tamilnadu

img

பாஜகவின் பொய்ப்பிரச்சாரம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பொய்க் குற்றச்சாட்டைக் கூறுவதற்காக, பாஜக உண்மைகளை திரித்துக் கூறிக்கொண்டிருக்கிறது.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாஜக,  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பதற்கு சமாதானம் சொல்லமுடியாத நிலையில் அதனை நியாயப்படுத்துவதற்காக இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், கம்யூனிஸ்ட்டுகள் மீதும் குறை சொல்லத் துவங்கியுள்ளது. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (பின்னர் வங்கதேசம் என்று மாறிவிட்டது) வந்த வங்க அகதிகளுக்கு குடியுரிமை அளித்திட வேண்டும் என்று இவர்கள்தான் கேட்டார்கள் என்று பொய்களைக் கூறிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தி வங்க அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ் காரத், 2012 மே 22 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டியிருக்கிறது.வங்க தேசத்திலிருந்து வந்த சிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை காணவேண்டும் என்று முன்பு கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது அதே வங்க அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காக, திருத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துக் கொண்டிருப்பதாக பாஜக அதன் செய்தித் தொடர்பாளர்கள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் கூறிக்கொண்டிருக்கின்றது.

உண்மை என்ன?
முதலாவதாக, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (பின்னர் வங்க தேசமாக மாறிவிட்டது) வந்த வங்க சிறுபான்மை அகதிகளுக்கு குடியுரிமை அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே விரும்பி வந்திருக்கிறது. ஆனால், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டமானது, புலம்பெயர்ந்து வந்துள்ள முஸ்லீம்களை ஒதுக்கி வைத்துவிட்டு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை அளிக்க வகை செய்கிறது. குடியுரிமை வழங்குவதற்கான பரிசீலனையின்போது, புலம்பெயர்ந்து வந்த முஸ்லீம்களை ஒதுக்கிவைத்துவிட வேண்டும் என்று எந்தச் சமயத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியதில்லை. எனவேதான், தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கட்சி கடுமையாக எதிர்த்திருக்கிறது.இரண்டாவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2012 ஏப்ரலில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் ‘வங்க அகதிகள் உரிமைகளுக்காக’ நிறைவேற்றிய தீர்மானத்தில், இதனை மேலும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இத்தீர்மானத்தில், வங்க தேசத்திலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை அளித்திடப் பரிசீலிக்கும்போது, அசாம்ஒப்பந்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. இதன் பொருள், அசாம் ஒப்பந்தத்தின்படி கெடு தேதி (cut off date), 1971 மார்ச் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறது. இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டம் அசாமுக்கான இந்தக் கெடு தேதி வரையறையை மீறியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவினை ஏன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது என்பதற்கு இது மற்றுமொரு காரணமாகும்.

நாடாளுமன்றத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவிற்கு எதிராக மூன்று திருத்தங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இரண்டு திருத்தங்கள், சிறுபான்மையினருக்கான மத வகைப்படுத்தலை நீக்க வேண்டும் என்பது குறித்ததாகும். அண்டை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அனைவரும், அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும்,  குடியுரிமைக்குப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதாகும். எடுத்துக்காட்டாக, இதன் மூலம் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளும் இத்திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைப் பெற முடியும். மூன்றாவது திருத்தம், இந்தச் சட்டமுன்வடிவின் வரம்பிலிருந்து அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு விலக்கு அளித்திட வேண்டும் என்பதாகும்.  இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(ந.நி.)

;