபால் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான திக்விஜய் சிங் பணம் பெற்றுள்ளதாக லலித் குமார் சல்லானி என்பவரின் கணினியிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ளது. கமல்நாத்தின் முன்னாள் உதவியாளர்களான ஆர்.கே. மில்கானி, பிரவீன் கக்கர் ஆகியோரிடம் கணக்காளராக பணிபுரிந்தவர்தான் லலித் குமார் சல்லானி என்றும் கூறப்பட்டுள்ளது.

லலித் குமார் மூலமாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் ரூ. 25 கோடி முதல் 50 கோடி வரை பெற்றதற்கும், திக்விஜய சிங் மட்டும் ரூ. 90 லட்சம் பெற்றதற்கும் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.எனினும், வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிக்கைகள் ஜூன் இறுதியில்தான் வெளிவரும் என்பதால் அதன்பிறகே நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.

;