tamilnadu

img

300 அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ய முடிவு..

புதுதில்லி:
பாஜக கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு தில்லி மாநகராட்சியில், கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், சுமார் 300 அரசு மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, வடக்கு தில்லியின் கஸ்தூரிபாய் மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 100 மருத்துவர்கள் மற்றும் இந்துராவ் மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 200 மருத்துவர்கள், உறைவிட மருத்துவர்கள் சங்கத்தின்  (ஆர்.டி.ஏ) (Resident Doctors Association – RDA) பெயரில் இரண்டு தனித்தனி கடிதங்களை புதன்கிழமையன்று அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.அதில், கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இன்னும் ஒரு வாரத்திற்குள் சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், தாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய முடியாது. முன்னணி களப் பணியாளர்களாக  இருப்பதால், நிலுவையில் உள்ள எங்களது சம்பளத்தை விரைவில் வழங்கவேண்டும், மேலும் எங்களுக்கு வழக்கமான ஊதியம் சரியான நேரத்தில் வழங்குவதை  உறுதி செய்ய வேண்டும்” என்று கஸ்தூரி பாய் மருத்துவமனையைச் சேர்ந்த உறைவிட மருத்துவர்கள் சங்க மருத்துவர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.  “2020 ஜூன் 16 ஆம் தேதிக்குள் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படாவிட்டால், நாங்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவர்கள் தங்களுக்கான சம்பளம் வழங்கப்பட வில்லை என்று மே மாதமும் குரல் கொடுத்தனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினர். ஆனாலும், சம்பளம் வழங்கப்படாததால், மருத்துவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முதல் முறையாக, “கூட்டு ராஜினாமா” என்ற முடிவை எடுத்துள்ளனர். 

இந்துராவ் மருத்துவமனை மருத்துவர்களும் இதே போன்று,  “சம்பளம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் அன்றாடசெலவுகளைக் கூட சமாளிக்க முடியாமல் சிரமப்படுகிறோம்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.மருத்துவர்கள் ‘உதவியற்றவர்களாக’ இருப்பதால்,  ‘ஊதியம் இல்லாமல், வேலை இல்லை’ என்ற முழக்கத்தை ஒருமனதாக தேர்ந்தெடுத்திருப்பதாகவும், 18 ஜூன் 2020-க்குள் நிலுவையில் உள்ள சம்பளத்தை நிர்வாகம் வழங்காவிட்டால் “கூட்டு ராஜினாமா” செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்துள்ளனர்.ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி தங்களுக்கு சம்பளம் வழங்கப்படும்; கடைசியாக பிப்ரவரி 15 அன்று தங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது; அதன்பின், கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று இந்துராவ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் அபிமன்யு சர்தானா, ‘ஹப் போஸ்ட் இந்தியா’-வுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.“மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசியபோது, மருத்துவ மனைகளுக்கு அரசு நிதி வழங்காததால், மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்க மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும்” என்று தெரிவிப்பதாகவும், “மருத்துவர்களுக்கு மட்டுமல்லாது மருத்துவமனையில் உள்ள பிற சுகாதாரப் பணியாளர்களுக்கும் கூட அவர்களின் சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை” என்றும் சர்தானா கூறியுள்ளார்.கஸ்தூரிபாய் மற்றும் இந்துராவ் ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ளவை ஆகும். இவ்வாறு பாஜக வென்ற மாநகராட்சிகளில், சுகாதாரத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பது தொடர் பிரச்சனையாகவே உள்ளது.2018-ஆம் ஆண்டு, கிழக்கு தில்லி மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாத காரணத்தால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் தெருக்களில் இருந்து குப்பைகளை எடுக்க மறுத்துவிட்டனர். இதனால் பல வாரங்களாக குப்பை மலைபோல் குவிந்தது. அப்போது, தில்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு தற்காலிக தீர்வு வழங்கியது. 

ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்திலும், தங்களுக்கு மார்ச் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று துப்புரவுத் தொழிலாளர்கள் மீண்டும் புகார் கூறினர். இந்த புகாரில் தற்போது மருத்துவர்
களும் இணைந்துள்ளனர்.தற்போது ராஜினாமா முடிவை எடுத்துள்ள 300 மருத்துவர்களும் கொரோனா மற்றும் பிற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருபவர்கள் ஆவார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மருத்துவ நிபுணர்களும் இதில் அடங்கியுள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.

;