tamilnadu

img

பிரதமர் தொகுதியில் பசிக் கொடுமை: செய்தி வெளியிட்ட ஆசிரியர் மீது வழக்கு

புதுதில்லி:
பிரதமர் மோடியின் தொகுதியில் சமூக முடக்கக் காலத்தில் மக்களின் பசி-பட்டினிக் கொடுமைகள் குறித்துஎழுதியமைக்காக, ஸ்குரோல்.இன் இணைய இதழ்ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு, தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் (DUJ) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் எஸ்.கே. பாந்தே, பொதுச் செயலாளர் சுஜாதா மதோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சுற்றி உள்ளகிராமங்களில் சமூக முடக்கக் காலத்தில் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைகள் குறித்து ஒரு செய்தி பதிவு செய்தமைக்காக, ஸ்குரோல் எக்சிகியூடிவ் எடிட்டர் சுப்ரியா சர்மாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருப்பது கண்டு அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்கிறது.இதழாளர் மீது குற்றச்சாட்டு வனைவதற்காக, தலித்/பழங்குடியினர் (அட்டூழியங்கள் தடைச்) சட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. முதல் தகவல் அறிக்கையில், நேர்காணலின்போது பேட்டியளித்த ஒரு பெண்மணி கூறியதாக தவறாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர், இதழாளரிடம் வேலையில்லாததால், தானும், தன் குடும்பமும் பட்டினிகிடப்பதாகக் கூறவில்லை என்றும், இவ்வாறு இதழில் வந்திருக்கும் கதை, தன்னைப் போன்ற தலித்துகளைக் களங்கப்படுத்துவதற்கான முயற்சி என்று கூறியதாகவும் இருக்கிறது.

இதழாளர் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் 501(அவதூறு புரிந்ததாக) மற்றும் 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவும்விதத்தில் அலட்சியமாக நடந்துகொண்டதாக) ஆகிய பிரிவுகளின்கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.ஸ்குரோல் இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தாங்கள் பதிவு செய்த விவரத்துடன் நிற்பதாகக் கூறியிருக்கிறது. 2014-15இல் நிகரற்ற பெண் இதழாளர் என்பதற்கான சாமெலி தேவி ஜெயின் விருது (Chameli Devi Jain Award) வென்றவர் என்கிற சுப்ரியா சர்மாவின் இதழியல் வரலாறும் அவர் குறித்து நன்கு பேசுகிறது.

மிரட்டிப் பணிய வைக்க...
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக் காலத்தில், தங்களுடைய வேலையை வீரத்துடன் செய்துகொண்டிருக்கும், இதழாளர்களை மிரட்டிப் பணியவைக்கும் விதத்தில் முதல் தகவல்அறிக்கைகளைப் பயன்படுத்துவதை தில்லி பத்திரிகையாளர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. இதழாளர்கள் தங்கள் சொந்த நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் அளவிற்குமீறிய ஆபத்து உள்ள நிலையிலும் தளத்தில் நின்று செய்திகள் சேகரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய செய்திகள்மீது நடவடிக்கை எடுத்து, மக்கள் துன்ப துயரங்களைக் களைந்திட வேண்டும் என்றே அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம். மாறாக அவ்வாறு செய்திகள் அனுப்பியவர்களைக் குறிவைத்துத் தாக்கக் கூடாது.

அதிகாரத்திலிருப்பவர்கள், இதழாளர்களை உண்மையைப் பேசுவதற்காகப் பழிவாங்கும் போக்கு அதிகரித்துக்கொண்டிருப்பது, திகைப்பூட்டும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.உரிமைகள் மற்றும் இடர்கள் பகுப்பாய்வுக் குழு (The Rights and Risks Analysis Group), கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக சரியானமுறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியமைக்காக,  பல்வேறு மாநிலங்களில், மார்ச் 25க்கும் மே 31க்கும் இடையே, 55 இதழாளர்கள் மீது, வழக்குகள் மூலமாகத் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள், அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள்  என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஊடக சுதந்திரம் மற்றும்ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம் என்று சங்கம் கூறியுள்ளது.  

(ந.நி.)

;