பொருளாதார அறிஞர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா அதிர்ச்சித் தகவல்
சென்னை, மே 29- கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் ஒரே மாதத்தில் 12 கோடிப் பேர் வேலையிழந்துள்ளனர் என பொருளாதார அறிஞர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வேலையின்மை நமது நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2017-18 காலத்தில் வேலையின்மை விகிதம், 2011-12 காலத்துடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்காக அதிகரித்தது என்று மைய அரசின் புள்ளியியல் ஆணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை 20% ஐ நெருங்கியும் இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் பின்பற்றப்படும் தாராளமய கொள்கைகள் வேலைவாய்ப்பை பெருக்கவில்லை. 2016 நவம்பரில் மோடி அமலாக்கிய பணமதிப்புநீக்கம் நடவடிக்கையும் 2017இல் மைய அரசு அவசர கோலமாகவும் குழப்பம் நிறைந்த முறையிலும் தீட்டி அமலாக்கிய ஜி எஸ் டி யும் பொரு ளாதாரத்தை, அதிலும் அதிகமாக, முறை சாரா துறைகளை சீரழித்துவிட்டன. வேலையின்மை அதிகரித்த தற்கு இக்கொள்கைகள் முதன்மையான காரணம். நமது நாட்டில் கூலி வேலை செய்பவர்கள் மொத்த உழைப்புப் படையில் சுமார் 50% பேர் தான். மீதம் 50% பெரும்பாலும் சிறு குறு உற்பத்தியாளர்கள் (விவசாயிகள், தொழில்செய்வோர்) மற்றும் சிறுகுறு வணிகர்கள் ஆவர். இன்று இப்பகுதியினரில் கணிசமானவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மைய அரசின் தவறான கொள்கைகளால் பொருட்களுக்கான கிராக்கி பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் வேலை இழந்துள்ளனர்; அல்லது தொழில் தொடர இயலாநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா நம்மை தாக்கும் முன்பே இதுதான் நிலைமை. கொரோனாவிற்குப்பின் ஊரடங்கு தொடரும் நிலையில் பிரச்சனை மேலும் மோசமாகியுள்ளது. 14கோடிப்பேர் என்று மதிப்பிடப்படும் புலம் பெயர் தொழிலாளிகள், முறை சாராதுறைகளில் வேலை மற்றும் சுயதொழிலை இழந்தவர்கள் ஆகியோர் மட்டுமல்ல, ஆலைகளிலும் அலுவலகங்களிலும் முறைசார் பணிகளில் இருந்தவர்களிலும் பெருமளவினர் வேலை இழந்துள்ளனர்.
மைய அரசின் நிவாரணத் தொகைகள் மிக சொற்பம். ஏப்ரல் மாதம் மட்டும் 12 கோடி நபர்கள் வேலையிழந்துள்ளனர் என்று சிஎம்ஐஇ என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. நிதி அமைச்சர் 40,000 கோடி ரூபாய் கூடுதலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (ரேகா) திட்டத்திற்கு செலவு செய்வோம் என்பதை தவிர வேறு திட்டம் எதையும் முன்வைக்கவில்லை. ரேகா திட்டத்திற்கு மேலும் 1 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படவேண்டும். ஊர் திரும்பும் அனைத்து புலம் பெயர் தொழிலாளிகளுக்கும் தலா 100 நாட்கள் வேலை தரப்படவேண்டும். ஊரக குடும்பம் ஒவ்வொன்றிற்கும் 100 நாள் என்பதை அக்குடும்பத்தில் வேலை செய்ய முன்வரும் ஒவ்வொருவருக்கும் 100 நாள் என்றாக்க வேண்டும். பணிகளின் தன்மை விரிவுசெய்யப்பட்டு, கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு துறைகளில் ரேகா தொழிலாளி களுக்கு பணியளித்து பயன்படுத்தலாம். பேரூராட்சிகள் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் துவக்கி, அதில் சிறுகுறு தொழில்நிறுவனங்களில் பணிகொடுத்து ஊதியமும் அரசே கொடுக்கும் ஏற்பாட்டை செய்யலாம். இது (சிறுகுறு) விவசாயிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் பொருளாதார மீட்சி பெற உதவும்.
பொதுத்துறை சொத்துக்களை அடிமாட்டுவிலைக்கு விற்பதற்கு பதில் கணிசமான முதலீடுகளை நவீன பெரும் தொழில்களிலும், நகர, ஊரக மற்றும் வேளாண்சார் கட்டமைப்புப் பணிகளிலும் அரசு மேற்கொள்ளவெண்டும். இதற்கான வளங்களை பெரும் செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை கறாறாக வசூல் செய்தும், தேவைக்கு ஏற்றவாறு கடன் வாங்கியும் திரட்ட முடியும். தொடர்ந்து பொதுத்துறையை வலுப்படுத்துதல், முழுமையான நிலச் சீர்திருத்தம், சுய சார்பு, கல்வி, ஆரோக்கியம் மற்றும் மக்கள்சார் கட்டமைப்பு ஆகியவற்றில் கூடுதல் அரசு முதலீடுகள், இதற்காக பெரும் கம்பெனிகள் மற்றும் உயர் வருமானம் பெறுவோர் மீதான வரிகள் மூலம் வரி வருமானம் திரட்டுதல், என்ற பாதையில் பயணித்தால் வேலை வாய்ப்பையும் பெருக்க முடியும், நாட்டையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.