tamilnadu

img

தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் தேசவிரோதப் பிரிவு

புதுதில்லி:
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2017-ஆம் ஆண்டுக்கான குற்றப்பதிவு ஆவணத்தில், தேசவிரோதக் குற்றம் புரிந்தவர்கள் என்ற புதிய பிரிவு இடம்பெற்றிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருட்டு போன்ற சாதாரண குற்றங்களை தேசவிரோதம் என்ற வரையறைக்குள் கொண்டு சென்று தனிப் பிரிவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பிரிவில் வடகிழக்கு மாநிலங்களில் போராடும் அமைப்பினர், இடதுசாரி அறிவுஜீவிகளே குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் நிகழும் குற்றங்களை, அதன் தன்மைக்கேற்ப, பிரித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு நிகழ்ந்த குற்றங்களுக்கான குற்றப்பதிவு ஆவணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. 

இதில்தான், தேச விரோத குற்றங்கள் புரிந்தவர்கள் என்ற பிரிவு புதிதாக இடம்பெற்றுள்ளது. இதில், வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் மீது பதியப்பட்ட குற்றங்கள் என ஒரு பிரிவும், நக்சல்கள் அல்லது இடதுசாரி தீவிரவாதிகள் மீது பதியப்பட்ட குற்றங்கள் என ஒரு பிரிவும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்ட 421 வழக்குகளில், 54 வழக்குகள் திருட்டு, கொலை போன்ற வழக்கமான குற்றச்சாட்டுக்களே வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தேசவிரோதப் பிரிவில் இடம்பெற்றுள்ள 75 சதவிகிதம் வழக்குகள், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வர வேண்டிய வழக்குகள் என்று கூறப்படுகிறது.இதேபோல, நக்சலைட்டுகள் பெயரில் பதியப்பட்டுள்ள 652 வழக்குகளிலும், 60 சதவிகிதம் வழக்குகள், வழக்கமான குற்றங்களே. மேலும், தீவிரவாதிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களில் 62 சதவிகிதம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வர வேண்டியவை. அந்த வகையில் குற்றப்பதிவு ஆவண அறிக்கையில், தேச விரோத குற்றங்கள் என்ற பிரிவுக்கான தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே அப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் பின்னணியில் இடதுசாரி அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மையினரை பழிவாங்கும் நோக்கம் மட்டுமே வெளிப்படுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

;